கனடாவில் கடந்த ஜூன் மாதம் சீக்கிய மதத் தலைவரும், காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுகொண்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைசெய்யப்பட்டதில், சீனாவின் பங்கு இருப்பதாக சீனாவைப் பூர்வீகமாகக்கொண்டு, அமெரிக்காவில் வசித்துவரும் பத்திரிகையாளர் ஜெனிஃபர் செங் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த விவகாரம் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இந்தியா - கனடா உறவில் சிக்கலை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் பிறந்த, மனித உரிமை ஆர்வலரும், பத்திரிகையாளருமான ஜெனிஃபர், தற்போது அமெரிக்காவில் வசித்துவருகிறார். 56 வயதாகும் இவர் `ஃபாலன் காங்’ (Falun Gong) எனப்படும் மத இயக்கத்தின் மூலம் பிரபலமானவர்.
ஜெனிஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில் `இக்னீஷன் பிளான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக ஹர்தீப் சிங் கொலைசெய்யப்பட்டார் என்று குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், அவர் இந்தியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம் என்கிறார்.
"சீக்கிய மதத் தலைவரான ஹர்தீப் சிங் கனடாவில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்த அதிர்ச்சியான தகவல்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (CCP) வெளியாகியிருக்கின்றன. சி.சி.பி ஏஜென்ட்டுகளால் இந்தப் படுகொலை நடந்ததாகக் கூறப்படுகிறது" என்கிறார்.
ஹர்தீப் சிங் இந்திய அரசாங்க ஏஜென்ட்டுகளால் கொலைசெய்யப்பட்டார் என்பதற்கு, தங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறிவந்த நிலையில், ஜெனிஃபரின் கருத்து தற்போது இந்திய, கனடா நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
`` `இக்னீஷன் பிளானின்' (Ignition Plan) ஒரு பகுதியாக ஹர்தீப் சிங்கைக் கொலைசெய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர். ஜூன் 18-ம் தேதி கனடாவுக்கு வந்த ஏஜென்ட்டுகள் ஹர்தீப்பைக் கண்காணித்து, சைலன்ஸர் தொழில்நுட்பம்கொண்ட துப்பாக்கியால் கொலைசெய்துவிட்டனர். பிறகு தடயங்களை அழிப்பதற்காக அவரது காரின் டேஷ்போர்டு கேமராவையும் அழித்துவிட்டனர். வேலை முடிந்ததும் மறுநாள் நாடு திரும்பிவிட்டனர்" என்று சீனாவின் திட்டத்தை விளக்குகிறார், ஜெனிஃபர்.
மேலும் கொலையில் ஈடுபட்டவர்கள், இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவது போன்ற வகையில் பேச பயிற்சி எடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்தியர்கள்தான் இந்தக் கொலையில் ஈடுபட்டனர் என நம்பவைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இருக்கும் உறவைக் கெடுப்பதுதான் சீனாவின் திட்டம் என்ற ஜெனீஃபரின் குற்றச்சாட்டுக்கு சீனாவிடமிருந்து இதுவரை அதிகாரபூர்வ பதில் எதுவும் வரவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/kluIKL1
0 Comments