உரிமைத்தொகை: ``என் வீல்சேரை, நான்கு சக்கர வாகனம்னு சொல்லி விண்ணப்பத்தை நிராகரிச்சுட்டாங்க!’’

கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணின் 4 வீலர் மோட்டார் சைக்கிளை, நான்கு சக்கர வாகனம் எனக் குறிப்பிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்க மறுக்கப்பட்ட சம்பவம் சிவகங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதிலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தகுதியான பலர் நிராகரிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்கள், தாசில்தார் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

சுபாஜா

இந்த நிலையில் சிவகங்கையில் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சுபஜா. இரு கால்களை இழந்த மாற்றுத்திறனாளியான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார்.

மாற்றுத்திறனாளி தேசிய வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனையான இவர், சிவகங்கை தாசில்தார் அலுவலக வாயிலில் அமர்ந்து, அங்கு வரும் மக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து அதில் வரும் வருவாய் மூலம் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

தமிழ்நாடு அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு உரிமைத்தொகை வரவில்லை.

நிராகரிக்கப்பட்ட தனது விண்ணப்பத்தின் நிலையை தாசில்தார் அலுவலக தகவல் மையத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது, அவருக்கு சொந்தமாக நான்கு சக்கர மோட்டார் வாகனம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதால், அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உரிமைத் தொகை

கால் இல்லாத தன் நிலை குறித்தும், கஷ்டப்படும் தனக்கு நான்கு சக்கர வாகனம் ஏதுமில்லை, எப்படி தவறாக குறிப்பிட்டார்கள், தனக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுபஜா கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுபஜா, "மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 4 சக்கர மோட்டார் சைக்கிள் பெற்றுள்ளேன். ஆனால், என் வீல்சேரை நான்கு சக்கர வாகனமென்று குறிப்பிட்டு, என் பெயரில் கார் இருப்பதால் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதை மாவட்ட நிர்வாகம் சரி செய்து எனக்கு உரிமைத் தொகை கிடைக்க உதவ வேண்டும்" என்றார்.

இது போன்ற பல குளறுபடிகள் மகளிர் உரிமை திட்ட நடைமுறையில் இருப்பது பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



from Latest news https://ift.tt/RMgm9l6

Post a Comment

0 Comments