பணம் பறிக்கும் புதுப்புது தந்திரங்கள்... உஷார் மக்களே! - ‘Money’துளிகள்..!

பண விஷயத்தில் மூன்றாம் நபர் வேண்டாமே!

அண்மையில் அவசரமாக மருத்துவமனைக்குப் போக பக்கத்தில் இருந்த ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்துச் சென்றேன். ஆட்டோக்காரர் 40 ரூபாய் கேட்டார். என்னிடம் சில்லறை இல்லை. 100 ரூபாய் கொடுத்து மீதியைத் தரும்படி கேட்டேன். அவரிடமும் சில்லறை இல்லாததால், பிறகு தரும்படி சொல்லிவிட்டு போய்விட்டார். நான் சில்லறை மாற்றிக்கொண்டு, பணத்தைக் கொடுக்க ஆட்டோ ஸ்டாண்ட் போனபோது, அந்த ஆட்டோக்காரர் அங்கே இல்லை. இன்னொரு ஆட்டோக்காரரிடம் குறிப்பிட்ட ஆட்டோக்காரர் பெயரைச் சொல்லி, அவரிடம் கொடுக்கும்படி பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

ஒரு வாரம் கழித்து மருத்துவமனைக்கு அதே ஆட்டோவில் போனேன். அப்போது 100 ரூபாய் கொடுத்து, மீதியைத் தரும்படி கேட்டேன். கடந்த வாரம் தர வேண்டிய தொகையையும் சேர்த்து எடுத்துக்கொண்டு மீதி 20 ரூபாய் கொடுத்தார். நான் ஆட்டோ ஸ்டாண்டில் கொடுத்த தொகை அவருக்குச் சேரவில்லை எனத் தெரிந்துகொண்டேன். என்னிடம் பணம் வாங்கிய ஆட்டோக்காரர் இவரிடம் கொடுக்கவில்லையா, இவர் மறந்துபோய்விட்டாரா எனக் குழப்பமாக இருக்கவே, போனதுபோகட்டும் என விட்டு விட்டேன். சின்ன தொகை என்பதால் பரவாயில்லை, தொகை அதிகமாக இருந்தால், வீண் இழப்புதானே! பண விஷயத்தில் மூன்றாம் நபரை நம்புவது சரியல்ல எனப் புரிந்துகொண்டேன்.

- சங்கரி வெங்கட், சென்னை - 63

செய்கூலி, சேதாரம்... ஏமாற்றும் நகைக் கடைகள்...

பிரபல நகைக் கடை ஒன்று, ‘தங்க நகைகளுக்கு செய்கூலி சேதாரம் முற்றிலும் கிடையாது’ என விளம்பரம் செய்தது. என் மகளுக்கு நகை எடுக்க வேண்டியிருந்ததால், இதைச் சரியான தருணமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்து சென்றோம்.

பிடித்தமான நெக்லஸ் ஒன்றைத் தேர்ந்து எடுத்தோம். எடை அளவெல்லாம் முடிந்து பில் கைக்கு வந்ததும் அதிர்ந்துபோனோம். செய்கூலி, சேதாரம் ஜி.எஸ்.டி என எல்லாமே சேர்க்கப்பட்டிருந்தது. ‘செய்கூலி சேதாரம் கிடையாதுனு போட்டு இருக்கீங்க... ஆனால், பில்லில் சேர்த்து இருக்கீங்களே’ என்று கேட்டேன். ‘அது குறிப்பிட்ட சில மாடல்களுக்கு மட்டும்தான் பொருந்தும்’ என்றார் கடை மேலாளர். ‘இந்தச் சலுகை சில குறிப்பிட்ட மாடலுக்கு மட்டும்’ என ஏன் குறிப்பிடவில்லை என்றேன். ‘அப்படி நுணுக்கமாகப் போட்டு எப்படி சார் வியாபாரம் பண்ண முடியும்’ என்று அலட்சியமாகச் சொன்னார் அவர்.

இதை சரியான எச்சரிக்கைப் பாடமாக எடுத்துக் கொண்டோம். இலவசம், தள்ளுபடி என எங்கு சென்று என்ன பொருள் வாங்கினாலும் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம்.

- ஏ.ஜி.முகம்மது தௌபீக், மேலப்பாளையம்.

சேமிப்பின் மகத்துவம்... குழந்தைகளுக்குக் கற்றுத் தருவோம்...

என் இரண்டு பேரன்களுக்கும் ஆளுக்கு ஓர் உண்டியல் பரிசாகக் கொடுத்தேன். அவ்வப்போது அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தை அதில் போட்டு வரச் செய்தேன். மேலும், அவர்களின் அறையை சுத்தமாக வைத்துக்கொண்டால் அதற்குப் பரிசாக சிறிய அளவில் பணம் கொடுத்தேன்.

நாள் முழுவதும் அவர்கள் பெற்றோர்கள் சொல்படி நடந்தாலோ, கோபம் கொள்ளாமல் இருந்தாலோ அதற்கும் சிறிய தொகையைப் பரிசாக அளித்து உண்டியலில் போடச் சொன்னேன்.

இப்போது அந்த உண்டியல் நிரம்பியதால் (சுமார் ஒரு வருட காலம் கழித்து) அதைத் திறந்து பார்த்ததில் ஒவ்வொருவரின் உண்டியலிலும் ரூ.700-க்கு மேல் சேர்ந்திருந்தது. அவர்கள் பெற்றோர்கள் மூலமாக ஆளுக்கு ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பித்து, அவரவர் தொகையைச் செலுத்துமாறு அறிவுறுத்தினேன். பிறகு, மீண்டும் உண்டியல் சேமிப்பைத் தொடங்கச் சொன்னேன். குழந்தைகளும் ஆர்வமாகச் செய்கிறார்கள். அவர்கள் சேமிக்கக் கற்றுக்கொள்வதுடன், நற்பண்புகளையும் கற்று வளர்வதில் எனக்கு மகிழ்ச்சி! எல்லோரும் இப்படிச் செய்யலாமே!

- உமா ஶ்ரீநிவாசன், சென்னை - 33.

பணம் பறிக்கும் புதுப்புது தந்திரங்கள்... உஷார் மக்களே!

சமீபத்தில் என் நண்பரின் மகனுக்கு, அவனுடன் கல்லூரியில் படித்த ஒரு மாணவியிடமிருந்து வாய்ஸ் மெசேஜ் வந்தது. அதில் அந்த மாணவி, தன் அம்மாவின் மருத்துவச் செலவுக்கு 10,000 ரூபாய் தேவைப் படுவதாகவும், இரண்டொரு மாதங்களில் திருப்பித் தந்து விடுவதாகவும் சொல்லியிருந்தார்.

அதைக் கேட்ட நண்பரின் மகனுக்கு சந்தேகம் வந்தது. இத்தனை நாள்களாக எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்த மாணவி, பணம் கேட்டிருக்க மாட்டார் என நினைத் தான். அவன் சமூக வலைதளங்களில் தீவிரமாகச் செயல்படக்கூடியவன். ஒருவேளை, இந்த மெசேஜ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏமாற்றுப் பேர்வழிகள் அனுப்பியதாக இருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. உடனே அந்த மாணவியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல, ‘வாய்ஸ் மெசேஜ் எதுவும் அனுப்பவில்லை, எனக்குப் பிரச்னை எதுவும் இல்லை’ என்று பதில் அளித்தார். நண்பரின் மகன் கொஞ்சம் பதற்றமாகச் செயல்பட்டிருந்தால் 10,000 ரூபாய் பறிபோய் இருக்கும். எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே!

- மூ.மோகன், வேலூர்.

பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு துணுக்குக்கும் பரிசு ரூ.250.

பண அனுபவங்களைப் பகிருங்கள்..!

சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com



from Latest news https://ift.tt/u70n1KF

Post a Comment

0 Comments