ரூ.4 லட்சம் முதலீடு... இன்று ரூ.2.75 லட்சம் கோடி மதிப்பு..! ஃப்ளிப்கார்ட்-ன் அசுர வளர்ச்சி!

இந்திய இணையச்சேவையின் (Internet) பரவலை ஜியோ நிறுவனம், தன்னுடைய வருகைக்கு முன், ஜியோ வருகைக்குப்பின் என்று இரண்டாகப் பிரித்ததது. உலகளவில் இணைய வணிகத்தை அமேசான் நிறுவனம் தன்னுடைய வருகைக்குமுன், வருகைக்குப்பின் என்று இரண்டாகப் பிரித்தது.

இவ்வாறான சந்தையைப் புரட்டிப் போடும் பிரிவினைகளை உண்டாக்கும் நிறுவனங்களே ஸ்டார்ட் அப் என்று சொல்லப்படும் புத்தொழில் நிறுவனங்கள் என்று ஒரு வரையறைகூட உள்ளது. இது போன்று இந்திய ஸ்டார்ட் அப் சூழலை இரண்டாகப் பிரித்து வேறுபடுத்திய ஒரு நிறுவனம்தான், ஃப்ளிப்கார்ட் (Flipkart).

இன்றைய நிலையில், ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு அங்கம். 2023 ஜூலை மாதத்தில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 35 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் இரண்டே 2.75 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்.

ஃப்ளிப்கார்ட் | Flipkart

ஃப்ளிப்கார்ட் அவ்வளவு பெரிய நிறுவனமா என்று கேட்பவர்களுக்கு, 11 லட்சம் விற்பனையாளர்கள், 80-க்கும் மேற்பட்ட வகைகளில் 15 கோடிக்கும் மேலான பொருள்கள், 45 கோடிக்கும் அதிகமான பதிவு செய்த வாடிக்கையாளர்கள் என்பதுடன் இல்லாமல், போன்பே, மிந்த்ரா (Myntra), இகார்ட் (Ekart), க்ளியர்ட்ரிப்ஸ் (Cleartrip), ஷாப்ஸி (Shopsy), ஃப்ளிப்கார்ட் வோல்சேல் (Flipkart Wholesale), ஃப்ளிப்கார்ட் ஹெல்த் (Flipkart Health+) போன்ற குழும நிறுவனங்கள் மூலம் குழுமத்தின் மொத்த ஆண்டு வருவாய் 2.25 லட்சம் கோடி ரூபாய்க்கு (30 பில்லியன் டாலர்கள்) மேல் இருக்கலாம் என்கிற சில விவரங்களே அதன் பிரமாண்டத்தை நமக்கு நன்கு உணர்த்தும்.

2007-இல் புத்தகம் விற்பனை செய்யும் இணையதளமாகத் தொடங்கிய இந்த நிறுவனம், 16 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி என்பது, ஒரு பாடலில் தொழிலபதிராகும் சூரியவம்சம் சரத்குமாரைப் பின்னுக்குத் தள்ளிவிடும்.

சச்சின் பன்சல், பின்னி பன்சல் இருவரும் சகோதரர்கள் அல்ல. இருவரும் சண்டிகரில் பிறந்து வளர்ந்தாலும், ஐ.ஐ.டி டெல்லியில் கணினிப் பொறியியல் துறையில் ஒன்றாக 2005-இல் படிப்பை முடித்தபோதுதான் நண்பர் ஆனவர்கள். 2006 இறுதியில் அமேசான் வெப் சர்வீசஸ் (Amazon Web Serivces) நிறுவனத்தில் ஒன்றாகப் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, இந்திய இணைய வணிகத்தில் உள்ள பெரும் இடைவெளியைப் புரிந்துகொண்டனர். அன்றைய நிலையில், அமேசான் இணைய வணிகம் இந்தியாவில் இல்லை. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கான விதை விதைக்கபட்டது, அமேசான் நிறுவனம் மூலமாக என்றுகூட சொல்லலாம். வேலையை விட்டு நிறுவனம் இணைய வணிகத்தை தொடங்க முடிவெடுக்கின்றனர்.

2007-2012

2007 ஜனவரியில் புத்தகம் விற்பனை செய்யும் இணையமாக 4 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஃப்ளிப்கார்ட் பெங்களூரில் தொடங்கப்பட்டது. சச்சின்தான் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுகிறார். அக்டோபர் மாதத்தில் முதல் வாடிக்கையாளரைப் பெற்றனர்.

நிறுவனத்தை சந்தைப்படுத்த புத்தகக் கடைகளின் வாசல்களில் நின்று, புத்தகம் வாங்கிவரும் வாடிக்கையாளர்களுக்குப் பக்கங்களைக் குறித்து வைக்கும் அடையாள அட்டைகளை (BookMarks) ஃப்ளிப்கார்ட் பெங்களூரில் இணைய முகவரியோடு அச்சிட்டு இலவசமாக வழங்குகின்றனர். புத்தகப் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகிறது.

2008-ஆம் ஆண்டு முதல் அலுவலகம் திறந்தனர். கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவம் வாய்ந்த ஆம்பூர் அய்யப்பா என்பவர் முதல் பணியாளராகச் சேர்ந்தார். 3,500 ஆர்டர்களை நிறைவேற்ற, 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆக்செல் (Accel) நிறுவனத்திடம் இருந்து 1 மில்லியன் டாலர் முதலீடு பெற்றனர். பணியாளர் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்தது. ஆண்டு இறுதியில், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை விற்பனை செய்தனர்.

ஃப்ளிப்கார்ட் | Flipkart

2010-ஆம் ஆண்டு இணைய வணிகம் மீதான வாடிக்கையாளர் நம்பிக்கை உயர ‘COD - CashOn Delivery’ முறையை அறிமுகப்படுத்தினர். 2010 மார்ச் மாதம் டைகர் குளோபல் (Tiger Global) நிறுவனத்திடம் இருந்து 10 மில்லியன் டாலர் முதலீடு திரட்டினர். வீரெட் (Weread) என்கிற புத்தகப் பரிந்துரை வழங்கும் நிறுவனத்தைக் கையகப்படுத்தினர்.

இணைய வணிகத்தில் சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் வழங்குதல் அஞ்சல் சேவை வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்தே உள்ளது என்பதை உணர்ந்து, ஐ.ஐ.டி சென்னை மற்றும் ஐ.ஐ.எம் பெங்களூரில் படிப்பை அப்போதுதான் முடித்த வினோத் பூவலிங்கம் என்பவரிடம் பொறுப்பை வழங்கி, சொந்தமாக பொருள்களை வழங்கும் வகையில் தொடங்கபட்ட பரிசோதனை முயற்சி மூன்று மாதங்களில் இகார்ட் நிறுவனமாக விரிவடைந்தது. அதே ஆண்டு புத்தகம் தாண்டி இசை, படங்கள், விளையாட்டுகள், அலைபேசிகள் மற்றும் மின்சாதனங்கள் போன்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டன.

2011-இல் டிஜிட்டல் வாலெட் (Digital Wallet) அறிமுகப்படுத்தபடுகிறது. காமிராக்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் வீட்டு உபயோகத்துக்குத் தேவையான பொருள்கள், உடல் ஆரோக்கியத்தைச் சார்ந்த பொருள்கள், எழுதுபொருள்கள் போன்ற பலவற்றையும் சேர்த்தார்கள். Chakpak, Mime 360 போன்ற டிஜிட்டல் தளங்கள் கையகப்படுத்த படுகிறது. வாங்கிய பொருள்களை 30 நாள்களில் மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டு வருவாய் 75 கோடி ரூபாயைத் தாண்டியது. டைகர் குளோபல் மீண்டும் 20 மில்லியன் டாலர் முதலீடு செய்தது.

2012-ஆம் ஆண்டு ஃப்ளிப்கார்ட் அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. Letsbuy என்ற மின்சாதன இணைய வணிக நிறுவனத்தை 125 கோடி ரூபாய்க்குக் கையடுத்தி, Flyte என்னும் இணைய இசை சேவை தொடங்கப்பட்டது DigiFlip என்கிற சொந்த அடையாள பெயரில் (Brand name) மின்னணு சாதனங்கள் அறிமுகபடுத்தப்பட்டது.

MIH மற்றும் ICONIQ முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து 150 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டது. ஃபாஷன், பெர்ஃப்யூம், வாட்சுகள், ஆண்கள் அணியும் ஆடைகள், பொம்மைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என பல வகையான பொருள்கள் அறிமுகபடுத்தப்பட்டது.

அடையாளம் பெற்ற பல சரக்கு சில்லறை (MultiBrand Retail) வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அரசு விதித்திருந்த தடை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்துவந்தது.

2013-17

2013-இல் வாங்கி விற்பனை (Buy Sell Model) செய்யும் வணிக மாதிரியில் இருந்து வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான சந்தைசார் வணிக மாதிரிக்கு (Market Place Model) தன்னை மாற்றிக்கொண்டது. பணப் பரிவர்த்தனை முனையமான பேஜிப்பி (payzippy) அறிமுகமானது. Flyte இசை சேவை எதிர்பார்த்த வளர்ச்சி அடையாததால் மூடப்பட்டது. இரண்டு தவணைகளாக 520 மில்லியன் டாலர் முதலீடு திரட்டி, பில்லியன் டாலர் சந்தை மதிப்பைப் பெற்றது ஃப்ளிப்கார்ட்.

பெண்களுக்கான லைப்ஸ்டைல் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே நாளில் ஒரு லட்சம் புத்தகங்களை விற்று சாதனை படைத்தது.

இந்த ஆண்டில் அமேசான் இந்தியாவில் காலடி வைத்தது. அமேசான் தந்த போட்டியை சமாளிக்க ஃப்ளிப்கார்ட் தன்னைத் தயார்படுத்திக்கொண்டது.

ஃப்ளிப்கார்ட் | Flipkart

2014-இல் வெவ்வேறு சுற்றுகளாக ஒரு ஆண்டில் மட்டும் 2 பில்லியன் டாலர் நிதி முதலீடு திரட்டியது. இதே ஆண்டு மே மாதம் மிந்த்ரா நிறுவனத்தை 330 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. மோட்டோரோலா மற்றும் ஜியாமி நிறுவனங்களின் பிரத்யேக இணைய விற்பனை உரிமையைப் பெற்றது. Jeeves மற்றும் Ngpay போன்ற நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. சந்தாதாரர் முன்னுரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட நகரங்களில் ஒரே நாளில் டெலிவரி செய்யத் தொடங்கியது. திருவிழாக் கால ‘பிக் பில்லியன் டே சேல்’ அறிமுகப்படுத்தி, ஐந்தே நாள்களில் 2000 கோடி ரூபாய் வர்த்தகம் நடத்தி வரலாற்று சாதனை படைத்தது.

2015-இல் ஃப்ளிப்கார்ட்டின் ஆண்டு மொத்த விற்பனை வணிக மதிப்பு 10,000 கோடியைத் தாண்டுகிறது. இதே ஆண்டு Appiterate, FxMart, AeIquity ஆகிய நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. அதே ஆண்டு மேப்மை இந்தியா (MapMyIndia) என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்தது. பணியாளர்களுக்கு சிறந்த மகப்பேறு கால விடுமுறைத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. இணையச் சேவை சரியாக இல்லாத இடங்களுக்கு ஏற்ற ஃப்ளிப்கார்ட் லைட் (Flipkart Lite) என்னும் செயலி அறிமுகப்படுத்தபட்டது.

2016-இல் Jabong நிறுவனத்தை 60 மில்லியன் டாலர் கொடுத்து கையகப்படுத்தி, மிந்த்ரா நிறுவனத்துடன் இணைக்கிறது ஃப்ளிப்கார்ட். போன்பே நிறுவனத்தைக் கையகப்படுத்தி, தனிப்பட்ட நிறுவனமாக நடத்த முடிவு செய்கிறது. Qikpod நிறுவனத்தில் முதலீடு செய்கின்றனர். சச்சின் பன்சால் செயல் தலைவராகவும் (Executive Chairman), பின்னி பன்சால் தலைமை செயல் அதிகாரியாகவும் (CEO) பொறுப்பேற்றனர்.

அமேசான் போட்டியை சமாளிக்க 2017-இல் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி ஃப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரியாகவும், பின்னி பன்சால் ஃப்ளிப்கார்ட் குழும சி.இ.ஒ-ஆகவும் செயல்பட தொடங்கினர். டென்சென்ட் (Tencent), இபே (Ebay) போன்ற நிறுவனங்கள் 1.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தன. சாஃப்ட்பேங்க் நிறுவனத்தின் விஷன்ஃபண்ட் 2.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து நிறுவனத்தின் பெரிய பங்குதாரர் ஆகின. ஆண்டு வருவாய் 15 ஆயிரம் கோடியைத் தாண்டியது.

2018-23

2018-இல் ‘மேக்மைட்ரிப்’ நிறுவனத்துடன் இணைந்து ட்ராவல் சேவைகளை அறிமுகபடுத்துகிறது. ஃபர்னிசூர் (Furnisure) என்ற பெயரில் உத்தரவாதாமான மேஜை, நாற்காலி பிரிவு தொடங்கப்பட்டது.

அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் 16 பில்லியன் டாலர் கொடுத்து ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வாங்கியது. நிறுவனர் சச்சின் பன்சால் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மொழிபெயர்ப்புக்கு உதவும் Liv.ai என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைக் கையகப்படுத்த, ஆண்டு வருவாய் 21 ஆயிரம் கோடியைத் தாண்டியது. ஆண்டின் இறுதியில் எதிர்பாராத நன்னடத்தைப் பிரச்னை காரணமாக பின்னி பன்சால் சி.இ.ஒ பொறுப்பிலிருந்து விலகினார்.

மேக்மைட்ரிப்

2019-இல் அமேசான் பிரைம் வீடியோவுக்கு போட்டியாக ஃப்ளிப்கார்ட் அறிமுகப்படுத்தியது. தானியங்கி வண்டிகளில் இருந்து சரக்குகளைப் பிரிக்கும் முறைக்குப் பயன்படுத்தி வெற்றி காண்கிறது. பொருள்களை டெலிவரி செய்ய மின்சார வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறது. இந்தி மொழியில் தேடலை அறிமுகப்படுத்தியது. ஷேடோஃபாக்ஸ் (Shadowfox) மற்றும் நிஞ்சாகார்ட் (Ninjacart) நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. வருவாய் 43 ஆயிரம் கோடியைத் தாண்டியது.

2020-இல் Aegon Life Insurance நிறுவனத்துடன் இணைந்து ஆயுள் காப்பீட்டுப் பிரிவைத் தொடங்கியது. சிறு கடைகளுக்குப் பொருள்களை வழங்கும் b2b பிரிவைத் தொடங்குகிறது. வால்மார்ட் நிறுவனத்திடம் இருந்து மீண்டும் முதலீடு திரட்டியது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க ஃப்ளிப்கார்ட் லீப் (Flipkart Leap) என்னும் திட்டத்தை அறிமுகபடுத்தியது. நேபாளத்தின் Ssastodeal நிறுவனத்துடன் இணைந்து இந்தியப் பொருள்களை நேபாள மக்கள் வாங்க ஏற்பாடு செய்தது. போன்பே நிறுவனத்தைத் தனி நிறுவனமாக மாற்றி, தனியான முதலீடுகளை பெற்றது.

2021-இல் Shopsy என்னும் சமூக வணிக செயலியை அறிமுகப்படுத்தியது. க்ளியர்ட்ரிப் நிறுவனத்தை கையகப்படுத்தி, வால்மார்ட் மீண்டும் 4 பில்லியன் டாலர்கள் முதலீட்டை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் மேற்கொள்கிறது. அதானி குழுமம் ஃப்ளிப்கார்ட் வசம் இருந்த க்ளியர்டிரிப் நிறுவனத்தில் முதலீடு செய்தது. Sastasundar என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தி ஃப்ளிப்கார்ட் ஹெல்த்+ என்று மாற்றம் செய்து அறிமுகப்படுத்தியது.

2022-இல் யாந்த்ரா (Yaantra) என்னும் எலெக்ட்ரானிக்ஸ் மறுவிற்பனை செய்யும் நிறுவனத்தைக் கையகபடுத்தியது. மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் 1,700 நகரங்களுக்கு விரிவுபடுத்தியது. ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து 20 லட்சம் கடன் அட்டைகளை வழங்கியது. சமூக நோக்கங்களுக்காக ஃப்ளிப்கார்ட் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது.

2023-இல் வால்மார்ட் நிறுவனம் மீண்டும் 3.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. ஃப்ளிப்கார்ட் கிரீன் (Flipkart Green) என்னும் தளம் நீடித்த தற்சார்பு கொண்ட பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கியது.

பிசினஸ்

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்...

  • ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கிய துறையில் பெரிய நிறுவனங்கள் போட்டிக்கு இருக்கும் சூழலில், நாமும் அதற்குத் தகுந்தவாறு கூட்டாளிகளைத் தேர்வு செய்து போட்டியை சமாளிக்கப் பழக வேண்டும்.

  • வேகமான வளர்ச்சிக்கு ஏற்றவாறு நிறுவனத்தைத் தகவமைத்து நடத்துவதை கலாசாரமாக வளர்க்க வேண்டும்.

  • சந்தையின் முன்னிலையில் தலைமைப் பொறுப்பில் நாம் இருக்கும்போது நாம் செய்யும் செயல்களே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்.

  • வாடிக்கையாளரை சிறப்பாகப் புரிந்துகொண்ட நிறுவனம், உலகின் எந்த மூலையிலும் இருந்து வரும் எவ்வளவு பெரிய போட்டியாளரையும் எதிர்கொள்ளும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.



from Latest news https://ift.tt/dktzjl2

Post a Comment

0 Comments