"எம்.பி-யாக ஆக ஆசைப்பட்ட உங்களுக்கு எம்.எல்.ஏ பதவி கிடைத்திருக்கிறது, அது பற்றி?"
"கடந்த பாராளுமன்ற தேர்தலில் நான் மட்டும் தோல்வியடைந்தேன். அதன் பிறகு தேர்தலில் இனி நிற்க கூடாது என முடிவு செய்திருந்தேன். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக எனது மகன் திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மறு தேர்தல் வந்தது. அனைவரும் நான் நிற்க வேண்டும் என விரும்பினார்கள். அதில் கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு முதல்வர், தி.மு.க-வும்தான் காரணம்."
"வெற்றியில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு பங்கில்லையா?"
"சமீப காலமாக தி.மு.க கூட்டணியில் இருப்பதால்தான் நாங்கள் வெற்றி அடைகிறோம். தனியாக நின்றால் கேள்விக்குறிதான். காமராஜர், சிவாஜிக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸை கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லவில்லை. நான் உட்பட அதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். டெல்லிக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கிறது. இந்திரா காந்தி காலத்துக்கு முன்பு இருந்தது போல் மீண்டும் அந்தந்த மாநிலத்தில் செல்வாக்குடையவர்களுக்கு பொறுப்பு கொடுத்தால் கட்சி சுயமாக வளரும்."
"தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என நீதிமன்றம் கூறியிருக்கிறதே?"
"அங்கு போட்டியிட வேண்டும் என்பதற்காக ஓ.பி.ரவீந்திரநாத் இரண்டு ஆண்டுகளாக முன்பே கிராமந்தோறும் கோவில்களுக்கு பணம் கொடுத்தார். வாக்காளர்களுக்கு தலா ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை கொடுத்தார்கள். நான் ஈரோடு தொகுதியில்தான் நிற்கவே விரும்பினேன். ஆனால் தேர்தல் நேரத்தில் வைகோ அணிக்கு விட்டுத்தர வேண்டிய சூழல் வந்தது. இவ்வாறு பல காரணங்களை கூறினாலும், தோல்வி என்பது தோல்வி தான். அதில் இருந்து மீண்டு வருவதற்கு எனக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது."
"தேர்தலில் அ.தி.மு.க வினர் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறீர்கள்... ஈரோடு கிழக்கிலும் இதே குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது?"
"மனு தாக்கல் பத்திரத்தில் கையெழுத்திட்டது, பிரசாரம் செய்ததுடன் எனது கடமை முடிந்து விட்டது. தி.மு.க தான் மக்களை நேரடியாக சென்று சந்தித்தது. அவர்கள் பணம் கொடுத்தார்களா என்பது எனக்கு தெரியாது. மிக கடுமையாக உழைத்தார்கள்"
"தி.மு.க ஆட்சியில் நீங்கள் பார்க்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் என்னென்ன?"
"தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. அவர் மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் செய்யவேண்டியதெல்லாம் தமிழகத்தில் செய்து வருகிறார். கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்றால் அதற்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தியது. எனவேதான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது."
"கூட்டணியில் இருப்பதால் தி.மு.க செய்யும் அனைத்திற்கும் காங்கிரஸ் தலையாட்டுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறதே?"
"அவர்கள் நல்ல ஆட்சியை தந்து கொண்டிருப்பதால், விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நிதி நெருக்கடி இருப்பதால் உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி அதிகமாக கொடுக்கக்கூடிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் அதற்கேற்ற வகையில் நிதி ஒதுக்கப்படுவது இல்லை. அதற்கு நம்மை மாற்றான் தாய் பிள்ளையாக, மோடி அரசு பார்ப்பது தான் காரணம். விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்."
"ஆனால், தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என வருத்தப்படுவதாக பிரதமர் கூறுகிறாரே?"
"தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழராக பிறக்கவில்லை, ஆப்பிரிக்கா சென்றால் அங்கு பிறக்கவில்லை என வருத்தப்படுகிறேன் என்பார். ஒருவேளை அந்தமானில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றால், அங்கும் இதையேதான் சொல்வார். மக்களை ஏமாற்றுவதில் வல்லவராக இருக்கிறார். எனக்கு அவர் மீது நம்பிக்கையே கிடையாது. ஒரு குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர் எப்படி ஒரு நாட்டை காப்பாற்ற முடியும்?. இன்னொரு முறை அவர் பிரதமராக வந்தால் ஹிட்லர், முசோலினியாகத்தான் வருவார்."
"தமிழகத்தில் மோடி என்ற பிம்பத்தை வைத்து பா.ஜ.க தனித்து போட்டியிடுவதாக கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் தி.மு.க பின்னால் மட்டுமே செல்கிறதே?"
"அவர்களும் வாசனை வைத்து மிகப்பெரிய கூட்டணி, ஜான்பாண்டியனை வைத்து உன்னதமான கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அவருக்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வாக்கு வங்கி இருக்கிறது. நம்முடைய பாரிவேந்தர் போன்றவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்கள், மக்களின் ஆதரவு பெற்றவர்கள். அவர்களோடு இருப்பது மிகப்பெரிய கூட்டணி தானே?. தற்போது பாஜக, அதிமுக கூட்டணி முறிந்திருக்கிறது. என்றைக்கு வேண்டுமானாலும் அ.தி.மு.க-வின் காலரை பிடித்து தன் பக்கம் இழுத்து வருவார்கள். என்றைக்கும் பா.ஜ.க-வுக்கு அடிமையாகத்தான் அ.தி.மு.க இருக்கும்."
"தொண்டர்கள் எடுத்த முடிவால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக எடப்பாடி கூறுகிறாரே?"
"ஒரு கட்சியில் 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக சொன்னால் யார் நம்புவார்கள். மதுரை மாநாட்டில் புரட்சி தமிழர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். வரலாற்று சுவடுகளில் அந்த மாநாடு புளியோதரை மாநாடு என்று தான் வரும். மக்கள் கூடிய கூட்டமாக நான் அதை நினைக்கவில்லை."
"அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி முறிவால் தி.மு.க-விடம் கூடுதல் இடங்களை காங்கிரஸ் கேட்குமா?"
"காங்கிரஸ் - தி.மு.க இடையே இருப்பது கொள்கை கூட்டணி. அசிங்கமாக பேரம் பேசமாட்டோம். நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்."
"காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவில் வெவ்வேறு நிலைப்பாட்டை காங்கிரஸ் கொண்டிருக்கிறதே?"
"நாடு முழுவதும் இருக்கும் பிரச்னைகளுக்கு நாங்கள் ஒருமித்த கருத்துடன் இருப்போம். மாநில பிரச்னைகளுக்கு, அந்தந்த மாநிலத்தின் நலனைத்தான் பார்ப்பார்கள். இருப்பினும் அவர்கள் செய்வது சரியல்ல. இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கார்கே, ராகுல், சோனியா காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், இதில் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது. ஏனெனில் இது கட்சி பிரச்னை அல்ல. இரண்டு மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் பிரச்னை. பிரதமர் தான் இதை தீர்த்து வைக்க வேண்டும். ஆனால் அவர் சிண்டு முடிந்துவிடும் வேலையை செய்து வருகிறார். இது உயர்ந்த பதவிக்கு லாயக்கு இல்லை. பிரதமராக இருப்பதற்கு தகுதியே இல்லை. இதற்கு உச்ச நீதிமன்றம் தான் சரியான தீர்வை காண முடியும். எனவேதான் நாம் அங்கு சென்றிருக்கிறோம்."
"தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகிறதே?"
"அவர் 5 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருக்கிறார். தற்போது யாரை தலைவராக நியமித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என கூறிவிட்டார். விரைவில் மாற்றம் வரும் என நினைக்கின்றேன். இன்னும் கொஞ்சம் வேகமாக செயல்பட்டு இருக்கலாம். மோடிக்கும், பா.ஜ.க-வுக்கும் பதில் சொல்வதில் திமுக காட்டும் வேகம் காங்கிரஸிடம் இல்லை என்பது குறைபாடு தான். தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை சொல்வதில், 75 சதவீதம் பொய் இருக்கிறது. 20 ஆயரம் புத்தகம் படித்தவர் என்கிறார். அவ்வளவு படித்தவர்கள் இப்படி நடந்து கொள்வார்களா என எனக்கு தெரியவில்லை. அனைத்தும் தெரிந்தது போல் செயல்படுகிறார். அது நீண்ட நாட்களுக்கு தாங்காது. விரைவில் தூக்கி எறியப்படுவார்."
"ராகுல் காந்தி கைதை கண்டித்து மூன்று பேருடன் அழகிரி ரயில் மறியல் போராட்டம் நடத்தி இருக்கிறாரே?"
"ஒரு ஆளே ரயிலை நிறுத்தலாம். ஒருவேளை மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதற்காக செய்திருக்கலாம். ரயிலை நிறுத்த வேண்டும் என்பது குறிக்கோள். அது செய்தாகிவிட்டது. இன்னும் காங்கிரஸ் வேகமாக செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கார்த்தி சிதம்பரம், விஷ்ணு பிரசாத் போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். திருநாவுக்கரசர் போன்ற நல்ல தலைவர்களும் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு வேலை கொடுத்தால் செய்வார்கள்."
"தமிழக அரசியலில் யாருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் என நினைக்கிறீர்கள்?"
"உதயநிதி ஸ்டாலினுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மக்களின் நாடியை பிடிக்க தெரிந்தவராக இருக்கிறார். கொள்கையில் உறுதியாக நிற்கிறார். அரசியலுக்கு வரவில்லை என்றாலும் சினிமாவில் பெரிய ஜாம்பவானாக வந்திருப்பார். கனிமொழிக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் கார்த்தி சிதம்பரம், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி ஆகியோர் இருக்கிறார்கள்."
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/H4BEuhS
0 Comments