தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால், அ.தி.மு.க அதிகாரபூர்வமாக கூட்டணியை முறித்து ஒருவாரமாகிவிட்டது. ஆனாலும், பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அண்ணாமலையும் டெல்லியிலிருந்து பதில் வரும் என்ற தொனியில், கூட்டணி முறிவு குறித்து இதுவரை வாய்திறக்காமலேயே இருக்கிறார். அதோடு, நாளை மறுநாள் (அக்டோபர் 3) சென்னையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்துகிறார்.
இந்த நிலையில், மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும், பதவிக்காகத் தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். முன்னதாக, அண்ணாமலை இன்று கோவையிலிருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார்.
அப்போது விமானம் ஏறுவதற்கு முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ``தி.மு.க-வினர் பொய் பேசுவதற்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள். கூட்டணி முறிவு குறித்து என்னிடம் எந்த அறிக்கையும் இல்லை. யாரும் என்னிடம் கேட்கவுமில்லை. இதுவொன்றும் கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. தேர்தலுக்கு இன்னும் ஏழு, எட்டு மாதங்கள் இருக்கிறது. கட்சியைப் பலப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தன்மை எப்படி இருக்கும் என்பதை சரியான நேரத்தில் தேசிய தலைமை முடிவு செய்யும்.
அ.தி.மு.க தலைமையில் புதிய கூட்டணியால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பின்னடைவும் ஏற்படாது. எனவே, 2024 தேர்தலுக்கு நாங்கள் முழு உறுதியுடன் இருக்கிறோம். இன்றைக்கு 57 சதவிகித வாக்காளர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் இன்ஸ்டாவில் வாழ்கின்றனர். இப்போது டி.வி, பேப்பர் எல்லாம் யார் படிக்கின்றனர். இளைஞர்கள் இன்று வேறு உலகத்தில் வாழ்கின்றனர். மக்களவைத் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்ற எண்ணிக்கையை சொல்ல விரும்பவில்லை.
மேலும், மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது. நான் அரசியல் பதவிக்காக வரவில்லை. எனக்கென தனி உலகம் இருக்கின்றது. அதில் வாழ்கின்றேன். அட்ஜெஸ்மென்ட் பாலிடிக்ஸ் அண்ணாமலையிடம் கிடையாது. என்னால் யாருக்காகவும் மாறமுடியாது. தி.மு.க-வை புகழ்பாடவே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. கே.பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு கரும்புள்ளி. கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரியாக இருக்கின்றனர். தமிழக பா.ஜ.க தவறான பாதையில் செல்கிறது என யாராவது சொன்னால், அதற்கு நேர் எதிரான திசையில் கட்சி பயணிக்கும்.
ஒரே ஒரு தேர்தல், பா.ஜ.க 25 சதவிகித வாக்கு சதவிகிதத்தைக் காட்டி, தமிழகத்தின் அரசியலை தலைகீழாக மாற்றிவிடும். இந்தியாவில் பா.ஜ.க மட்டும் தான் சுத்தமான கட்சியாக இருக்கிறது. டெல்லி சென்றாலும் இப்படித்தான் இருப்பேன், போகாவிட்டாலும் இப்படித்தான் இருப்பேன். என்னை எல்லாரும் எதிர்க்கிறார்கள். அதுதான் என் வளர்ச்சிக்கு காரணம். நான் நேர்மையாக இருக்கிறேன். தமிழகத்தில் நிறைய இடங்களில் ஜெயிப்போம். அதனால் தான் பிற கட்சிகள் பயந்து போய் இருக்கின்றன. அ.தி.மு.க சொல்வதற்கு எல்லாம் நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம். தமிழகத்தின் பல இடங்களில் ஜெயிப்போம்" என்று கூறினார்.
from Latest news https://ift.tt/X2mOFTn
0 Comments