சேப்பாக்கத்தில் ஒரு புது வரலாறை படைத்திருக்கிறது ஆஃப்கானிஸ்தான் அணி. பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ரொம்பவே சௌகரியமாக ஆஃப்கானிஸ்தான் அணி வென்றிருக்கிறது.
தொடர்ந்து இன்னல்களில் உழன்று கொண்டிருக்கும் தங்கள் தேசத்தின் மக்களுக்காக இந்த வெற்றியை சமர்பித்திருக்கிறது ஆஃப்கன் அணி. வலுவான பாகிஸ்தான் அணியை ஆஃப்கன் வீழ்த்த செய்த அந்த வியூகம் என்ன?
ஆஃப்கன் அணியை பொறுத்தவரைக்கும் இந்திய மைதானங்கள் ஒன்றும் அவர்களுக்குப் புதிதல்ல. அவர்களின் முக்கியமான வீரர்கள் அத்தனை பேருமே ஐ.பி.எல் தொடரில் பல்வேறு அணிகளுக்காகவும் ஆடியிருக்கிறார்கள். மேலும், கடந்த காலங்களில் சில ஆண்டுகளுக்கு ஆஃப்கன் அணியின் 'Home Ground' ஆகவும் இந்தியா இருந்திருக்கிறது. அதுபோக, 2019 உலகக்கோப்பைக்கு முன்பாக கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி சென்னையிலேயே தங்கியிருந்து சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்தது. ஆக, சேப்பாக்கம் என்பது அவர்களுக்கு அந்நியமான மைதானம் கிடையாது. மேலும், நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியையும் ஆஃப்கானிஸ்தான் அணி சேப்பாக்கத்தில்தான் ஆடியிருந்தது. கடந்த ஒரு வாரமாக ஆஃப்கன் அணி சேப்பாக்கம் மைதானத்திலேயேதான் இருக்கிறது.
ஆனால், பாகிஸ்தான் அணியோ போட்டிக்கு முந்தைய நாள்தான் சேப்பாக்கம் மைதானத்திற்கே வந்து சேர்ந்தது. ஒரே ஒரு பயிற்சி செஷனை மட்டும்தான் பாகிஸ்தான் அணி செய்திருந்தது. ஏறக்குறைய மூன்றிலிருந்து நான்கு மணி நேரங்கள் பயிற்சி செய்திருப்பார்கள் அவ்வளவுதான். ஆஃப்கானிஸ்தானுக்கு மைதான சூழலைப் புரிந்துகொள்ளவும் பயிற்சி செய்யவும் பாகிஸ்தானைவிட ரொம்பவே அதிக நேரம் கிடைத்திருந்தது.
மேலும், இந்த உலகக்கோப்பைப் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்ட போதே பாகிஸ்தான் Vs ஆஃப்கானிஸ்தான் போட்டி சென்னையில் திட்டமிடப்பட்டிருப்பதை அறிந்து வேறு மைதானத்திற்கு போட்டியை மாற்றுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஒருவேளை ஆஃப்கானிஸ்தானின் மிரட்டலான ஸ்பின்னர்கள்தான் பாகிஸ்தானின் பதற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
இந்தப் போட்டியின் வெற்றிக்கான ப்ளூ ப்ரின்ட்டை ஆஃப்கானிஸ்தான் அணி இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியிலிருந்த கூறுகளைக் கொண்டே வரைந்திருந்தது. இந்தியா - பாகிஸ்தான் மோதிய அந்தப் போட்டியில் இந்தியா சார்பில் சைனாமேன் பௌலரான குல்தீப் யாதவ் 10 ஓவர்களை வீசி வெறும் 35 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இங்கிருந்துதான் ஆஃப்கானிஸ்தானுக்கு பொறி தட்டியது.
சேப்பாக்கத்தில் நான்கைந்து நாட்களுக்கு முன்பு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தானின் மூன்று ஸ்பின்னர்களான ரஷீத் கான், முஜீப், நபி என மூவரும் இணைந்து 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தனர். சேப்பாக்கத்தில் ஸ்பின்னர்கள்தான் துருப்புச்சீட்டு. அப்படியிருக்க அணியின் முக்கிய ஸ்பின்னர்கள் மூவரும் சரியாக செயல்படாத நிலையில் சர்ப்ரைஸாக நான்காவதாக ஒரு ஸ்பின்னரை லெவனுக்குள் கொண்டு வந்தனர். அவர்தான் நூர் அகமது. சைனாமேன் பௌலர். ஏற்கெனவே இந்தியாவிற்கு எதிராக குல்தீப்பிடம் பாகிஸ்தான் திணறியதுதான் நூரை லெவனுக்குள் எடுக்கக் காரணமாக இருந்தது.
நூர் எதற்காக எடுக்கப்பட்டாரோ அந்த வேலையை மிகச் சரியாக செய்து முடித்தார். 10 ஓவர்களை முழுமையாக வீசிய நூர் அகமது 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார்.
ஓப்பனரான சஃபீக்கையும் நன்கு செட்டில் ஆகியிருந்த கேப்டன் பாபர் அசாமையும் சரியான சமயத்தில் வீழ்த்திக் கொடுத்தார். முகமது ரிஸ்வான் இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் அடித்திருக்கிறார். மிடில் ஓவர்களில் ரிஸ்வானின் நிதான ஆட்டத்தைதான் பாகிஸ்தான் பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், அவரையும் செட்டில் ஆவதற்குள் வெறும் 8 ரன்களிலேயே வீழ்த்தினார் நூர். இவரைத் தவிர மற்று மூன்று ஸ்பின்னர்களும் இணைந்தே ஒரே ஒரு விக்கெட்டைதான் எடுத்திருந்தனர். ஆனால், நபியும் ரஷீத்கானும் எக்கனாமிக்கலாகவே வீசியிருந்தனர்.
நபயின் எக்கானமி ரேட் 3.1 ஆகவும் ரஷீத்தின் எக்கானமி 4.1 ஆகவுமே இருந்தது. நூருக்கு விக்கெட்டுகள் கிடைக்க இவர்கள் இருவருமே காரணமாக இருந்தனர். வீசிய 50 ஒவர்களில் 38 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்தே வீசியிருக்கின்றனர்.
உலகக்கோப்பை வரலாற்றிலேயே இத்தனை அதிக ஓவர்களை ஸ்பின்னர்களுக்கு கொடுத்து வெற்றியையும் பெற்ற ஒரே அணி ஆஃப்கானிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியில் பாகிஸ்தான் பேட்டர்கள் கொஞ்சம் அதிகமாக ரன்கள் சேர்த்திருந்தாலும் 300 ரன்களை அவர்களால் தாண்ட முடியவில்லை. 282 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். ஆஃப்கானிஸ்தான் சேஸிங்கில் அத்தனை வலுவான அணி இல்லை. ஒரு திட்டமிடலே இல்லாமல் ஆடி பயங்கரமாக சொதப்புவார்கள். ஆனால், இந்தப் போட்டி அதற்கு விதிவிலக்கு. இந்தியாவிற்கு எதிராக 270+ ஸ்கோரையும் இங்கிலாந்துக்கு எதிராக 280+ ஸ்கோரையும் ஆஃப்கன் எடுத்திருக்கும். ஆனாலும் ஏதோ ஒரு இரண்டு பேட்டர்கள் மட்டுமே நன்றாக ஆடியிருப்பார்கள். மற்றவர்களெல்லாம் அவசரகதியில் வீழ்ந்து சொதப்பியிருப்பார்கள். இந்தப் போட்டியில் அப்படியில்லை. இப்ராஹிம் சத்ரான், குர்பாஸ், ரஹ்மத், ஷாகிதி என ஆடியவர்கள் நான்கு பேருமே பக்குவமாக ஆடி வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருந்தனர்
'இந்தப் போட்டியை நம்மால் 35-40 ஓவர்களில் வெல்ல முடியாது. கடைசி வரை நின்றால் மட்டுமே சுமுகமாக வெல்ல முடியும். அதற்கேற்ப ஆடுங்கள்!' இன்னிங்ஸ் ப்ரேக்கில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட் பேட்டர்களுக்கு சொன்ன மெசேஜ் இதுதான்.
இதை அப்படியே ஆஃப்கன் பேட்டர்கள் கச்சிதமாகக் கடைபிடித்தனர். எந்த இடத்திலும் ஸ்கோருக்கான அவசரத்தை காட்டவே இல்லை. அதேநேரத்தில் ஓவருக்கு 6 ரன்கள் என்பதைத் தொடக்கத்திலிருந்தே மெயின்டெயின் செய்து வந்தனர். அதனாலுமே எந்த இடத்திலுமே ரன்ரேட் அழுத்தம் ஏறி அதற்காக ஆட வேண்டிய தேவையும் ஏற்படவில்லை. ட்ராட் சொன்னதைப் போலவே சுமூகமாக சேஸிங்கை முடித்தனர் ஆஃப்கன் பௌலர்கள்.
சென்னை சேப்பாக்கம் மைதானம் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளை கடந்து வந்திருக்கிறது. அந்தவரிசையில் இப்போது ஆஃப்கனும் தங்களது பெயருக்கு நேராக ஒரு வரலாற்று சம்பவத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளது.
from Latest news https://ift.tt/4uf0BoR
0 Comments