பழைய ஏசி எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினால் லாபம்? - சர்வீஸ் என்ஜினியர் வழங்கும் டிப்ஸ்...

'இப்போ வெயில் காலம் இல்லைல...அதிக காசு கொடுத்து புது ஏசி வாங்கறத விட, செக்கண்ட் ஹேண்ட் ஏ.சி வாங்கிகலாம்' என்ற பிளான் ஏதாவது வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் பழைய ஏ.சி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினால் லாபம்? போன்ற A டூ Z டிப்ஸ் தருகிறார் சர்வீஸ் இன்ஜினீயர் சி.வெங்கடேஸ்வரன்...

சர்வீஸ் இன்ஜினீயர் சி.வெங்கடேஸ்வரன்

"பொதுவாக ஒரு ஏசியின் குறைந்தபட்ச ஆயுள்காலம் 10 ஆண்டுகள். இதை வைத்தே எவ்வளவு ஆண்டுகள் பயன்படுத்திய ஏசியை வாங்கலாம் என்பதை எளிதாக கணித்துக்கொள்ளலாம். உதாரணமாக ஏற்கனவே 8 ஆண்டுகள் பயன்படுத்திய ஏசியை ரூ.10,000-க்கு வாங்கினால் நமக்கு தான் நஷ்டம். அதனால் ஒரு பழைய ஏசியை வாங்குவதற்கு முன்பு எவ்வளவு ஆண்டுகள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். இது ஏசி-க்கு மட்டுமல்லாமல் அனைத்து பொருள்களுக்குமே பொருந்தும்.

'இந்த ஏசி வாங்கி எவ்வளவு வருஷம் ஆச்சு-ன்னு விக்கறவங்க கிட்ட தான் கேட்க முடியும். அவங்க உண்மை தான் சொல்றாங்களா-ன்னு நமக்கு எப்படி தெரியும்?' என்று தானே யோசிக்கிறீர்கள். ஏசியை வாங்க பார்க்க போகும்போதே 'அது எந்த ஆண்டு மாடல்?' என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். ஒரு மாடலை ஷோ ரூம்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே விற்கும். உதாரணமாக 2020-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஏ.சி, 2022-ம் ஆண்டு வரை மட்டுமே ஷோ ரூமில் விற்கப்படும். இதை வைத்து நீங்கள் வாங்கப்போகும் ஏ.சியின் முன்னாள் ஓனர், அதை வாங்கி எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? என்பதை எளிதாக கணித்துவிடலாம்.

ஏ.சி

இந்த ஆண்டு பழைய ஏசி வாங்குகிறீர்கள் என்றால் 2017-ம் ஆண்டுக்கு மேலுள்ள மாடல் ஏ.சியை வாங்குங்கள். 2017-ம் ஆண்டிற்கு முன்னால் வாங்கப்பட்ட ஏசியை வாங்கவே வாங்காதீர்கள்.

ஏசியில் அலுமினியம் காயில், காப்பர் காயில் என காயில் இரு வகைப்படும். அலுமினியம் காயிலின் ஆயுட்காலம் 3-4 ஆண்டுகள். காப்பர் காயிலின் ஆயுட்காலம் 7-8 ஆண்டுகள். அதனால் பழைய ஏசி வாங்கும்போது அலுமினியம் காயில் ஏசியை யோசனையின்றி தவிர்த்துவிடுங்கள்.

கம்ப்ரசர் - ஏசியில் மிகவும் முக்கியமான ஒன்று. பெரும்பாலும் வீட்டில் 1.0 டன் ஏசி மற்றும் 1.5 டன் ஏசியை தான் அதிகம் பயன்படுத்துவார்கள். 1.0 டன் ஏசி 5-7 ஓம்ஸ்(ohms) கரண்ட் பயன்படுத்தலாம்...1.5 டன் ஏசி 6.5-8.5 ஓம்ஸ் கரண்ட் பயன்படுத்தலாம். இதுதான் கம்ப்ரசர் நல்ல நிலையில் உள்ளதற்கான அறிகுறி. இந்த அளவுக்கு மேல் கம்ப்ரசர் ஓம்ஸை பயன்படுத்தினால் கரண்ட் பில் எகிறிவிடும். மேலும் கம்ப்ரசர் அதிக சத்தம் ஏற்படுத்தினாலும், அது சீக்கிரம் போய்விடும். ஏசியில் வேறு எந்த பொருள் மாற்றுவதாக இருந்தாலும் ரூ.2,500-3,000 தான் ஆகும். ஆனால் கம்ப்ரசரின் விலை ரூ.12,000 ஆகும். அதனால் கம்ப்ரசரை கவனிப்பது மிக மிக முக்கியம். கூலிங் காயில் வளையாமல் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குங்கள். அது வளைந்திருந்தால் கூலிங் வராது.

கூலிங் வராது...பாத்துக்கோங்க!

புதிய ஏசி வாங்க ரூ.35,000 ஆகும். பழைய ஏசியை ரூ.8,000-16,000-குள் வாங்குவது தான் நல்லது. வாங்கி 3-5 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருக்கும் ஏசி நல்ல சாய்ஸ். 'கம்ப்ரசர், கூலிங் காயில்-ன்னு ஏகப்பட்டதை சொல்றீங்க...அதை நாங்க எப்படி கண்டுபிடிக்கறது?' என்று நினைத்தால் பழைய ஏசி வாங்க போகும்போது டெக்னீசினியனை மறக்காமல் அழைத்துச் செல்லுங்கள்" என்கிறார்.



from Latest news https://ift.tt/V6tlJOC

Post a Comment

0 Comments