வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
‘நல்ல வெயில் காலைல எவ்வளவு வெயிலிருக்குமோ அந்த அளவு, ராத்திரி குளிர் இருக்குமாமே?!’ யோசித்தபடியே தன் டூவீலரை அந்த பனைமரத்தடி பதனிக்காரன் முன் நிறுத்தினான்.
‘இளம் நொங்கோட பதனி வெட்டிக் குடு! இளசா போடு..! கல் நொங்கைப் போட்டுடாதே!’ என்ற அவன், தனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம்தான்.’ என்றான். எதுக்கு பதினிக்குப்போய், சொந்த ஊர் பெருமையெல்லாம்னு நினைக்க வேண்டாம்! அங்க, ‘கல்லூர்’ பதனிக்கே பேர்போன ஊர். அதுனாலதான் இத்தனையும் . அதுமட்டுமில்லே பேச்சு வாக்கில், பதனிக்காரனுக்கும் சுரண்டை, திருநெல்வேலிக்குப் பக்கம்னும் தெரிஞ்சுட்டதால , ஒரே ஊர் பக்தி ஒட்டிக்கிச்சு!
‘எல்லாருமே இளம் நொங்கா கேட்டா எப்படி?’ என்றான்.
‘இங்க வந்து எங்க குடியிருக்கே…?’ பதனிக்காரனைக் கேட்டான் அவன்.
பொள்ளாச்சி பக்கம் ரூம்ல குடியிருக்கோம்…! சீசன் முடிஞ்சா ஊரைப் பார்க்க ஓடிப் போயிடுவோம்.
‘என்ன படிச்சிருக்கே..?!
பத்து படிச்சுட்டு, வேலைக்கு வந்துட்டேன்!’
‘ஏன் ..? காலேஜ் படிச்சு, எஞ்சினியராயிருந்தா கைநிறைய சம்பாதிக்கலாமே?’ கேட்டான் அவன்.
‘ஏன் எனக்கென்ன கொறைச்சல்….??!!’
கொறைச்சலுக்குக் கேக்கலை.. இஞ்சினீரின்னா ஒரு கெத்து இருக்குமே? இப்படி ஊர்விட்டு ஊர்வந்து கஷ்டப்பட வேண்டாமே, ஏசியில கூலா இருக்கலாமே! அதான்’ என்றான்.
‘இஞ்சினீரிங்க் கம்பெனிக்காரங்களை மாதிரிதான், எங்களையும் வேன்ல கூட்டிட்டு வந்து உட்டுடறாங்க,வேலை முடிஞ்சா, சாய்ந்தரம் வந்து வேன்ல கூட்டிட்டுப் போயிடுறாங்க! காப்பி, டிபன், சாப்பாடு தராங்க. தங்க எடம் ஃபிரீ! மாசமானா, சுளையா முப்பதாயிரம் கொடுத்துடுவாங்க! எல்லாம் எஞ்சினீரிங்க் படிச்சவங்கள மாதிரியேதான். அவங்களும் ஊர்விட்டு ஊர்வந்துதான் வேலை பார்க்கறாங்க, நாங்களும் அப்படித்தான்.
என்ன?, எஞ்சினீரிங்க் வேலை பார்க்கறவன், ஏ.சில கூலா இருக்கறதுக்கும் , பதனி வேண்டி வந்தங்களையே ‘கூலாக்கி’ அனுப்பி வைக்கறதுக்கும் வித்யாசமிருக்கில்ல?!, அந்த விஷயத்தில் அவங்களைவிட, நாங்க எத்தனையோ மேல்! எங்களுக்கும் அதே ‘கெத்து, கிர்ர்’ எல்லாம் உண்டு! என்றவன் தன் பேர் தினேஷ் என்றான்.
‘ அதெல்லாம் சரி தினேஷ்.., திடீர்னு வேலையைவிட்டு அனுப்பிட்டா?
இஞ்சினீரிங்குல கூட, திடீர்னு வேலைய விட்டு அனுப்பிட வாய்ப்பிருக்கு. எங்களுக்குக் கைல தொழில் இருக்கறதுனாலயும், இதை, வேற டிப்ளமோ, டிகிரி படிச்சவனெல்லாம் செய்ய முடியாதுங்கறதுனாலயும் அந்த பயம் எங்களுக்குக் கிடையாது.’ என்றான் உறுதியாக.
‘நீங்க சொல்ற ‘எஞ்சினீரிங்க்’ , கம்யூட்டர்ல வேலை பார்க்கறது!… இது கத்தில வேலை பார்க்கிறது! ரெண்டும் ஒண்ணுதான். கம்ப்யூட்டர் வேலைல சீனியர்க்கும், டீம் லீடருக்கும் சலாம் போடணும்…! இது, சீவறதுங்கறதுனால எங்களுக்கு அந்த பிரச்சனையும் கிடையாது!.
செய்யற வேலைல என்ன சார் இருக்கு?! செய்யும் தொழிலே தெய்வமில்லையா? செய்யறதை ஈடுபாட்டோட செஞ்சா நமக்கு எல்லாரும் சலாம் போடுவாங்க!’ எனறான் உறுதியாக.
பதினி குடிச்ச திருப்தியோடு ‘செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம்கற’ அவன் பட்டறிவு ஞானத்தையும் மெச்சி, அவன் மனதின் உறுதிக்கும் தலை வணங்கறா மாதிரி ஒரு ‘சலாம்’ போட்டுவிட்டு, டூவிலரை எடுத்தான் அவன்.
******
-வளர்கவி, கோவை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
from Latest news https://ift.tt/c4uWtLi
0 Comments