உள்ளங்கள்! - சிறுகதை |My Vikatan

`வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கதவைத் திறந்த சுந்தரம் அந்தக் காட்சியைக் கண்டதும் அப்படியே மயங்கிக் கீழே விழுந்து விட்டார். மாடியிலுள்ள மகனின் அறைக்குச் சென்ற தன் கணவர் இவ்வளவு நேரமாக அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று வியந்தபடி, சற்றே கனத்த உருவத்தைக் கொண்ட கனகா மெல்லப் படியேறி மேலே வந்தார்.

திறந்திருந்த கதவிற்கருகில் கணவர் மூர்ச்சையாகிக் கிடந்ததைக் கண்ட அவர் ‘என்னங்க’ என்று பெருங்குரலில் கூச்சலிட, கூச்சலிட்டபடியே மேலே பார்த்த அவர் ‘ஐயோ ஆனந்த்’ என்றபடி பெருங்குரலில் கத்தியபடி மயங்கி விழ, இந்த சத்தங்களைக் கேட்ட வேலைக்கார அம்மாவும், அக்கம் பக்கத்து வீட்டவர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடி வர, அந்த வீட்டில் பெரும் பரபரப்பு பற்றிக் கொண்டது.

அவர்கள் அனைவரும் கண்ட காட்சி அவர்களையே நிலை குலைய வைத்தது என்றால், பெற்றோர்கள் மயங்கிப் போனதில் ஆச்சரியமில்லைதான். ஆம்! மயக்கத்தில் கிடந்த அந்தப் பெற்றோரின் ஒரே மகன், அறையின் நடுவில் இருந்த மின் விசிறியில் வேட்டியால் கட்டிய தூக்குக் கயிற்றில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் கூட்டம் கூடி விட்டது. அழைக்கப்பட்ட மருத்துவர் வந்து செய்த சிகிச்சையால் பெற்றோர் மயக்கத்திலிருந்து விழித்தாலும், ஒற்றை மகனின் தற்கொலை அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அவர்கள் உடம்பில் அழக் கூடத் தெம்பில்லை!

Representational Image

போட்டித் தேர்வுக்கு முதன்முறையாகச் சென்ற ஆனந்த் வெற்றியை எதிர் பார்த்துக் காத்திருக்க, காலையிலேயே ‘ஜிம்’முக்குச் சென்றிருந்த அவனிடம், அவன் நண்பர்கள் அன்றைக்குக் காலையே போட்டித் தேர்வின் முடிவுகள் வெளியாவதைத் தெரிவிக்க, அவசரமாக வீடு திரும்பிய அவன் தன் அறையில் அமர்ந்து லேப்டாப்பில் முடிவுகளைப் பார்த்திருக்கிறான். தோல்வி என்று தெரிந்ததும், கப்போர்டில் இருந்த தந்தையின் வேட்டியை எடுத்து மின் விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான்!

போலீஸ் வந்து உடலை அப்புறப்படுத்தினார்கள். அவன் அறையில் ஜிம்மில் எடுக்கப்பட்ட அவன் புகைப்படங்களும், உடல் அழகுக்காக அவன் வாங்கிய கோப்பைகளும் அழகு காட்டின!ஆணழகன் போட்டியில் அவன் வாங்கிய பதக்கங்களும், பாராட்டுப் பத்திரங்களும் கண்ணாடி பீரோவுக்குள் அடை காத்துக் கொண்டிருந்தன!

உறவினர்களும், நண்பர்களும் சேர்ந்து அந்த மகனையிழந்த பெற்றோரை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார்கள்!திக்பிரமை பிடித்தாற்போல் அந்தப் பெற்றோர் அமர்ந்திருக்க, அடுத்துச் செய்ய வேண்டியவற்றைப் பற்றி உறவினர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

Representational Image

பக்கத்துத் தெருவின் அந்தக் குடிசை வீட்டின் வாசலில் பிரஸ் பீப்பிள் திடீரெனக் கூடினார்கள். தெருவில் இருந்தவர்கள் ‘என்ன நம்ம ஊன ரவி வீட்டு வாசல்ல ஒரே கூட்டமா இருக்கு?’ என்று கேட்டபடி ஒவ்வொருவராக அங்கு வர, அதுவே பெருங்கூட்டமாயிற்று! காமிரா மேன்களும், பல சானல்களின் நிரூபர்களுமாகக் கூட்டம் பெரிதாயிற்று.

ரவியின் கால்கள் பிறப்பிலேயே ஊனமாகிப் போனதால்,மாற்றுத் திறனாளியாகிப் போனான். கொரோனா அவன் அப்பாவையும் காவு வாங்கி விட, அம்மாவுக்கு அவன் மட்டுமே துணையாகிப் போனான். குடிசை வீடு ஒன்று மட்டுமே இருந்ததால் வாடகை மட்டுந்தான் மிச்சம். வயிற்றுப் பாட்டுக்கு? பல வீடுகளில் பற்றுத் தேய்க்கும் அம்மாவால் பசியை ஓரளவுக்கு மட்டுமே விரட்ட முடிந்தது. மாற்று திறனாளிகளுக்கான தள்ளு வண்டி நாற்காலியை அரசு அவனுக்கு இலவசமாக வழங்க, அவன் அதனையே தன் பிசினஸ் மூலதனமாக்கி பல இடங்களுக்கும் சென்று டீ விற்க ஆரம்பித்தான்.

அம்மா மேலும் தேய்ந்து போகுமுன் அவளைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற உறுதி மொழியை அவனுக்குள்ளாக, அவனாகவே எடுத்துக் கொண்டான். கட்டிட வேலைகள் நடைபெறும் இடங்கள் பலவற்றிலும் உழைக்கும் உள்ளங்களுக்கு அவனும் , அவன் டீயும் உறவானார்கள்!

கையில் ஓரளவு பணப் புழக்கம் ஏற்பட்டதும், அவன் டீக்கு வாடிக்கையாளராகிப் போன ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியரின் ஆலோசனைப்படி அவனும் போட்டித் தேர்வுகள் எழுத ஆரம்பித்தான். முதல் தடவை சொர்ப்ப மார்க்கே வாங்கினான். இரண்டாம் தடவை சற்று முன்னேற்றம் கண்டான். ஆனாலும் தேர்வில் வெற்றி பெறவில்லை! மூன்றாவது தடவை முழு முயற்சியுடன் எழுத, வெற்றித் திரு மகள் அவன் பக்கம் திரும்பினாள். அதிலும் மாவட்ட அளவில் முதல் மாணவனாக வந்திருந்தான். அதற்காகப் பேட்டி காணவே அத்தனை சானல்காரர்களும் அங்கு குழுமியிருந்தார்கள்.

Representational Image

ஒளி வெள்ளம் ரவி மேல் பாய, அவன் தன் தாயையும் கூட்டி அருகில் வைத்துக் கொண்டான்.’எப்படி உங்களுக்கு இது சாத்தியமாயிற்று?’ என்ற கேள்விக்கு,தன் தாயின் கால்களைத் தொட்டு வணங்கியபின்,அவன் பதில் சொல்ல ஆரம்பித்தான். ’சார்! உங்களுக்குத் தெரியுமா? முதல் இரண்டு தடவைகளும் எனக்குத் தோல்விதான். ஆனாலும் அதைப்பற்றி நான் கவலைப்படல. வெற்றிப் படிக்கட்டுல நடக்க ஆரம்பிச்சிட்டதா நெனச்சி சந்தோஷப்பட்டேன்.

எப்படியும் ஜெயிச்சிடணுங்கற ஒரே எண்ணந்தான் எப்பவும் என் மனசுக்குள்ளாற! அதுக்காக எத்தனை தோல்விகளையும் தாங்கிக்கிடறதுண்ணு முடிவு பண்ணிக்கிட்டேன். மூணாவது தடவையிலேயே இலக்கை எட்டிடுவேன்னு நாங்கூட நெனக்கல!’

அவன் பேட்டி நேரடியாக ஒளிபரப்பப்பட…அங்கே ஆனந்தின் எதிர்த்த வீட்டுக்காரரும் டிவியில் அந்தப் பேட்டியைக் கேட்டுக் கொண்டிருந்தார். ’ம்! உடல் உறுதியையும், வனப்பையும் பெற்றவர்களுக்கு உள்ளத்தில் உறுதி இருப்பதில்லை. உடலில் ஊனத்தைக் கொண்டவர்கள் உள்ளத்தில் வைரமாக ஜொலிக்கிறார்கள். தங்கள் இலக்கை அடையும் உறுதியையும் பெற்றுச் சாதித்துக் காட்டி, சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார்கள். இந்த ஆனந்தும், அந்த ரவியுமே இதற்கு நல்ல உதாரணங்கள்!

மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் மகத்தான மன உறுதியுடன் சாதித்துக் காட்டி விட்டான் ரவி. எல்லாம் இருந்தும், உள்ளத்தில் ஊனம் இருந்ததால் ஆனந்த் தன் உயிரையே மாய்த்துக் கொண்டு விட்டு, தன் பெற்றோர்களை இப்படிப் பெரும் சோகத்திற்கு ஆளாக்கி விட்டான்.

இளைஞர்கள் உடலை மட்டும் வலுவாக்கிக் கொண்டால் போதாது. உள்ளத்தை உறுதியுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். தோல்விகளால் துவண்டு போகாமல், அவற்றை வெற்றிப்படிகளாக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வரலாறு அவர்களை வரவேற்கும்!’

நினைவுகளில் லயித்த அவரை,எதிர்த்த வீட்டு நிகழ்வு உலுக்கிற்று! ஆம்! ஆனந்தின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்குப் பிறகு வீடு திரும்பி, இறக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது!

-என்றும் மாறா அன்புடன்,

-ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



from Latest news https://ift.tt/Si5MN0l

Post a Comment

0 Comments