‘I.N.D.I.A’ கூட்டணியில் நீடிக்குமா சி.பி.எம்?!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் சேர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் சி.பி.ஐ., சி.பி.எம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் சி.பி.ஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

டி.ராஜா

மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ அணியின் கூட்டத்தில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டது. அதுதான், இந்தக் கூட்டணியின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய உயர்மட்ட அமைப்பு என்று சொல்லப்பட்டது. அந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சி.பி.ஐ பொதுச்செயலாளர் டி.ராஜா இடம்பெற்றிருக்கிறார். சி.பி.எம் சார்பில் ஒருங்கிணைப்புக்குழுவின் உறுப்பினர் யார் என்பதைக் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் முடிவுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், `இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் டெல்லி இல்லத்தில் நடைபெற்றது. அதில், சி.பி.ஐ பங்கேற்றது. ஆனால், சி.பி.எம் பங்கேற்கவில்லை. தங்கள் கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் யார் என்பதை சி.பி.எம் முடிவுசெய்யாததுதான் அதற்குக் காரணம்.

`இந்தியா கூட்டணி...

அதன் பிறகு, சி.பி.எம் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் செப்டம்பர் 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அதில், ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து வெளியேறுவதென்று சி.பி.எம் முடிவுசெய்ததாக ஊடகங்களில் செய்தி பரவியது. அந்தச் செய்தி, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இனி, இந்தியா கூட்டணியிலிருந்து ஒவ்வொரு கட்சியாகக் கழன்றுவிடும் என்றெல்லாம் பா.ஜ.க தரப்பினர் பேச ஆரம்பித்தனர். ஆனால், ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக சி.பி.எம் சார்பில் அதிகாரபூர்வமாகச் செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை.

அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு, ‘இந்தியா கூட்டணியை மேலும் வலுப்படுத்திட மக்கள் இயக்கங்கள் மூலமாக கணிசமான பிரிவு மக்களை ஈர்க்க வேண்டும்’ என்று சி.பி.ஐ அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், மக்களின் அடிப்படை உரிமைகளையும், குடிமை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும். அதற்காக, ‘இந்தியா’ கூட்டணியை மேலும் ஒருமுகப்படுத்தி, விரிவுபடுத்துவதற்கான பணிகளை சி.பி.எம் அரசியல் தலைமைக் குழு முடிவுசெய்திருக்கிறது.

சீதாராம் யெச்சூரி

மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க தலைமையில் இருக்கும் அரசுகளை அகற்றவேண்டியது அவசியம். அதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். ‘இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் மக்கள் இயக்கங்கள் மூலமாக கணிசமான பிரிவு மக்களை ஈர்க்க வேண்டும்’ என்று சி.பி.எம் குறிப்பிட்டிருக்கிறது.

முக்கியமாக, ‘அனைத்து முடிவுகளும் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களால் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், எந்தவோர் அமைப்புசார் கட்டமைப்பும் இத்தகைய முடிவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்துவிடக் கூடாது’ என்று சி.பி.எம் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, ‘இந்தியா’ கூட்டணியின் எல்லா முடிவுகளும்ம் 28 கட்சிகளின் தலைவர்களாலும் எடுக்கப்பட வேண்டும்... ஒருங்கிணைப்புக்குழு என்று தனியாக ஒரு குழுவை அமைத்து, அதனால் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற பொருளில் சி.பி.எம் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இந்தச் சர்ச்சை குறித்து விளக்கமளித்திருக்கிறார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். ``பா.ஜ.க-வை வீழ்த்த உருவாக்கப்பட்டிருக்கும் ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து சி.பி.எம் விலகியிருப்பது போன்ற சர்ச்சை ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. சி.பி.எம்-ஐ பொறுத்த அளவில், பா.ஜ.க-வுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகளெல்லாம் ஓரணியில் திரள வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தோம்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். இதை எங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட கூட்டணி நீடிக்க வேண்டும், கருத்தொற்றுமையுடன் செயல்பட்டு 2024-ல் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் சி.பி.எம் உறுதியாக இருக்கிறது.

கே.பாலகிருஷ்ணன்

`இந்தியா’ கூட்டணி உருவானதிலிருந்து ஆர்.எஸ்.எஸ் தலைமையும், பா.ஜ.க தலைமையும் அதிர்ந்துபோயிருக்கின்றன. அதனால், இந்தியா கூட்டணிக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க முயல்கிறது. அதன் ஒரு பகுதிதான், `இந்தியா கூட்டணியில் சி.பி.எம் நீடிக்காது என்று அவதூறு பரப்புகிறார்கள். இது, பா.ஜ.க-வாலும், அதன் ஆதரவு ஊடகங்களாலும் கிளப்பிவிடப்பட்டிருக்கும் பொய்ச் செய்தி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை’’ என்கிறார் கே.பாலகிருஷ்ணன்.



from Latest news https://ift.tt/d89Jqpt

Post a Comment

0 Comments