I.N.D.I.A: முக்கிய விவாதங்களும், எடுக்கப்படாத சில முடிவுகளும்! - ஓர் அலசல்!

எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜக-வுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணியைக் கட்டமைத்திருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூரில் நடைபெற்றது. இதில்தான் 'இந்தியா' என்ற பெயரும் கூட்டணிக்குச் சூட்டப்பட்டு, தற்போது மூன்றாவது கூட்டம் மும்பையிலுள்ள கிராண்ட் ஹையத் ஹோட்டலில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்

அப்போது, "வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க வேண்டும். பல மாநிலங்களில் இடங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நடத்த வேண்டும். அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும். நாடு முழுவதும் மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து ஊர்வலங்கள் நடத்தப்படும். `பாரதம் ஒன்றிணையும், இந்தியா வெற்றி பெறும்’ என்ற முழக்கம் பல்வேறு மொழிகளில் முன்வைக்கப்படும்" எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் 13 உறுப்பினர்களைக்கொண்ட ஒருங்கிணைப்புக்குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஜாவேத் கான் (சோஷலிஸ்ட் கட்சி), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), சஞ்சய் ராவத் (சிவசேனா), ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), லல்லன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்)

எதிர்க்கட்சிகள்

டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), உமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழுதான் கூட்டணியின் முக்கிய முடிவுகளை எடுக்கும். இது தவிர பிரசாரக்குழு, சமூக ஊடகங்களுக்கான பணிக்குழுக்கள், ஊடகம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய நான்கு குழுக்களும் இருக்கும். இந்தக் குழுக்களில் கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவின் மேடை 60% மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. திறமையான வழியில் நாம் ஒன்றிணைந்தால், பா.ஜ.க வெற்றிபெறுவது சாத்தியமில்லை. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க வேண்டும். பல மாநிலங்களில் இடங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

ராகுல் காந்தி

அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட இரண்டு முக்கிய நடவடிக்கைகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட உறவுகள் மிகவும் முக்கியமானவை. இந்தச் சந்திப்புகள் நல்லுறவை உருவாக்கி நாங்கள் ஒன்றாக வேலை செய்வதை உறுதி செய்திருக்கின்றன. எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தலைவர்களிடையே நெகிழ்வுத்தன்மை இருக்கிறது” என்றார்.

அப்போது பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, "வரும் மாதங்களில் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் மேலும் பல கைதுகள், சோதனைகள், தாக்குதல்கள் நடக்கலாம். அதற்குத் தயாராக இருக்க வேண்டும். பாட்னா, பெங்களூரு கூட்டங்கள் வெற்றிபெற்றிருக்கின்றன. இதற்குப் பிறகு, பிரதமர் இந்தியாவைத் தாக்கிப் பேசியதோடு அல்லாமல், நம்முடைய நாட்டை பயங்கரவாத அமைப்போடு ஒப்பிட்டார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போதே இதைப் புரிந்துகொள்ள முடியும்" என்றார்.

மல்லிகார்ஜுன கார்கே

"நாங்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று செய்தியைப் பரப்புவோம். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள் என்பதை இந்தக் கூட்டங்கள் உறுதிசெய்யும். இது ஊடக சுதந்திரத்தையும் உறுதிசெய்யும். ஒன்றாக நிற்போம். தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொறுப்புகள் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கின்றன” என்றார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "பிரதமர் எங்கே போனாலும், அவரது ஒன்பது ஆண்டு சாதனைகளைப் பற்றிச் சொல்ல முடியாமல் 'இந்தியா' கூட்டணியைப் பற்றியே பேசுகிறார். இந்தக் கூட்டணியின் சிறந்த விளம்பர தூதராக மோடி செயல்படுகிறார். அதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஒன்பது ஆண்டுகளில் செய்ததாகச் சொல்வதற்கு அவர்களிடம் எந்தச் சாதனையும் கிடையாது. அவர்களுடைய ஆட்சிக்கு தினம் எதிர்ப்பு அதிகரித்துவருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

எங்கள் கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. இது ஒரு திருப்புமுனைக் கூட்டமாக அமைந்திருக்கிறது. பா.ஜ.க-வின் சரிவு ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் ஒருபோதும் காணாத சர்வாதிகார ஆட்சியை நாம் பார்க்கிறோம். சிஏஜி அறிக்கை குறித்து பிரதமர் பதில் சொல்ல முன்வரவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பில்லை. அரசு அமைப்புகளை ஏவல் அமைப்புகளாக பா.ஜ.க பயன்படுத்திவருகிறது. ஆனால், நாங்கள் நாட்டை ஒன்றாக இணைத்திருக்கிறோம். இந்தியாவைக் காக்க, மதச்சார்பின்மையைக் காக்க இணைந்திருக்கிறோம்" என்றார்.

ஆனால், இதில் பல்வேறு முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இது குறித்து அவர்கள், "இந்தியா கூட்டணி நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த லோகோ வெளியிடப்படவில்லை. கூட்டணிக்கு சின்னம் வேண்டும் என்ற யோசனை கைவிடப்பட்டது. மேலும் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து, கூட்டணிக்குள்ளேயே குழப்பங்கள் இருக்கின்றன.

மோடி

அது குறித்துப் பெரிதாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. பாஜக சார்பில் நரேந்திர மோடி என்கிற வலுவான தலைவர் பிரதமர் வேட்பாளர் நிற்கும்போது, இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக ஒருவரை முன்னிறுத்தாமல் தேர்தலைச் சந்தித்தால் அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மேலும், கூட்டணியில் அதிகமாக இருப்பது மாநிலக் கட்சிகள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது.

அவற்றில் சில கட்சிகள் மட்டும் தங்கள் மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து இடங்களைப் பகிர்ந்துகொள்வதில் மாற்றுக்கருத்தை முன்வைக்கின்றன. அதாவது டெல்லி, பஞ்சாப்பில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதில் ஆம் ஆத்மிக்கும், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கும், கேரளாவில் சிபிஎம்-முக்கும் முரண் நிலவுகிறது. இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்து எவ்விதமான விவாதமும் நடத்தப்படவில்லை" என்கிறார்கள்.

மம்தா பானர்ஜி

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "நான்கு விஷயங்களுக்கு முடிவு எட்டப்பட்டிருக்க வேண்டும். லோகோ வெளியிடப்படவில்லை. அதற்கு மக்களிடம் கருத்து கேட்பதாகக் கூறியிருக்கிறார். குறைந்தபட்ச செயல்திட்டத்தையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டார்கள். பாஜக-வுக்கு எதிராக ஒவ்வொரு தொகுதியிலும் இந்தியா கூட்டணி சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கு, அந்தந்த மாநிலத்தில் குழு அமைத்து முடிவு செய்துகொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறாரகள்.

எங்கெல்லாம் இணைந்து போட்டியிட முடியுமோ அங்கெல்லாம் இணைந்து போட்டியிடுவோம் என்கிறார்கள். இதன் மூலம் இணைய முடியாத இடங்களும் இருக்கின்றன. பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் மக்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். மோடிக்கு எதிராக யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறார்கள்... அப்படி இல்லையென்றால் எப்படிச் சமாதானம் செய்யப்போகிறார்கள்... என்பதற்குச் சரியான பதில் இல்லை. இதற்கு முன்னால் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளரை அறிவித்ததில்லை.

காங்கிரஸ் - ஆம் ஆத்மி

பாஜக அரசை அகற்றுவதுதான் முக்கியம்... தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் மக்களுக்கு நம்ம்பிக்கையை கொடுக்காது. பாஜக ஊழலை வெளியில் கொண்டுவருவதற்கு கமிட்டி அமைத்திருக்கிறார்கள். அது வரவேற்கவேண்டிய விஷயம். எப்படிக் கொண்டுபோகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தொகுதியைப் பங்கிட்டுக்கொள்வதுதான் அவர்களுக்கு இருக்கும் பெரிய சவால். குறைந்தபட்சம் 450 தொகுதிகளில் பாஜக-வுக்கு எதிராக இந்தியா அணி சார்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும்.

அப்படி இல்லையென்றால் இந்தியா கூட்டணியால் எந்தப் பயனும் இருக்காது. மக்களின் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். ஒன்றாக இருந்து பிரயோஜனம் இல்லை. கடந்த தேர்தலில் பாஜக-வுக்கு விழுந்த வாக்குகளைவிட இந்தக் கட்சிகளுக்குக் கிடைத்த ஓட்டுகள் அதிகம். அதை மீண்டும் பெற வேண்டுமென்றால் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தொண்டர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால், தலைவர்கள் ஈகோவில் இருக்கிறார்கள். இதையெல்லாம் கடந்து பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ப்ரியன், பத்திரிகையாளர்

ஏனெனில், 10 ஆண்டுகள் ஒரு ஆட்சி இருந்தால் மக்களிடம் அதிருப்தி ஏற்படும். ராம ராஜ்ஜியம் கொடுத்தாலும், ராவண ராஜ்ஜியத்தைத்தான் மக்கள் விரும்புவார்கள். மோடி, ராம ராஜ்ஜியம் கொடுத்தாரா என நமக்குத் தெரியாது. மக்கள் மாற்றத்தை விரும்ப வாய்ப்பு இருக்கிறது. மாநிலக் கட்சிகள் காங்கிரஸை முழுமையாக நம்ப வேண்டும். மம்தா, அகிலேஷ், கெஜ்ரிவால் ஆகியோர் `முதல் எதிரி’ என காங்கிரஸைச் சொல்லிவந்தார்கள். ஆனால், இப்போது பாஜக-தான் `முதல் எதிரி.’

அதை ஒழிக்கவேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். 2024-ல் மீண்டும் முதல் எதிரி வந்தால் உங்களுக்குத்தான் ஆபத்து. உங்களால் ஆட்சி நடத்த முடியாது. புலனாய்வு முகமைகள், ஆளுநர்கள் மூலமாகத் தொந்தரவு கொடுப்பார்கள். அதிகாரங்களைப் பறிப்பார்கள். எனவே, மீண்டும் பாஜக வந்தால் பாதிக்கப்படுவது மாநிலக் கட்சிகள்தான். அதேநேரத்தில் இந்தியா கூட்டணியிலுள்ள மாநிலக் கட்சிகள், கூட்டணியில் ராகுல் காந்தி முக்கியத்துவம் பெற்றுவிட்டால் மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பு வரும் என நினைக்கின்றன.

ராகுல் காந்தி

அதைவிட மோசமான பாதிப்பு பாஜக-வால்தான் வரும். காங்கிரஸ் முன்பு வைத்திருந்த இடத்தைத்தான் மாநில கட்சிகள் பிடித்து வைத்திருக்கின்றன. தற்சமயத்துக்கு காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதை முழு மனதுடன் செய்ய வேண்டும். சீட் பங்கீட்டிலும் இணைந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் தேசியக் கட்சி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருக்கிறது.

இன்று மோடிக்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் அதிக செல்வாக்கு பெற்ற தலைவராக ராகுல் காந்தி மட்டும்தான் இருக்கிறார். நாளைக்கு அவர்தான் நாடு முழுவதும் பிரசாரம் செய்யப்போகிறார். அவருடைய செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது.

மம்தா - காங்கிரஸ்

எனவே, காங்கிரஸுடன் இணைந்து மாநிலக் கட்சிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் பாஜக-வுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்க முடியும். இந்தக் கூட்டணியின் பலத்தை அறிந்துகொண்டுதான் முன்கூட்டியே தேர்தலை நடத்தலாமா என்பது உள்ளிட்ட விஷயங்களை பாஜக முன்னெடுப்பதை நாம் பார்க்கிறோம்" என்றார் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Latest news https://ift.tt/4I8N9As

Post a Comment

0 Comments