தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கும்போதெல்லாம் கர்நாடகாவில் போராட்டங்கள் வெடிக்கின்றன. அதுவும் உச்ச நீதிமன்றம் கறாராக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு போடும்போது இன்னும் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. இப்போது பெங்களூர் பந்த் என்ற போராட்டத்தின் மூலம் பெங்களூரு மாநகரம் முடங்கி போயுள்ளது. ஏன் இந்த போராட்டங்கள், கர்நாடக விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேசினோம்.
மைசூரைச் சேர்ந்த விவசாயி ஶ்ரீனிவாஸாச்சர்யாவிடம் பேசியபோது, "கர்நாடக அரசு, தமிழக அரசு, மத்திய அரசு எல்லோரும் காவிரி விஷயத்தில் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா உண்மையான தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்பதே எங்களின் வருத்தம். எவ்வளவு தண்ணீர் கொடுக்கிறோம். எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு மழை பெய்திருக்கிறது என்ற சரியான விவரங்களை மக்களுக்கும் தெரிவிப்பதில்லை. நீதிமன்றத்திலும் தெரிவிப்பதில்லை. அதுவே இங்கு போராட்டங்கள் நடைபெறுவதற்கு காரணமாகிவிடுகின்றன.
ஒரு டம்ளர் தண்ணீர் இருக்கிறதென்றால், அதில் பாதி தமிழ்நாட்டுக்கும், பாதி கர்நாடகாவுக்கும் என்பதே நியாயம். இந்த நியாயத்தின்படி நடந்து கொண்டால் பிரச்னை இல்லை. இதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவிப்பதினாலேயே பிரச்னை எழுகிறது. அதை சரி செய்ய வேண்டும். ஏற்கெனவே காவிரி நீர் விஷயத்தில் தமிழ்நாடு அதிக பயனடைகிறது என்பது கர்நாடக மக்களின் மனதில் பதிந்துபோன ஒரு விஷயம். அதற்குத் தூபம் போடுவதற்கு ஏற்றவாறே நடந்து கொள்கிறது.
கர்நாடகாவில் நடப்பது காங்கிரஸ் அரசு. டெல்லி காங்கிரஸூக்கு தி.மு.கவின் தயவு தேவை. இதனால் காங்கிரஸின் நண்பரான தி.மு.கவுக்கு சாதகமாக கர்நாடக காங்கிரஸ் அரசு நடந்துகொள்வதாக கர்நாடக மக்கள் சந்தேகிக்கிறார்கள். இந்த சந்தேகத்தை போக்கும் வெளிப்படை நடவடிக்கைகள் முதல்வர் சித்தராமையா போன்றோருக்கு இல்லை. அதுவே போராட்டங்கள் வெடிக்க காரணமாக இருக்கிறது.
இந்தாண்டு மைசூரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் போதுமான மழை இல்லை என்பதே உண்மை. இங்கே என் பண்ணையிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. இதை உணர்ந்து மாநில அரசு சரியான தகவல்களை மேலிடத்தில் தெரிவித்திருக்க வேண்டும். அத்தகைய முயற்சிகள் எதையும் கர்நாடக அரசு மேற்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் உள்ளதுபோல் மாநில கட்சிகள் இங்கு இல்லை. எல்லாம் தேசிய கட்சிகள்தான் இருக்கின்றன. அதனால் டெல்லியின் அசைவுக்கு ஏற்றவாறே செயல்பட வேண்டிய நெருக்கடி இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுகவாகட்டும், அதிமுகவாகட்டும் இரண்டுமே மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுதந்திரமாக போராடுகின்றன. கர்நாடகாவில் இந்த நிலை இல்லை. அதனால்தான் சிறு சிறு கன்னட அமைப்புகளின் போராட்டங்கள் இங்கு வெடிக்கின்றன.
இங்கு அணைகளில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறதோ, அதை சரி சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு" என்றார்.
மாண்டியா மாவட்டம், கிரகவலு கிராமத்தைச் சேர்ந்த நெல் விவசாயி சையது கனி கானிடம் பேசியபோது, "இந்தாண்டு போதுமான மழை இல்லை. ஜூன், ஜூலையில் நெல் நடவு செய்துவிடுவோம். அப்படியில்லையென்றால் ஆகஸ்ட் மாதத்தில் நெல் நடவு இருக்கும். இந்த வருஷம் கால்வாயில் தண்ணீர் வரவில்லை. வழக்கமாக காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து ஏரிகளில் நிரப்புவார்கள். இந்த வருஷம் நிரப்பவில்லை. 10 நாள்களுக்கு ஒருமுறை கரும்புக்கு மட்டுமே தண்ணீர் வருகிறது. நெல் சாகுபடிக்கு தண்ணீர் வரவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட்டு விட்டதால், இந்த முறை எங்களுக்கு தண்ணீல் இல்லை என்பதே உண்மை. மாண்டியா மாவட்டத்தையே வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது கர்நாடக அரசு" என்றார்.
"இன்று போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் அத்தனை கன்னட அமைப்புகளும் அரசியலுக்காத்தான் நடத்திக் கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்களுக்குத்தான் பாதிப்பு. எதிர்க்கட்சியான பா.ஜ.க, மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்டவை தூண்டிவிட்டு இந்தப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. உண்மையான விவசாயி யாரும் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை" என்கிறார்கள் சில விவசாயிகள்.
தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீரப்பனிடம் பேசியபோது, "கர்நாடக அரசு, கர்நாடக விவசாயிகள் வறட்சி என்ற பெயரில் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கெனவே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் இதே பல்லவியைப் பாடினார்கள். காவிரி நடுவர் மன்றம், காவிரி ஒழுகலாற்றுக் குழு ஆகிய அமைப்புகள் மழை பெய்யும்போது எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், மழை குறைந்தால் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று தெளிவாக வரையறுத்துள்ளது. அதன்படி தண்ணீர் வழங்க வேண்டியது கர்நாடகத்தின் கடமை. அப்படி வழங்கத் தவறினால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 365 பிரிவின்படி கர்நாடக அரசைக் கலைக்கலாம். அதன்மீது நடவடிக்கையும் எடுக்கலாம். காவிரி விஷயத்தில் தமிழகம் கோரிக்கை வைக்கக்கூடாது. கர்நாடக அரசுக்கு நெருக்கடித்தான் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளை கட்டி கொண்டது கர்நாடகம். இதையே மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் கேள்வி கேட்கவில்லை. தற்போது அந்த அணைகளில் தண்ணீரும் உள்ளது. அந்தத் தண்ணீரில் தமிழகத்தின் பங்கைத்தான் கேட்கிறோம். 'எங்களுக்கே தண்ணி பத்தல, கர்நாடகத்துல வறட்சி' என்று போகிறபோக்கில் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு சொல்லியதை நீதிமன்றமும் ஏற்க மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கொடுப்பதுதான் கர்நாடகத்தின் வேலை. இதில் தமிழகம் எந்த சமரசத்துக்கும் செவி சாய்த்துவிடக் கூடாது. மற்றபடி அங்கே நடக்கும் போராட்டங்கள் எல்லாம் கர்நாடக அரசின் தூண்டுதல்களினாலேயே நடக்கிறது. அதைப்பற்றி தமிழகம் கவலை கொள்ளத் தேவையில்லை" என்றார்.
from Latest news https://ift.tt/Od9LZPn
0 Comments