Doctor Vikatan: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வரும் பீரியட்ஸ்... அப்படியே விடலாமா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு ‌‌2 வருடங்களாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ ‌‌‌அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோதான் பீரியட்ஸ் வருகிறது. கடைசியாக பீரியட்ஸ் வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தது. இது ஏன்... இதனால் ஏதாவது பிரச்னைகள் ‌‌வருமா?

- சிவனேஸ்வரி‌, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் முற்றுப்பெறும் சராசரி வயது 51- 52. இதற்கு முந்தைய காலகட்டத்தை 'பெரி மெனோபாஸ்' என்கிறோம். பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் மெனோபாஸுக்கான அறிகுறிகள் ஆரம்பமாகும். அதாவது மாதவிலக்கு சுழற்சி தள்ளிப் போகலாம் அல்லது சீக்கிரமே வரலாம்.

ப்ளீடிங் மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கலாம். மனநிலையில் பெரிய அளவில் தடுமாற்றங்கள் ஏற்படலாம். கை, கால்களில் வலி ஏற்படலாம். இரவில் அதிகமாக வியர்த்துக் கொட்டலாம். அந்த வகையில் பீரியட்ஸ் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படுவது மெனோபாஸின் முக்கியமான அறிகுறி. ஆனால் உங்கள் விஷயத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஆறு மாதங்களுக்கொரு முறைதான் பீரியட்ஸ் வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அதை பெரி மெனோபாஸின் அறிகுறி என நினைத்துக் கடந்துபோக முடியாது. எனவே உங்களுக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்னைகள் ஏதும் இருக்கின்றனவா என பார்க்க வேண்டும். தைராய்டு, புரொலாக்டின் ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளனவா என மருத்துவ ஆலோசனையின் பேரில் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து உறுதிசெய்து கொள்ளலாம்.

தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து கர்ப்பப்பையும் அதன் உள் லேயரான எண்டோமெட்ரியமும் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என பார்க்க வேண்டும்.

மெனோபாஸ்

எண்டோமெட்ரியம் லேயரானது ரொம்பவும் அடர்த்தியாக இருப்பது சாதாரணமானதல்ல. வேறு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பீரியட்ஸ் சுழற்சியை முறைப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

தவிர, கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் செய்யப்படுகிற 'பாப் ஸ்மியர்' பரிசோதனையையும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை செய்து பார்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட எல்லா பரிசோதனைகளிலும் எந்தப் பிரச்னையும் இல்லை, நார்மல் என்று தெரிந்துவிட்டால், முறைதவறி வரும் பீரியட்ஸ் சுழற்சி குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையல்ல.

ஸ்கேனில் எண்டோமெட்ரியம் மிகவும் தடித்து வளர்ந்திருப்பது தெரிந்தால் நிச்சயம் அதற்கு சிகிச்சை தேவை. ஒருவேளை அப்படி வளர்ந்திருந்தால் அந்தப் பகுதியை எண்டோமெட்ரியல் பயாப்சி என்ற சோதனை முறையில் பயாப்சி செய்து, அது சாதாரண வளர்ச்சியா, புற்றுநோய் அறிகுறியா என்றும் மருத்துவர் பார்ப்பார். இப்படி எந்தப் பிரச்னையும் இல்லாதநிலையில் பீரியட்ஸ் தாமதமாக வருவதை பெரிமெனோபாஸ் அறிகுறியாகவே எடுத்துக்கொள்ளலாம்.

பீரியட்ஸ்

உங்களுடைய உடல் எடையிலும் கவனம் வேண்டும். அதிக பருமன் கொண்டவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சி மாறுபடலாம். எனவே நீங்கள் மகப்பேறு மருத்துவரை நேரில் அணுகி, ஆலோசனை பெறுங்கள். தவிர வருடம் ஒருமுறை மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையில் முழுப் பரிசோதனைகள் மேற்கொள்வதும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/HAUX6Ii

Post a Comment

0 Comments