Shubman Gill: கில் இல்லாதது இந்திய அணிக்கு எவ்வளவு பெரிய இழப்பு தெரியுமா?

நடப்பு உலகக்கோப்பை பயணத்தை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி.

ஆனால், அந்த வெற்றியைக்கூட முழுமையாக கொண்டாட முடியவில்லை. இந்திய அணியின் முக்கிய வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

சுப்மன் கில்

அவருக்குப் பதிலாக மாற்று வீரர் ஒருவரை அணியில் எடுக்கலாம் என பிசிசிஐ யோசித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை சுப்மன் கில் இந்த உலகக்கோப்பையில் இல்லாமல் போனால் அது இந்திய அணிக்கு மாபெரும் இழப்பாகவே இருக்கும்.

செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியா - இங்கிலாந்து இடையேயான பயிற்சி போட்டி கவுஹாத்தியில் நடப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியா -நெதர்லாந்து இடையேயான பயிற்சி போட்டி திருவனந்தபுரத்தில் நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு போட்டிகளுமே மழையால் தடைபட்டிருந்தது. இந்த 2 போட்டிகளின் போதுமே கில் இந்திய அணியுடன்தான் பயணித்து வந்தார். அக்டோபர் 4 ஆம் தேதி இந்திய அணி சென்னை வந்திறங்கிய சமயத்தில்தான் அவருக்குக் காய்ச்சலும் சோர்வும் ஏற்பட்டிருக்கிறது. சோதனைகளின் முடிவில் டெங்கு எனவும் தெரிய வந்துள்ளது.

சுப்மன் கில்

இதனைத் தொடர்ந்து 5, 6, 7 ஆகிய தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பயிற்சி செஷனிலெல்லாம் கில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து 8 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியா போட்டியிலும் கில் இல்லை. ஆஸ்திரேலியா போட்டியை முடித்துவிட்டு இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள டெல்லிக்குச் சென்றுவிட்டது.

ஆனால், கில் மட்டும் சென்னையிலேயே தங்கி டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சில மணி நேரங்களிலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த சமயத்தில்தான் கில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுவதுமே சந்தேகம் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது. மேலும், கில்லுக்குப் பதிலாக ருத்துராஜ் அல்லது யாஷஸ்வி இவர்களை அணியில் எடுக்கலாம் என்று பிசிசிஐ பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

1992 உலகக்கோப்பைதான் சச்சினுக்கு முதல் உலகக்கோப்பை. சச்சின் மீதான க்ரேஸ் ஆரம்பித்திருந்த நாட்கள் அவை.

சச்சின்
அந்த உலகக்கோப்பையில் சச்சின் 283 ரன்களை அடித்திருந்தார். இந்திய அணிக்காக அந்தத் தொடரில் அதிக ரன்களை அடித்திருந்தது சச்சின்தான். பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டு போட்டிகளை மட்டுமே இந்தியா வென்றிருந்தது. அந்த இரண்டு போட்டிகளிலுமே சச்சின்தான் ஆட்டநாயகன்.

அணியின் சுமையை முழுவதுமாக முதுகில் சுமக்கத் தொடங்கியிருந்தார் சச்சின். 1996 உலகக்கோப்பை சச்சினுடையது. அந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்திருந்தது சச்சின் தான். மொத்தமாக 523 ரன்களை அடித்திருந்தார். 1999 உலகக்கோப்பை டிராவிட்டுக்கு முதல் உலகக்கோப்பை. அதில் சச்சினை விஞ்சி அதிக ரன்களை அடித்திருந்தார் டிராவிட். 461 ரன்களை அடித்துத் தொடரில் அதிக ரன்களை அடித்தவர் என்கிற பெருமையையும் பெற்றார்.

ஆரம்பகால சச்சினை போலவும் டிராவிட்டை போலவும் கில் இந்த உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு இருந்திருக்கக்கூடும். உலகக்கோப்பை நடைபெறும் இந்த 2023 இல் ஒட்டுமொத்தமாகவே ஓடிஐ போட்டிகளில் 1000 ரன்களை கடந்திருக்கும் ஒரே வீரர் கில் மட்டும்தான். 20 போட்டிகளில் 1230 ரன்களை அடித்திருக்கிறார். ரோஹித், விராட் கோலி, கே.எல். ராகுல் என ஸ்டார் வீரர்கள் கூட அவர் அடித்ததில் ஏறக்குறைய பாதி ரன்களைத்தான் அடித்திருக்கின்றனர். ரோஹித் இந்த ஆண்டில் 658 ரன்களையும் கோலி 612 ரன்களையுமே எடுத்திருக்கின்றனர். ராகுல் 531 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். மேலும், கில்லின் 'Consistency' யையும் இங்கே பேசியே ஆக வேண்டும்.

ஒவ்வொரு இரண்டு போட்டிக்கும் ஒரு அரைசதம் அல்லது சதத்தை அடித்திவிடுகிறார். அரைசதங்களை சதங்களை மாற்றுவதும், சதங்களை பெரிய சதங்களாக மாற்றுவதும் அவருக்கு கை வந்த கலை. இரட்டைச்சதம் வரைக்கும் அடித்திருக்கிறாரே! இடையில் ஐ.பி.எல் லிலும் ரன்வேட்டை நடத்தியிருந்தார்.
Gill

1996 உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் 3 அரைசதம் மற்றும் 2 சதங்களை அடித்திருந்தார் சச்சின். ஆடிய 7 போட்டிகளில் 5 போட்டிகள் சூப்பர் ஹிட். அதேதான் டிராவிட்டும் 1996 இல் 8 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசங்களை அடித்திருந்தார். 8 இல் 5 போட்டிகள் சூப்பர் ஹிட். 2019 இல் ரோஹித் சர்மா ஆடினாரே ஒரு ஆட்டம். அதையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். 9 போட்டிகளில் 5 சதங்களை அடித்திருந்தார். இப்படியொரு உலகக்கோப்பையாகத்தான் கில்லுக்கு இந்த உலகக்கோப்பை இருந்திருக்கக்கூடும். ஆனால், எதிர்பார்க்காத வகையில் காய்ச்சலில் சிக்கிவிட்டார். ஒரு ஓப்பனராக அவர் முன் நின்று நல்ல ஃபார்மில் திடகாத்திரமாக எல்லா பௌலர்களையும் எதிர்கொண்டிருந்தால் அது ஒட்டுமொத்த அணிக்குமே ஒரு பாசிட்டிவிட்டியைக் கொடுத்திருக்கும். இந்த உலகக்கோப்பையின் ஹீரோவாக கில் இருந்திருக்கக்கூடும்.

Shubman Gill

இப்போதைக்கு கில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுவது சந்தேகம் என்கிற அளவில்தான் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அவர் விஷயத்தில் இன்னும் உறுதியாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. ருத்துராஜூம் சரி ஜெய்ஸ்வாலும் சரி நல்ல வீரர்கள்தான். ரன்கள் எடுப்பார்கள்தான். ஆனால், கில் எந்த அடிப்படையில் பார்த்தாலும் அவர்களைவிட ஒரு படி மேலேதான் இருக்கிறார். ஆக, கில் தொடரின் பாதியிலிருந்து வந்தாலும் அவர் அணியில் இருக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம்.



from Latest news https://ift.tt/EfJC3Tp

Post a Comment

0 Comments