Doctor Vikatan: என் மகளுக்கு 10 வயதாகிறது. அவளுக்கு கீரை, காய்கறிகள் என எதுவும் பிடிப்பதில்லை. உருளைக்கிழங்கு, சிப்ஸ், பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மட்டும்தான் விரும்பி உண்கிறாள். அவளை காய்கறிகள் சாப்பிடவைக்க என்ன செய்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
குழந்தைகள் எப்போதும் ஜங்க் உணவுகளாகவே சாப்பிடுகிறார்கள் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் புலம்பலாக இருக்கிறது. அவர்கள் விரும்பும் ஜங்க் உணவுகளையே ஆரோக்கியமாக மாற்றிக் கொடுக்க முடியும்.
பெரும்பாலான குழந்தைகளின் சாய்ஸ் உருளைக்கிழங்காகவே இருக்கும். மூன்று வேளைகளுக்கும் உருளைக்கிழங்கு செய்து கொடுத்தாலும் அலுக்காமல் சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்குக்கு பதில், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், டோஸ்ட், ஏர் ஃப்ரை போன்றவற்றை க்ரிஸ்பியாக செய்து கொடுக்கலாம். கட்லட் செய்ய உருளைக்கிழங்குக்கு பதில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கோடு ஒப்பிடும்போது சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆரோக்கியமானது.
புதினா, கொத்தமல்லி சட்னி செய்து வைத்துக்கொள்ளுங்கள். சாண்ட்விச் செய்து கொடுக்கும்போது இந்த சட்னியை தாராளமாகத் தடவி, உள்ளே காய்கறிகள், முட்டை அல்லது சிக்கன் போன்றவற்றில் ஒன்றை ஃபில்லிங்காக வைத்துக் கொடுக்கலாம். இதை க்ரில் செய்து கொடுக்கும்போது குழந்தைகள் நிச்சயம் விரும்பிச் சாப்பிடுவார்கள். நிறைய காய்கறிகளை வேகவைத்து மசித்து பாஸ்தா சாஸ் அல்லது சாம்பாருடன் , கிரேவியுடன் சேர்த்துவிடுங்கள். இப்படிக் கொடுக்கும்போது காய்கறிகள் சேர்த்ததே தெரியாது என்பதால் குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.
பர்கர் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்தால், காராமணி, கொண்டைக்கடலை, ராஜ்மா போன்றவற்றை நன்கு ஊறவைத்து, வேகவைத்து மசித்து, உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் சேர்த்து கட்லட் செய்து பர்கர் உள்ளே வைத்துக் கொடுக்கலாம். பீட்ஸா செய்யும்போது நிறைய காய்கறிகள் சேர்க்கலாம். பீட்ஸா சாஸ் உடன் சேர்த்துக் கொடுக்கலாம். டாப்பிங் செய்ய சிக்கன் துண்டுகள் அல்லது பனீர் துண்டுகள் சேர்க்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest news https://ift.tt/OhoZ3Sn
0 Comments