Jet Airways: ரூ.538 கோடி வங்கி மோசடி வழக்கு; ஜெட் ஏர்வேஸ் ஏர்லைன்ஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது!

நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமாக விளங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி நிதி நெருக்கடியால் தனது சேவையை நிறுத்திக்கொண்டது. பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வந்தன. ஏர்லைன்ஸ் சேவையை தொடர்ந்து நடத்த நிதி தேவைப்பட்டது. ஆனால் வங்கிகள் கடன் கொடுக்க மறுத்துவிட்டன.

இதனால் விமான சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியில் 2019-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. 119 விமானங்களுடன் செயல்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் அந்நிறுவனத்தை தீர்ப்பாயம் மூலம் வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டனர்.

அதனை 2021-ம் ஆண்டு வாங்கிய ஜலான் கல்ராக் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் இயக்குவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கனரா வங்கி 848.86 கோடிகடன் கொடுத்திருந்தது. அதில் 538.62 கோடி திரும்ப கட்டப்படாமல் இருந்தது. இது தொடர்பாக கனரா வங்கி நிர்வாகம் சிபிஐ-யிடம் புகார் செய்திருந்தது. அதன் அடிப்படையில் நரேஷ் கோயல், அவரின் மனைவி அனிதா மற்றும் கம்பெனி இயக்குனர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் நேற்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நரேஷ் கோயலை விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர்.

ஜெட் ஏர்வேஸ்

அவரிடம் அதிகாரிகள் காலையில் இருந்து மும்பையில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இரவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று நரேஷ் கோயல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். கனரா வங்கியில் வாங்கிய கடன் தொகையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பயன்படுத்தாமல் அந்த நிதியை ஜெட்லைட் நிறுவனத்திற்கு மாற்றி நரேஷ் கோயல் மோசடி செய்துள்ளாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. 2021ம் ஆண்டுதான் இக்கடன் தொகை மோசடி செய்யப்பட்டதாக வங்கி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.



from Latest news https://ift.tt/vSIL8Ab

Post a Comment

0 Comments