கரூர்: குழந்தை சாட்சிகளை விசாரிக்கும் மையம் திறப்பு; செயல்படும் விதத்தை விளக்கிய நீதியரசர்!

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர், கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார், பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் மற்றும் குழந்தை சாட்சி மையத்தினை திறந்துவைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள், பனை விதைகளை நடவு செய்தனர்.

இந்த நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர், கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி, நீதியரசர் கே.குமரேஷ் பாபு, சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர்.சக்திவேல், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் பி.தனபால், கரூர் மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.ராஜலிங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீதிமன்ற நிகழ்ச்சி

பின்னர், வளாகத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி சுரேஷ்குமார் பேசும்போது, "கரூர் மாவட்டத்திற்கு நானும், சகோதரர் குமரேஷ் பாபுவும் பொறுப்பு நீதிபதிகளாக இருக்கிறோம். சில நீதித்துறை சார்ந்த பணிகளை வந்து பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து அவை முடியாமல் போய்விட்டது. பிறகு, இந்தக் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி எங்களிடம் சொன்னார். அதனால், இங்கு வந்துள்ளோம்.

பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் மற்றும் குழந்தை சாட்சிகளை விசாரிக்கக் கூடிய இந்த மையத்தின் தேவை என்ன, இப்படிப்பட்ட ஒரு மையம் இருந்தால்தான் நாம் அப்படிப்பட்ட சாட்சிகளை விசாரிக்க முடியுமா, இதற்கு முன்னால் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கவில்லையா என்று நினைக்கலாம். ஆனால், நீதித்துறை வளாகத்தில் நல்ல சூழல் இருந்தால்தான், குழந்தைகள் பயப்படாமல் சாட்சி சொல்வார்கள். அதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த மையம்.

பல நேரங்களில் குழந்தைகளின் சாட்சியங்கள் வழக்குகளில் உறுதுணையாக இருந்திருக்கின்றன. அவை மிக முக்கியமானவை. வழக்குகளுக்காக அவர்கள் நீதிமன்றம் வரும்போது அந்தச் சூழல் அவர்களுக்கு சௌகர்யமாக இல்லை என்றால், அவர்களை விசாரிக்க முடியாமல் போகும்போது. அது வழக்கின் தீர்ப்பில் எதிரொலிக்கும்.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி திட்டம் தீட்டப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற மையங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலாவதாகவும், அதற்கு அடுத்தாக கரூர் மாவட்டத்திலும்தான் இந்த மையம் கட்டப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுப்பதற்காக புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, போக்சோ சட்டம். அதுபோன்ற குற்றங்களில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுக்கிறார்கள். குற்றம் நடந்ததிலிருந்து வழக்கு முடியும் காலகட்டத்துக்குச் செல்ல ஐந்து வருடங்கள் கூட ஆகின்றன. அந்த வழக்குகளில் கொண்டு வரப்படும் சாட்சியங்கள் சரியாக இருக்க வேண்டும்.

நீதிமன்ற நிகழ்ச்சி

பல நேரங்களில் சாட்சிகள், பிறழ் சாட்சிகளாக மாறிவிடுகிறார்கள். ஒரு வழக்கின் சாட்சி, பயப்படாமல் பேசுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். குறிப்பாக, குறுக்கு விசாரணை என்று வரும்பொழுது வழக்கறிஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் கொஞ்சம் கூட பயப்படாமல் சாட்சி சொல்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. ஒரு சில வழக்குகளில் ஒரு சில சாட்சிகள்தான் நின்று பேசுகிறார்கள்.

நீதிக்காக சாட்சி சொல்ல வருகிறவர்களுக்கு பாதுகாப்பு என்ன என்பதற்கான பதில்தான், இந்த விசாரணை மையம். ஒரு தவறு கண் முன் நடந்தும், அந்தக் குற்றவாளிகள் சில வழக்குகளில் விடுவிக்கப்படும்போது, ‘இவ்ளோ பெரிய குற்றம் செஞ்சுட்டு வெளிய வந்துட்டானே’ என்று மக்கள் பேசுகிறார்கள். அந்தச் சூழலில், நியாயம் கிடைக்க சாட்சி சொல்ல வருகிறவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டியதன் காரணமாகத்தான் இது போன்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் நீதிபதிக்குத் தனி வழி, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குத் தனி வழி, சாட்சிகளுக்குத் தனி வழி என இருக்கும். பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் மற்றும் குழந்தை சாட்சிகள் இங்கு பாதுகாப்புடன் விசாரிக்கப்படுவார்கள்.

நீதிமன்ற நிகழ்ச்சி

குற்றம் சாட்டப்பட்டவரும், சாட்சி சொல்பவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாத அளவிற்கு ஒலிவாங்கி மூலம் நீதிபதி விசாரிக்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சாட்சி, குற்றம் சாட்டப்பட்டவரை நேரில் பார்த்து அடையாளம் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தால் மட்டுமே, அந்தத் திரை விலக்கப்பட்டு இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் நேரும்.

இந்த மையம், சாட்சிகளுக்குக் கொஞ்சமும் சங்கடமில்லாமல், பயமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக நடந்த உண்மையைச் சொல்லும் தன்னம்பிக்கையை அளிக்கும். ஏறத்தாழ ரூ.3.30 கோடிக்கு மேல் அரசாங்கம் செலவு செய்து இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம்.

கரூர் மாவட்டத்தில் பொறுப்பு நீதிபதியாக இருக்கும் நானும், எனது சகோதர நீதிபதியும் கரூர் மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றனவோ அவற்றை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.



from Latest news https://ift.tt/5JuvjCd

Post a Comment

0 Comments