இன்று மதுரைக்கு வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்குச் செல்ல விடாமல் காவல்துறை மூன்று ஆண்டுகளாக இடையூறு செய்து வருகிறது.
மதுரையிலிருந்து பரமக்குடி வரை இடையிடையே என் வாகனம் தடுத்து நிறுத்தப்படுகிறது. இடையூறு இல்லாமல் அஞ்சலி செலுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மது விற்பனையை வைத்துதான் தமிழக அரசு இயங்கி வரும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பூரண மதுவிலக்கு என்பதுதான் அரசின் லட்சியம் என தி.மு.க கூறியது, ஆனால் அறிவிப்புக்கு மாறாக தமிழக அரசு பட்டித்தொட்டியெல்லாம் டாஸ்மாக் கடைகளை தொடங்கி வருகிறது. மது விற்பனையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பார்களைத் திறக்க தமிழக அரசு முயன்று வருகிறது.
தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சனாதனத்தைப் பற்றி பேசி வருகின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு அகில இந்திய அளவில் பிரச்னையாக மாறி உள்ளது. சனாதனம் என்னவென்று தெரியாத நிலையில், உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
அரசியல் சாசனத்தின்படி அனைவரும் சமம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்து மதத்தின் ஆன்மாவாக சனாதனம் உள்ளது. சனாதனம் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட கோட்பாடு. உலகத்தில் இந்து மதம்போல வேறு எந்த மதமும் கிடையாது.
இந்து மதத்தில் சுயக்கட்டுப்பாடு ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது சனாதனம். சனாதனத்தை ஏற்றுக் கொண்டதால்தான் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பதவிகள் வகிக்க முடிந்தது. உதயநிதி கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கூறிய விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்துவாக இருந்து கொண்டே அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தவறாகப் பேசி உள்ளனர். சனாதனம் குறித்து திட்டமிட்டே உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். உதயநிதி ஸ்டாலினை மன்னிக்கக் கூடாது, தண்டிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையாக பேசி உள்ளார், தி.மு.க-வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை மறைக்கவே சர்ச்சை பேச்சுகளைப் பேசி வருகிறார்கள். நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிய வேண்டும். இந்தியாவை இந்தியா எனவும் அழைக்கலாம், பாரத் எனவும் அழைக்கலாம்" என்றார்.
from Latest news https://ift.tt/KVwBEtU
0 Comments