மும்மூர்த்திகளின் அம்சமாய் திருச்செந்தூர் முருகன்; திருமலையில் கோகுலாஷ்டமி - இந்த வார ஆலய அப்டேட்ஸ்!

திருச்செந்தூர் முருகப்பெருமான் விஷ்ணு, ருத்திரன், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக பச்சை சாத்தி, சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர். இங்கு ஆண்டுமுழுவதும் விழாக்கள் பல நடைபெற்றாலும் அவற்றில் ஆவணித் திருவிழா முக்கியமானது. முற்காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களின் தரிசனத்திற்காக நடத்திய மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா என்கிறது தலவரலாறு.

சிவப்பு சாத்தி திருக்கோலம்

திருச்செந்தூரில் நடைபெறும் மாசித் திருவிழாவைப் போலவே ஆவணித் திருவிழாவும் 12 நாள்கள் கோலாகலமாக நடைபெறும். மாசித்திருவிழா வளர்பிறையில் நடைபெறும். ஆவணித் திருவிழாவோ தேய்பிறை நாள்களில் நடைபெறும். ஆனால், குமரவிடங்கப்பெருமான் பெரியதேரில் வலம்வருதலுக்குப் பதிலாக சிறியதேரில் வலம் வந்து அருள்பாலிப்பார். அதேபோன்று ஆவணித் திருவிழாவின் போது தெப்போற்சவமும் நடைபெறாது.

4.9.23 அன்று கொடியேற்றமும், 10.9.23 அன்று ஶ்ரீசண்முகர் உருகு சட்ட சேவையும், பல்லக்கு மற்றும் வெட்டிவேர் சப்பரம் சேவைகள் நடைபெறும். அன்று மாலை சிவப்பு சாத்தியும், 10.9.23 அன்று காலை வெள்ளை சாத்தியும் பகலில் பச்சை சாத்தியும் நடைபெறும். மும்மூர்த்திகளாக சண்முகக்கடவுள் எழுந்தருள்வதைக் காணக் கண்கோடி வேண்டும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13.9.23 அன்று நடைபெற இருக்கிறது. இந்த விழாக்களை ஒட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்புப் பேருந்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன.

இன்று (4.9.23) ஶ்ரீரங்கத்தில் பவித்ரோத்ஸ்வம் நிறைவு விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்னும் ஆகம விதியின்படி இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் முதல் கட்டமாக இன்று (4.9.23) காலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஐந்து கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

ஆவணி மாத அஷ்டமி வரும் செப்டம்பர் 6-ம் தேதி வருகிறது. இந்த நாளில் அனைத்துக் கோயில்களிலும் கோகுலாஷ்டமி சிறப்பாகக் கொண்டாடப்படும். செப்டம்பர் 7-ம் தேதி ஶ்ரீ ஜயந்தி கொண்டாடப்படும். வைணவத்தலங்களிலும் பெருமாள் சந்நிதி உள்ள கோயில்களிலும் இந்த விழாக்கள் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும்.

திருமலை திருப்பதியில் வரும் 7-ம் தேதி கோகுலாஷ்டமி கொண்டாடப்பட இருக்கிறது. 8-ம் தேதி உட்லோட்சவம் எனப்படும் வழுக்குமரம் ஏறும் பாரம்பர்ய விழா திருப்பதியில் கொண்டாடப்படும். இதில் வழக்கமாக நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உற்சாகமாகக் கலந்துகொள்வார்கள். முன்னதாக மலையப்பசாமி ஊர்வலமாக வந்து உற்சவ இடத்தில் எழுந்தருள்வார். திருப்பதி கபாலீஸ்வர சுவாமி கோயிலின் உபகோயிலான வேணுகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜயந்தியை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

திருமலை திருப்பதி

மேலும் திருமலை கோசாலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கிருஷ்ணலோகம்போல் காட்சிகொடுக்கும். அன்று பக்தர்கள் பசுக்களுக்கு உணவு வழங்கி மகிழலாம். மேலும் வேதபாராயணம், வேணுகானம், கோலாட்டம், பஜன் ஆகியனவும் நடைபெறும்.

திருமலை திருப்பதியில் அடுத்தவாரம் 18-ம் தேதி பிரம்மோற்சவம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான சிறப்பான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துவருகிறது.


from Latest news https://ift.tt/02SA1rZ

Post a Comment

0 Comments