இப்போதெல்லாம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ஃபைன் போடுவது, வண்டியை சீஸ் செய்வது என்று காவல்துறை பார்க்கிற வேலையெல்லாம் கேமராவும் ஆன்லைனுமே பார்த்துக் கொள்கின்றன. போக்குவரத்துத் துறையில் ஒன்றான RTO–விலும் ஒரு புது முயற்சியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆம், இனிமேல் லைசென்ஸுக்கு முதல் படியான LLR (Learners Licence Registration) எனும் காப்பியை வாங்க, ஆர்டிஓ அலுவலகத்துக்குப் போய் தேவுடு காக்கவோ, டிரைவிங் ஸ்கூலுக்குப் போய் சில நூறுகள் பணம் இழக்கவோ தேவையில்லை. ஆன்லைனில் அப்ளை செய்து, நேரடியாக உங்கள் வீட்டுக்கே கைக்குக் கிடைக்கும்படியான ஒரு வசதியைச் செய்திருக்கிறது. இடைத் தரகர்களின் தலையீடும் இதில் இருக்காது என்பதும் ப்ளஸ்.
சென்னையின் ஒரு மிகப் பெரிய RTO அலுவலகத்துக்குப் போயிருந்தேன். சம்பந்தமே இல்லாத சிலர் அப்ரோச் செய்தார்கள். ஒரு LLR எடுக்கவே ஆயிரக்கணக்கில் பணம் கேட்டார்கள். அந்தக் கூட்டத்திலேயே நல்லவராகக் காட்டிக் கொண்ட ஒருவர், ‘‘300 குறைச்சுக் கொடுங்க; நீங்க ஒண்ணுமே பண்ணத் தேவையில்லை தம்பி. டாக்குமென்ட் மட்டும் சப்மிட் பண்ணிட்டுப் போங்க; மூணே நாள்ல வந்து வாங்கிக்கலாம்’’ என்றார். ஆனால், இதற்காக அவர்கள் பெரிதாக மெனக்கெடவெல்லாம் செய்வதில்லை. இப்போது அந்த மெனக்கெடல்களைத்தான் நாம் ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். அதாவது, அந்த ஆயிரங்களை வாங்கிக் கொண்டு அவர்களும் இதையேதான் செய்கிறார்கள்.
சொல்லப்போனால், இது மெனக்கெடல்கூட இல்லை. ரொம்பவும் சிம்பிளான டாஸ்க் ஆகத்தான் இருக்கிறது. https://sarathi.parivahan.gov.in/sarathiservice/sarathiHomePublic.do – இந்த வெப்சைட்டுக்குப் போய் விடுங்கள். Apply for Learner Licence, Apply for Driving Licence, Apply for Duplicate DL, Apply for DL Renewal, முகவரி மாற்றுவது, டூப்ளிகேட் லைசென்ஸ், டெம்பரரி ரிஜிஸ்ட்ரேஷன் நகல், வாகனங்களுக்கு ஆர்சி எடுக்க என்ஓசி (NOC) வழங்குதல், இன்டர்நேஷனல் லைசென்ஸ் அப்ளை செய்வது என எல்லாமே வரிசையாக இருக்கும். இப்படி சுமார் 40–க்கும் மேற்பட்ட வேலைகளை இந்த ஒரே வலைதளத்தின் மூலமே முடித்துக் கொள்ளலாம். உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்துவிட்டு, நீங்கள் அது கேட்கும் டாக்குமென்ட்களை சப்மிட் செய்தபடி போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். முக்கியமாக ஆதார் எண்தான் மிகவும் வேண்டப்படும் டாக்குமென்ட். ஆதார் கார்டு இல்லை என்பவர்கள், நேரடியாக RTO–வுக்குப் போய்த்தான் ஆக வேண்டும். இந்த சைட்டில் நீங்கள் ஓட்டுநர் உரிமத்துக்கும் அப்ளை செய்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் ஏற்கெனவே LLR அப்ளை செய்து அதைக் கையில் வைத்திருக்க வேண்டும். இந்த LLR –யைத்தான் இப்போது உங்கள் வீட்டுக்கே நேரடி டெலிவரி செய்து தரும் ஆப்ஷனையும் அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால், சிலர் RTO அலுவலகம் போகாமலேயே டிரைவிங் லைசனெ்ஸ் வாங்கி விடலாமா என்று கேட்கின்றனர். அதாவது, அப்ளை வேண்டுமானால் செய்து கொள்ளலாம். ஆனால், டிரைவிங் லைசென்ஸை வாங்குவதற்கு, அதற்கான பிசிக்கல் சோதனைகளுக்கு நீங்கள் RTO அலுவலகம் போய்த்தான் ஆக வேண்டும்.
இது சம்பந்தமாக சில ஆர்டிஓ அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘அது எப்படி சார், உங்கள் டிரைவிங் டெஸ்ட்களை வீட்டிலிருந்தே பண்ண முடியுமா? உங்கள் வாகனத்தைச் சோதனை போட… நீங்கள் எப்படி வண்டி ஓட்டுகிறீர்கள் என்பதைச் சோதனையிட… இதற்காக நீங்கள் ஆர்டிஓ அலுவலகம் வந்துதான் ஆக வேண்டும்!’’ என்றார்கள். அதேபோல், நீங்கள் தனிநபராக விண்ணப்பித்து, தனிநபராகவே வாகனம் ஓட்டிக் காண்பிக்க இருக்கிறீர்கள் என்றால், உங்கள் வண்டியின் ஆர்சி, இன்ஷூரன்ஸ், பொல்யூஷன் சர்ட்டிஃபிகேட் எல்லாமும் பக்காவாக இருக்க வேண்டும்.
அதேநேரம், இப்போது டிரைவிங் டெஸ்ட்களை வேண்டுமானால் டிஜிட்டல் முறையில் செய்வதால், அது ஈஸியாக நடக்கிறது. இதில் முறைகேடுகளும் தவிர்க்கப்படுகின்றன. அதாவது ஆட்டோமேட்டட் டெஸ்ட் ட்ராக்குகள் வர ஆரம்பித்துவிட்டன. சிசிடிவி கேமராக்கள் கொண்ட, கம்ப்யூட்டர் மூலம் சோதனை செய்யப்படும் ‘கணினி மையத் தேர்வுக்களமான’ ஆட்டோமேட்டட் டெஸ்ட் டிரைவிங் ட்ராக்கை முதன் முறையாக கரூரில் ஆரம்பித்திருக்கிறார்கள். RTO ஆய்வு அதிகாரிகள், முன்பெல்லாம் டிரைவரின் பக்கத்தில் அமர்ந்துதானே மார்க் போடுவார்கள்? இந்த டெஸ்ட்டில் அப்படித் தேவையில்லை. கன்ட்ரோல் ரூமில் அமர்ந்தபடி ரிலாக்ஸ்டாக மார்க் போடலாம். இது வாகன ஓட்டிகள் தவறு செய்தால், ‘பீப்’ ஒலி எழுப்பும். பீப் ஒலி வந்தால், மார்க் குறையும். அதேபோல் 3 ட்ராக்குகளுக்கும் சேர்த்து 6 நிமிடங்களில் முடிக்க வேண்டும் என்றால், 6.01 நிமிடமானால்கூட நீங்கள் ஃபெயில்தான்.
அப்புறமென்ன, நீங்கள் அடுத்த ஸ்லாட்டில் வண்டி ஓட்டிக் காண்பிக்க வேண்டும். இது ஆட்டோமேட்டட் சிஸ்டம் என்பதால், தவறுகளும் முறைகேடுகளும் நடந்தால் காட்டிக் கொடுத்துவிடும். கரூரில் இது வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இப்படிச் சோதனையில் நீங்கள் பாஸான பிறகு, 6 மாதங்களுக்குள் லைசென்ஸ் உங்கள் கைக்குக் கிடைக்கும். அதாவது – பழகுநர் உரிமம் (LLR) வேண்டுமானால் நீங்கள் ஆன்லைனிலிருந்தே அப்ளை செய்து, உங்கள் வீட்டுக்கே டெலிவரி ஆகிவிடும். ஆனால், முழுமையான டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஒரு தடவையாவது நீங்கள் RTO அலுவலகம் போய்த்தான் ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
from Latest news https://ift.tt/ZbCIay0
0 Comments