புதுச்சேரி, அரியாங்குப்பத்தில் நேற்றிரவு கலைஞர் நூற்றாண்டு சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி தி.மு.க அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, ``புதுச்சேரியில் பா.ஜ.க-வின் மிருகத்தனமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி இல்லை. ஆளுநர் தலைமையிலான முழுமையான பா.ஜ.க ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. `பா.ஜ.க-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் வாக்களித்தால் இரட்டை இன்ஜின் ஆட்சியைக் கொண்டு வருவோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி என்பதால் மிகப்பெரிய எழுச்சியை புதுச்சேரியில் கொண்டு வருவோம், புதுச்சேரியில் நிதிச் சுமையை குறைப்போம், புதிய தொழில் கொள்கையைக் கொண்டு வருவோம், புதிய ரயில்வே திட்டத்தைக் கொண்டு வருவோம், துறைமுகத்தைக் கொண்டு வருவோம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்' என, பல்வேறு வாக்குறுதிகளைக் கூறினார்கள்.
வாக்குறுதிகளைக் கூறியவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை. பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர்கள்தான். அவர்கள் கூறிய எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்துக்குச் செல்லும்போதெல்லாம், நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்து செய்தோம் என்று பொய்யாகக் கூறி வருகிறார்.
இந்தியாவில் ஒரு ரேஷன் கடைகூட இல்லாத கேவலமான மாநிலமாக புதுச்சேரி இருக்கிறது. `எங்கள் ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்து வெள்ளை அரிசிக்காகப் போடப்படும்' என்று கூறினார் முதல்வர் ரங்கசாமி. முதலில் 30 கிலோ போட்டார்கள். பிறகு 20 கிலோ போட்டார்கள். அதன் பிறகு 10 கிலோ போட்டார்கள். இப்போது அரிசியே போடுவதில்லை. புதிய தொழில் கொள்கை என்று கூறி வந்தார்கள். ஆனால் தொழிற்சாலைகளுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் வழங்கப்படாததால், அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு வருகின்றன. 1,300 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்படும் எனக் கூறினார்கள்.
ஆனால், இதுவரை அதற்கு முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை. இப்போது அரசு கேந்திரங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. சிறந்த முறையில் இயங்கிவந்த மில் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. 10,000 பேரை வேலையிலிருந்து எடுத்திருக்கின்றனர். தமிழகத்தில் ஏதாவது ஒன்று அறிவித்தால், போட்டிக்காக உடனே இங்கே ஒன்றை அறிவிப்பார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து என்று அறிவித்த உடனே புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவசப் பேருந்து என்று அறிவித்தனர். ஆனால், புதுச்சேரி அரசிடம் மொத்தம் உள்ளதே 12 பேருந்துகள்தான்.
அதிலும் மத்திய அரசின்கீழ் இயங்கும் 8 பேருந்துகள் பழுதடைந்துவிட்டன எனக் கூறி, இயக்கக் கூடாது என்று நிறுத்திவிட்டனர். பிங்க் நிறத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இலவசப் பேருந்துகள் என்று அறிவித்தனர். ஆனால், இதுவரை அப்படி ஒரு பேருந்துகூட ஓடவில்லை. 85 பேருந்துகள் பழுதடைந்து வீணாக நின்றுகொண்டிருக்கின்றன. புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்றனர். ஆனால் அதற்கான உள்கட்டமைப்போ, போதிய ஆசிரியர்களோ இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரங்கசாமி, எதற்குமே வாய் திறந்ததில்லை. ஆனால் காங்கிரஸ், தி.மு.க-வைச் சேர்ந்தவர்களை பா.ஜ.க-வுக்கு அனுப்பி, பெரும் தொகையை செலவு செய்து அவர்களை எம்.எல்.ஏ-க்களாக்கினார். அப்படித்தான் அவர்கள் திருட்டு ஆட்சியைக் கொண்டுவந்தார்கள். கொள்கை அடிப்படையில் வெற்றிபெற்ற பிறகு, பா.ஜ.க ஆட்சி என்று அவர்கள் கூறினால் பரவாயில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூன்று அமைச்சர்கள், ஆறு எம்.எல்.ஏ-க்களை இழுத்து, பெரும் பணத்தைச் செலவு செய்து அவர்களை வெற்றிபெற வைத்தது மட்டுமல்லாமல், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவையும் சேர்த்துக்கொண்டீர்கள்.
புதுச்சேரியில் தொடர்ந்து 25 வருடங்களாக பா.ஜ.க டெபாசிட் மட்டுமே இழந்திருக்கின்றனர். மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை தனியார்மயமாக்கிவிட்டார்கள். அதைத் தாண்டி வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆட்சி வந்த பிறகு 200 அரசு ஊழியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்களது 25 ஆண்டுக்கால வாழ்க்கையை இழந்துவிட்டனர். வெறும் 6,000 ரூபாய் என்று ஊதியமாய் பெற்று வந்த அவர்களுக்காக, சட்டப்பேரவையில் பேசி இப்போது 18,000 ரூபாய் ஊதியமாக வாங்கிக் கொடுத்திருக்கிறோம். ஆனால், அந்த 18,000 ரூபாய்கூட இதுவரை வழங்கப்படவில்லை. கேட்டால் தலைமைச் செயலர் தடுத்துவைக்கிறார், நிறுத்திவைத்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமியின் தொகுதியான கதிர்காமத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வேலையே செய்யாத 1,300 பேருக்கு ரூ.33,000 சம்பளத்துக்கு ஒரே இரவில் கையெழுத்து போட்டிருக்கிறார். பழைய புதுச்சேரியை மீட்டெடுக்க திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வர வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/BZ3sCiK
0 Comments