பெற்றோரின் சொத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் உடன்பிறப்புகளுக்கிடையே எப்போதும் பிரச்னை இருக்கத்தான் செய்யும். அதுவும் சகோதரன், சகோதரி இருக்கின்றனர் என்றால், சகோதரிக்குச் சொத்தைக் கொடுக்கக் கூடாது என்பதில், பெரும்பாலான சகோதரர்கள் உறுதியாக இருப்பார்கள். அது போன்ற ஒரு சொத்து யுத்தத்தில், இளம்பெண் ஒருவரை அவரின் சொந்தச் சகோதரர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து கொலைசெய்திருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் மணீஷா (22). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். இவரைக் கடந்த சில நாள்களாகக் காணவில்லை. ஆனால், இது குறித்து அவரின் சகோதரர் போலீஸில் புகார் செய்யவில்லை. ஆனால் மணீஷாவுடன் வேலை செய்தவர்கள் அவரைத் தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில், பாக்பட் என்ற இடத்தில் சூட்கேஸில் பாதி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவரை யாரென்று அடையாளம்காண போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கார் ஒன்றில் சூட்கேஸைக் கொண்டு வந்து போட்டு எரித்தது தெரியவந்தது. உடனே அந்த கார் நம்பரை வைத்து பவன் என்பவரைக் கைதுசெய்தபோதுதான், கொலைசெய்யப்பட்டது மணீஷா என்று தெரியவந்தது. இது குறித்து பாக்பட் காவல்துறை கண்காணிப்பாளர் மணீஷ் குமார் மிஸ்ரா ஊடகங்களிடம் பேசுகையில், ``மணீஷாவின் தந்தை இறந்த பிறகு சொத்துகளை விற்பனை செய்ய அவரின் சகோதரர் விரும்பினார். ஆனால், மணீஷா அதற்குச் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி மணீஷாவின் சகோதரர், தன்னுடைய மனனவி, நண்பர் ஆகியோருடன் சேர்ந்து மணீஷாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து உடலை எரித்திருக்கின்றனர்'' என்று தெரிவித்திருக்கிறார்.
மணீஷாவின் நண்பர்கள் இந்தக் கொலை தொடர்பாக இன்ஸ்டாகிராமில், ``மணீஷா தன்னிச்சையாக நொய்டா சதர்பூரில் வசித்துவந்தார். சிறு வயதிலேயே அவரின் தந்தை இறந்துவிட்டார். சொந்தமாகப் படித்து முன்னேறினார். அதிகமான நாள்கள் இரவில் சாப்பிடாமல் உறங்கியிருக்கிறார். அவர்களது 4 கோடி ரூபாய் மதிப்பிலான குடும்பச் சொத்தை விற்பனை செய்ய அவரின் சகோதரர் விரும்பினார். ஆனால், அதற்கு மணீஷா சம்மதிக்கவில்லை. மணீஷாவின் சகோதரர், மனைவி ஷிகா இருவரும் அடிக்கடி மணீஷாவை அடித்துக் கொடுமைப்படுத்தினார்.
ஷிகாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவு இருப்பதை மணீஷா கண்டுபிடித்தார். அதை மறைக்க மணீஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகத் தகவலைப் பரப்பினார். மணீஷா நவம்பர் ஒன்றாம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மறுநாள் வேலைக்கும் வரவில்லை. நாங்கள் அவர் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, காலை 8 மணிக்கே வேலைக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் காணாமல்போய் மூன்று நாள்கள் ஆன பிறகும், அவர்கள் போலீஸில் புகார் செய்யவில்லை. மூன்று நாள்கள் கழித்த பிறகுதான், மணீஷாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது'' என்று பதிவிட்டிருக்கின்றனர்.
ஷிகாவுடன், பவன் என்பவருக்குத் தொடர்பு இருந்தது. அவர்கள் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்ததை மணீஷா வீடியோ எடுத்துவைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவை டெலிட் செய்யும்படி மணீஷாவிடம், ஷிகா பல முறை கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், மணீஷா வீடியோவை டெலிட் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. ஷிகாவின் கணவர் தனது சொத்தை விற்பனை செய்ய மணீஷா தடையாக இருப்பதாகக் கோபத்தில் இருந்தார். எனவே அவரைத் தூண்டிவிட்டு தன்னுடைய காதலன் பவன், கணவர் ஆகியோர் மூலம் மணீஷாவை, ஷிகா கொலைசெய்திருக்கிறார்.
from Latest news https://ift.tt/uJFDZe0
0 Comments