தூத்துக்குடி: ’பர்தா’ அணிந்து 58 சவரன் தங்க நகை கொள்ளை; மனைவியை போலீஸில் ஒப்படைத்த போலீஸ்காரர்!

தூத்துக்குடி முத்தையாபுரம், அன்னை தெரசாநகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ். அந்தப் பகுதியில்  ஃபேன்சி கடை நடத்திவருகிறார். இவரின் மனைவி செல்வராணி. இவர்களின் மகன் தங்கதுரை. அவரின் மனைவி அஸ்வினி.  தங்கதுரையும் அஸ்வினியும் வேலை நிமித்தமாக, சென்னையில் வசித்துவருகின்றனர். காந்தி ஜயந்தியை ஒட்டிய மூன்று நாள்கள் விடுமுறையில் மனைவி, மகனுடன் தங்கதுரை தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். மனைவி, மகனை இங்கு விட்டுவிட்டு அடுத்த வாரம் அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு தங்கதுரை சென்னைக்குச் சென்றிருக்கிறார்.

அஸ்வினி - சுசீலா

இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி மாமனார் அற்புதராஜ், ஃபேன்சி கடைக்குச் சென்ற நேரத்தில் அஸ்வினியும் மாமியார் செல்வராணியும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் ’பர்தா’ அணிந்த ஒருவர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அஸ்வினியையும் செல்வராணியையும் ஓர் அறைக்குள் தள்ளி கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு அவர்கள் கழுத்தில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 58 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இது தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மாமியார் செல்வராணி, பேரன் அஸ்வந்த் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான தகவலைக் கூறியிருக்கின்றனர். ஆனால், அஸ்வினி மட்டும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார். இது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முத்தையாபுரம்

பின்னர் அஸ்வினியிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைன் டிரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அக்காவின் உதவியால் நகைகளைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அஸ்வினியின் செல்போனை வாங்கி போலீஸார்  ஆய்வு செய்தபோது கால் ஹிஸ்டரியை முழுமையாக டெலிட் செய்திருந்தார். அது மேலும்  போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் தீவிரமாக விசாரணை செய்தபோதுதான் உண்மையை ஒப்புக்கொண்டார் அஸ்வினி.

நகை விவகாரம் குறித்து அஸ்வினி, தன் அக்கா சுசீலாவிடம் கூறவே இருவரும் சேர்ந்தே கொள்ளையடித்து அந்த நகைகளை விற்று, அதன் மூலம்  அடகுவைத்த தனது நகைகளை மீட்டுவிடலாம் எனத் திட்டமிட்டிருக்கின்றனர். திட்டமிட்டபடி சுசீலா பர்தா அணிந்து வந்து மூவரையும் தனி அறைக்குள் தள்ளி கட்டிப்போட்டு கொள்ளையடிப்பதுபோல் நடந்து நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார். அஸ்வினியைக் கைதுசெய்த போலீஸார், அவரின் அக்கா சுசீலாவைத் தேடிவந்தனர். இந்த விவகாரம் காஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கம் குன்றத்தூரிலுள்ள சுசீலாவின் வீட்டுக்குத் தெரியவந்தது.

கொள்ளைச் சம்பவம் நடந்த அஸ்வினியின் மாமியார் வீடு

சுசீலாவின் கணவர் கோதண்டராமன் சென்னையில் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். நகைகளைக் கொள்ளையடித்த தன் மனைவியை போலீஸ் தேடுவதை அறிந்த அவர், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் தன் மனைவியை அழைத்து வந்து நேரில் ஒப்படைத்தார். சுசீலாவிடமிருந்த 29 சவரன் தங்க நகைகளை போலீஸார் மீட்டனர். சுசீலாவைக் கைதுசெய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.  

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/owvtCjk

Post a Comment

0 Comments