அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உடல் சிதறி பலியாகினர். இதில் மகனையும் மருமகளையும் இழந்த 75 வயது மூதாட்டி கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பவர் தீபம் என்ற பெயரில் நாட்டு வெடி தயாரிக்கக்கூடிய பட்டாசு ஆலை நடத்திவருகிறார். ஆலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மெயின் ரோட்டில் யாழ் அண்ட் கோ என்ற பெயரில் வெடிகள் விற்பனை செய்வதற்கான கடையையும் நடத்திவருகிறார்.
இவருடைய ஆலையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள், தஞ்சாவூர் திருவையாறைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து பத்துப் பேர், விரகாலூர் கிராமத்திலுள்ள அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பத்துப் பேர் என ஆண்கள், பெண்கள் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்துவந்திருக்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், இரவு பகலாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றுவந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை 9:30 மணியளவில் ஆலையிலிருந்து வெடிகுண்டு வெடித்ததைப் போன்று சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகினர். அதன் பின்னரே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
ஒரு குடோனில் வெடி வெடித்து, தீ அடுத்த குடோனுக்கும் பரவியதால் அடுத்தடுத்த குடோன்களிலும் வெடித்தது. இதனால் பட்டாசுச் சத்தம் கேட்டுகொண்டே இருந்ததுடன் அந்த இடமே புகைமண்டலமாக மாறியது. உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன ஆனதோ எனப் பலரும் பதறினர். வெடி விபத்து ஏற்பட்ட தகவல் எங்கும் பரவியது. இதைத் தொடர்ந்து பல ஊர்களிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க மணிக்கணக்கில் போராடினர்.
தீ அணைத்த பிறகு பலரும் மீட்புப் பணியில் ஈடுப்பட்டனர். பலர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். உடனடியாக இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்தவர்கள், `காப்பாத்துங்க... காப்பாத்துங்க...’ என்று கதறினர். அவர்கள் மீட்கப்பட்டு தஞ்சாவூர் மற்றும் அரியலூரில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இந்தக் கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயமைடைந்தனர். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர்.
எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தன. பாலாயி என்ற மூதாட்டியின் மகன் ரவி, அவரின் மனைவி சிவகாமி இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அவர்களின் மகனுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் மகன், மருமகளைப் பறிகொடுத்த துக்கத்தில் பாலாயி, `ஐயோ ஐயோ' என கதறிக்கொண்டே `இனிமேல் எனக்கு யார் இருக்கா?’ என்று கலங்கித் துடித்தார்.
உறவினரை இழந்த பெண்கள் பலர், `முகத்தைக்கூடப் பார்க்க முடியாத சாவைக் கொடுத்துட்டியே கடவுளே... உனக்குக் கண்ணில்லையா?’ என மார்பில் அடித்துக்கொண்டு கதறியவர்களைத் தேற்ற முடியவில்லை. தீபாவளிப் பண்டிகைக்காக வெடி தயாரிக்கப்பதற்கான மருந்து அதிக அளவில் ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெடி தயாரிக்கப்பட்டு அங்கே இருந்திருக்கிறது. வெடியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து விசாரித்தபோது, `பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. தலை தனி, உடல் தனியாகவும் தூக்கி எறியப்பட்டுக் கிடந்தன. 11 மணிக்கு மேல் விபத்து ஏற்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை கூடுதலாக இருந்திருக்கும். பலர் காலை உணவு சாப்பிடச் சென்ற சமயத்தில் விபத்து ஏற்பட்டதால் சிலர் உயிர் பிழைத்தனர்.
சிவகாசியிலிருந்து வேலைக்கு வந்த சிலர், ``இந்த ஆலையில் எந்தப் பாதுகாப்பு வசதியும் இல்லை. வெடிகளுடனேயே இருக்கும் எங்களுக்கே இங்கிருக்கிற நிலையைப் பார்த்து நடுக்கம் உண்டாகிறது. இனி எங்களால் வேலை செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நாங்கள் உயிருடன் போவோமா என்பது சந்தேகம்தான்’’ எனக் கிளம்பியிருக்கின்றனர். ராஜேந்திரன் அவர்களிடம், `இரண்டு நாளில் நீங்கள் கிளம்பிவிடலாம்’’ எனக் கெஞ்சி இருக்கவைத்திருக்கிறார். அவர்கள் பயந்ததுபோலவே நடந்துவிட்டது.
ஆலையைச் சுற்றியிருக்கும் பழங்குடியினர், பட்டியலினத்தவர் பலர் ஆலையில் வேலை செய்தனர். இதில் அவர்களும் இறந்திருக்கின்றனர். உறவுகளைப் பறிகொடுத்த அவர்கள், ``எங்களுக்கு ஒண்ணு என்றால் யார் வருவார்கள், எங்களை மனிதர்களாகக்கூட யாரும் பார்ப்பதில்ல்லை. வயிற்றுப் பிழைப்புக்காகப் போன எங்க மக்களுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்’ எனச் சத்தம் போட்ட அவர்களை போலீஸார் அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர்.
விதிமுறைகள் பின்பற்றாததே இந்தக் கோர விபத்துக்குக் காரணம். கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆலையில் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அதன் பிறகு எப்படி விபத்து ஏற்பட்டது அல்லது அதிகாரிகள் கண்துடைப்புக்காக ஆய்வு செய்தார்களா என்பதும் கேள்வியாகியிருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக ராஜேந்திரன், அவரின் மருமகன் அருண் இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது’’ என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/aO0529w
0 Comments