Doctor Vikatan: இன்சுலின் போட ஆரம்பித்தால், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா?

Doctor Vikatan: இன்சுலின் போட ஆரம்பித்தால், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா?

எனக்கு 10 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. மருந்து, மாத்திரைகளில் சர்க்கரை அளவு குறையவே இல்லை. திடீரென மருத்துவர், இன்சுலின் ஊசி போடச் சொல்கிறார். இன்சுலின் போட ஆரம்பித்தால், கடைசிவரை  அதைத் தொடர வேண்டுமா... விளக்க முடியுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

இன்சுலின் போட ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் அதைத் தொடர வேண்டியிருக்குமா என்ற பயம் நீரிழிவு பாதித்த பலருக்கும் இருக்கிறது. இன்சுலின் ஏன் போடுகிறோம் என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டால், இந்தக் கேள்விக்கும் விடை கிடைக்கும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது இன்சுலின் போடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவோம். அப்படியானால் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏன் திடீரென அதிகரிக்கிறது?

திடீரென ஒரு காய்ச்சல் வருகிறது... இன்ஃபெக்ஷன் ஏற்படுகிறது என்ற நிலையில் அதன் விளைவாக ரத்தச் சர்க்கரை அதிகரிக்கலாம். அப்போது இன்சுலின் போடச் சொல்வோம்.

சிலருக்கு திடீரென ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம். அந்த நிலையில் வழக்கமான மருந்து மாத்திரைகள் தேவையில்லை என்பதற்காக இன்சுலின் போடச் சொல்வோம்.

மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற நோயாளிகளுக்கும் இன்சுலின் தான் போடுவோம். மாத்திரைகள் தர மாட்டோம்.

சிலருக்கு எந்த மாத்திரையிலும் சர்க்கரையின் அளவு கட்டுப்படாது. அவர்களுக்கு வேறு வழியின்றி இன்சுலின் போடச் சொல்வோம். உடலில் இன்சுலின் சுரப்பு 90 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்துவிட்ட நிலையிலும் இன்சுலின் ஊசி போடச் சொல்வோம். இப்படி எந்தக் காரணத்துக்காக இன்சுலின் போடச் சொல்கிறார்கள் என்பது முக்கியம்.

 கை, கால்களில் புண் ஏற்பட்டதால் இன்சுலின் போடச் சொல்லியிருந்தால், புண் சரியான பிறகு இன்சுலினை நிறுத்தி விடலாம்.

உணவுப்பழக்க வழக்கத்தாலோ, திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணத்தினாலோ, உடற்பயிற்சி செய்யாதாலோ ரத்தச் சக்கரையின் அளவு மிகவும் அதிகரித்து இருந்தால் அதைக் குறைப்பதற்கு இன்சுலின் போடச் சொல்லி, சர்க்கரை அளவு குறைந்ததும் இன்சுலின் போடுவதை நிறுத்தச் சொல்வோம்.

மாரடைப்பு அல்லது பக்கவாத சிகிச்சையில் இருந்தால் அது முடிந்ததும் இன்சுலினை நிறுத்தி விடலாம். அதேபோல, அறுவை சிகிச்சை முடிந்ததும் இன்சுலின் தேவைப்படாது.

மருத்துவமனையில் அட்மிட் செய்யும்போது இன்சுலின் போடச் சொல்வார்கள். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது அதை நிறுத்தி விடுவார்கள்.

insulin

உங்கள் உடலில் இன்சுலின் சுரப்பு மிகவும் குறைந்துவிட்ட நிலையில் வேறு எந்த மருந்து மாத்திரைகளும் வேலை செய்யாத பட்சத்தில் இன்சுலினை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

இன்சுலின் என்பது மிக அருமையான ஒரு சிகிச்சை. உடலில் எது இல்லையோ அதை வெளிப்புறமாக கொடுப்பதுதான் இன்சுலின் ஊசி. இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

ஆனால், கடந்த 60 வருடங்களாகத்தான் மருந்து, மாத்திரைகள் உபயோகித்து வருகிறோம். அந்த வகையில் இன்சுலின் ஊசி என்பது ஒருவகையில் பாதுகாப்பு சிகிச்சையும்கூட. அதை ஊசி வடிவில் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.

அதைக் குத்திக் கொள்ளும் போது உணர்கிற லேசான வலி என்பது மட்டும்தான் இதில் மைனஸ் விஷயமே தவிர மற்றபடி இன்சுலின் ஊசி என்பது பாதுகாப்பானது தான். ஏற்கெனவே குறிப்பிட்டது போல எந்தப் பிரச்னைக்காக இன்சுலின் போட்டுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அதை எத்தனை நாள்கள் தொடர வேண்டும் என்பதையும் மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்.



from Latest news https://ift.tt/Lt2zOoV

Post a Comment

0 Comments