திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் மனநிலைப் பாதிக்கப்பட்டவர். அவரின் பெற்றோர் தினமும் கூலிவேலைக்குச் செல்லும் போது, வீட்டில் அந்தப் பெண் மட்டும் தனியாக இருப்பார். இதைத் தெரிந்துகொண்ட அதே ஊரைச் சேர்ந்த 60 வயதான கோவிந்தன், 52 வயதான மாணிக்கம் ஆகிய இருவரும், அடிக்கடி வீட்டுக்குச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண் கர்ப்பமடைந்திருக்கிறார். நாளடைவில் வயிறு பெரிதாக, மகளை மருத்துவர்களிடம் அழைத்துச்சென்று பரிசோதித்தபோதுதான், அவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதிர்ந்துபோன பெற்றோர், 0வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸில் கடந்த 5-ம் தேதி புகாரளித்தனர். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில், கோவிந்தன், மாணிக்கம் இருவர் மீதான புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துப் பேசும் கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை மிரட்டியிருக்கின்றனர். காவல் நிலையத்தில், அதுவும் இன்ஸ்பெக்டர் முன்னிலையிலேயே மிரட்டிப் புகாரை திரும்பப் பெறச்செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஊர்ப் பஞ்சாயத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நிறுத்தி, பாலியல் புகாரில் சிக்கிய இருவரிடமும் தலா ரூ.4 லட்சம் அபராதம் செலுத்தச்சொல்லி முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூக ஊடகங்கள் மூலம் வெளியில் கசியவே, அசிங்கப்பட்டு வேதனைக்குள்ளான பாலியல் குற்றவாளிகளில் ஒருவரான மாணிக்கம் நேற்றைய தினம் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைச் செய்துகொண்டார்.
இதையறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, திருப்பத்தூர் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேற்று இரவு வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கே சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டதுதொடர்பாக உடனடியாக வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்டனர். அதன்படி, வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே மெத்தனமாகவும், கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக நாட்றம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பொறுப்பேற்றவுடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மலர் தீவிரப்படுத்தியிருக்கிறார். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest news https://ift.tt/OWZE9T5
0 Comments