Israel-Hamas War: இஸ்ரேலுடன் கைகோக்கிறதா அமெரிக்க 'டெல்டா' படை? - `போர்' பூமியில் நடப்பதென்ன?

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் கடந்த 7-ம் தேதி காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் திடீர்த் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 220 பேர் வரை சிறைப்பிடிக்கப்பட்டு காஸாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்புமீது போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே இரண்டு வாரங்களுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

காஸா மீது தாக்குதல்

14,000-க்கும் மேற்பட்டோர் இந்தப் போரில், இதுவரை காயமடைந்திருக்கின்றனர். குறிப்பாக கடந்த 36 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 117 குழந்தைகள் உட்பட 266 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் இதுவரை வான்வழித் தாக்குதல் மட்டுமே நடத்திவந்த இஸ்ரேல் ராணுவம், தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கு வசதியாகத் தனது துருப்புகளை எல்லையில் குவித்துவருகிறது, அந்த நாடு. மேலும், இந்தப் போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் இஸ்ரேலுக்கு, தனது மிகவும் சக்திவாய்ந்த 'தாட்' எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை அனுப்பிவைத்திருக்கிறது அமெரிக்கா. இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையும் காஸாவுக்குள் நுழையவிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதில், 13,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் நவீன தாக்குதல் அமைப்புகளை அனுப்பிவைத்திருப்பது, போரை மேலும் தீவிரமடையச் செய்திருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். ஆனால், அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பில் இது குறித்த தகவல் ஏதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்கா - இஸ்ரேல்

இது குறித்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, "இந்தப் போரில் ஹிஸ்புல்லாக்கள் இணைவார்களேயானால் அது இரண்டாவது லெபனான் போருக்கு வழிவகுக்கும். அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தவற்றைச் செய்கிறார்கள். இந்த முயற்சி, லெபனானுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும். இந்தப் போர் இஸ்ரேலுக்கு வாழ்வா... சாவா போன்றது" என எச்சரித்திருக்கிறார். "ஹிஸ்புல்லாக்கள் மிகவும் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் நிலைமையை மேலும் தீவிரமாக்குகிறார்கள்" என அந்த நாட்டின் ராணுவ செய்தித் தொடப்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ் வேதனை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இரானின் உயர் தூதரக அதிகாரி ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன், "இஸ்ரேலும், அமெரிக்காவும் காஸாமீதான இனப்படுகொலைத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பிராந்தியம் கட்டுப்பாட்டை மீறியதாக மாறிவிடும்" எனக் கூறியிருக்கிறார். "இந்த நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு யாரும் இஸ்ரேல் மீதோ, எங்களின் துருப்புகள்மீதோ தாக்குதல் நடத்தக் கூடாது.

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு

அவ்வாறு தாக்குதல் அதிகாரித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்" என எச்சரித்திருக்கிறார், அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் அந்தோணி பிலின்கன். மறுபுறம் சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் தொண்டு அமைப்புகள் சார்பில் சரக்கு விமானங்கள் மூலம் எகிப்தின் அல் ஆரிஷ் விமான நிலையத்துக்கு சுமார் 3,000 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அங்கிருந்து அவை காஸாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.



from Latest news https://ift.tt/6E7HfG5

Post a Comment

0 Comments