கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித்துறை (DPI) வளாகத்தில், இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் உள்ளிட்ட மூன்று வகையான ஆசியர்கள் சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுவந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடுத்த அறிவிப்புகளை ஏற்றுக்கொண்ட ஆசிரியர் சங்கங்கள் அடுத்தடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கின்றன.
கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்களின் போராட்டம் தொடங்கியது. `ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் கொடுக்க வேண்டும்’ என இடைநிலை ஆசிரியர்களும், `எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' எனக் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்களும், `ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற எங்களுக்கு, கூடுதல் போட்டித்தேர்வில் தேர்ச்சிபெற்றால்தான் வேலை என்ற அரசாணையை ரத்துசெய்து பணி நியமனம் வழங்க வேண்டும்' எனக் கேட்டு `டெட்' தேர்வு முடித்த பி.எட் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு வார காலமாக குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் செயலாளர் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எனப் பலரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில்,
`` *இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்குச் சம ஊதியம் கேட்கும் கோரிக்கையின் அடிப்படையில், 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, பல்வேறு துறைகளில் 1.6.2009-க்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வுசெய்து அரசுக்கு பரிந்துரை அளிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
*பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2,500 ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு முடிவுசெய்திருக்கிறது. ரூ.10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு அறிமுகம் செய்யப்படும். அதற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும்.
*தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்பவர்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 என்றும், இதர பிரிவினருக்கு 58-ஆகவும் உயர்த்த அரசு முடிவு செய்திருக்கிறது. 171 தற்காலிகத் தொழில் ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்துக்குக் கொண்டு வரும் அரசாணை வெளியிடப்படும்" என உறுதியளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மூன்று தரப்பு ஆசிரியர்களையும் போராட்டத்தைக் கைவிட்டு, தங்கள் பணிக்குத் திரும்ப கேட்டுக்கொண்டார்.
ஆனால், இந்த அறிவிப்புகளை ஏற்க மறுத்த ஆசிரியர்கள் உள்ளபடியே தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் 8-ம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தது தமிழக காவல்துறை. அவர்கள் மயிலாப்பூர், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். இருந்தபோதிலும், அங்கிருந்தபடியே உணவு உண்ணாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர் ஆசிரியர்கள் சங்கத்தினர்.
ஆசிரியர்களின் கைதுக்குப் பல்வேறு எதிர்கட்சியினர் கண்டம் தெரிவித்தனர். குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181-ம் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கடந்த 9 நாள்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் போராடிவருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181-வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாகப் பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள்கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்துவைத்திருப்பதையும், வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனக் கண்டனம் தெரிவித்தார்.
அதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த நிலையில், திடீர் திருப்பமாக நேற்று மாலை பகுதி நேர ஆசிரியர் சங்கத்தினரும், டெட் தேர்வு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களும் அரசின் அறிவிப்பை ஏற்று தங்களின் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தனர். ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் மட்டும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கின்றனர். மேலும், ``போராட்டத்தை வாபஸ் பெறக் கூறி எங்களை யாரும் மிரட்டவில்லை. எங்களின் கோரிக்கைகளை 3 மாதங்களில் அரசு நிறைவேற்றுவதாக உறுதியளித்திருப்பதாலும், மாணவர்களின் நலன் கருதியும் எங்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் வாங்கியிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினரும் டிபிஐ வளாகத்தைவிட்டு வெளியேறி, குடும்பத்துடன் தங்களின் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/yPIdkj3
0 Comments