Doctor Vikatan: மாமனாருக்கு லோ சுகர்; வாக்கிங் போகும்போது மயக்கம்... சர்க்கரை சாப்பிடுவது சரியானதா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 70 வயதாகிறது. அவருக்கு நீரிழிவு இருக்கிறது. அடிக்கடி லோ சுகர் ஆகி, மயக்கம் வருவதாகச் சொல்கிறார். உடனே சர்க்கரையை அள்ளிச் சாப்பிடுகிறார். வாக்கிங் போகும்போதும் இப்படி லோ சுகர் ஆகி, மயக்கம் வந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. லோ சுகர் ஆகும்போது என்ன செய்ய வேண்டும்... அவர் செய்வது சரிதானா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்

'ஹைப்போகிளைசீமியா' எனப்படும் தாழ்சர்க்கரை நிலை குறித்து அனைத்து நீரிழிவு நோயாளிகளும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ரத்தச் சர்க்கரையின் அளவானது 80 மில்லிகிராமைவிட குறையும்போது உடல் அதற்கான அறிகுறிகளைக் காட்டும். அதுதான் தாழ்சர்க்கரை நிலை. அந்த நிலையில் கை, கால்களில் நடுக்கம், படபடப்பு, குளித்தது போன்ற அதீத வியர்வை, வாய் குழறுவது, கண்கள் இருட்டிக்கொள்வது, பேச முடியாதது என பல அறிகுறிகள் தோன்றலாம்.

இப்படி ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அலட்சியம் செய்தால் மிகப்பெரிய மெடிக்கல் எமர்ஜென்சியாக மாறக்கூடும். அறிகுறிகளை உணர்ந்ததும் வீட்டில் குளுக்கோமீட்டர் இருந்தால் அதில் பரிசோதித்து, ரத்தச் சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ளலாம். குளுக்கோமீட்டர் இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை. மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றும்போது ஒரு டம்ளர் தண்ணீரில் 2-3 டீஸ்பூன் சர்க்கரையைக் கலந்து குடித்தால் உடனே ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

வாகனம் ஓட்டும்போது சிலருக்கு இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றும். இன்னும் சில நிமிடங்களில் வீடுபோய்ச் சேர்ந்துவிடுவோம்... போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் மட்டும் வேண்டாம். ஐந்து நிமிடங்களில்கூட பேராபத்து நிகழலாம். விமானம் ஓட்டும்போது பைலட்டுக்கு லோ சுகர் ஆகி, விமானம் கீழே விழுந்த வரலாறெல்லாம் நம்மிடம் உண்டு. அந்த அளவுக்கு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தாழ்சர்க்கரை நிலை பிரச்னை.

லோ சுகர் பிரச்னையைத் தவிர்க்க சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளுக்கு ரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைப்பதுதான் பிரதான வேலை. நீங்கள் சாப்பிட்டீர்களா, இல்லையா என்றெல்லாம் அவை பார்க்காது.

சர்க்கரை அளவு

மாத்திரைகளை எடுத்துக்கொண்டு சாப்பிடாமல் இருப்பது, மாத்திரை போட்டுக்கொண்டு தாமதமாகச் சாப்பிடுவது, இனிப்பு சாப்பிட்டுவிட்டு, ஒரு மாத்திரையை எக்ஸ்ட்ராவாக எடுத்துக்கொள்வது என்றெல்லாம் மாத்திரைகளையும் உணவையும் தவறாகக் கையாளும்போதுதான் இந்தப் பிரச்னை வருகிறது.

முதல்முறை லோ சுகர் வரும்போது உணர்ந்த அறிகுறிகளைத்தான் ஒவ்வொரு முறையும் உணர்வார்கள். அதை உணர்ந்ததும் உடனே எச்சரிக்கையாவதுதான் புத்திசாலித்தனமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/a6rsYcy

Post a Comment

0 Comments