சில சந்தேகங்களும் கேள்விகளும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும். அவற்றிலொன்றுதான், `மாதவிடாய் நாட்களில் சம்பந்தப்பட்ட பெண்கள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினால் செடிகள் பட்டுப்போய்விடுமா' என்பதும். துணி, நாப்கின், டாம்பூன், மென்ஸ்ட்ருவல் கப் என்று காலத்துக்கு ஏற்றாற்போல, மாதவிடாய் நாள்களின் சுகாதாரம் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. மாதவிடாய் என்றாலே அது மறைக்கப்பட வேண்டிய ஒன்று; அதுபற்றி வெளிப்படையாகப் பேசக்கூடாது; ஆடையில் பட்ட ரத்தக்கறையை யாராவது பார்த்துவிட்டால் அவமானம் என்கிற மனப்பான்மையும் கடந்த சில வருடங்களாக மெள்ள மெள்ள மாறிக்கொண்டிருக்கின்றன.
இருந்தபோதிலும், மாதவிடாய் நேரத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினால் அவை பட்டுப்போய்விடும் என்கிற நம்பிக்கை மட்டும் இன்னமும் மக்கள் மனங்களில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த நம்பிக்கையில் அறிவியல்பூர்வமான உண்மையிருக்கிறதா அல்லது இது முழுக்க முழுக்க மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சந்தேகமா? என்பது குறித்து மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது,
``மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடல் சூடு 0.5 டிகிரி அளவு வரைக்கும் அதிகரிக்கலாம். இந்த சிறிதளவு கூடுதல் வெப்பத்தால் செடிகளுக்கு எந்தக் கெடுதலும் நிகழாது. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றவில்லையென்றால்தான் பட்டுப்போகுமே தவிர, மாதவிடாய் நாள்களில் தண்ணீர் ஊற்றுவதால் பட்டுப்போகாது. தவிர, இதற்கு அறிவியல் காரணங்களோ, ஆதாரங்களோ எதுவும் இல்லை'' என்கிறார் அழுத்தமாக.
இயற்கை மருத்துவர் யோ.தீபாவிடம் கேட்டபோது, ``ஒரு சந்தேகம் பல காலங்களாக சமூகத்தில் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது என்றால், அதற்கான விளக்கம் காலத்துக்குத் தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். மாதவிடாய் நேரத்தில் செடிகளுக்குத் தண்ணீர் விடலாமா என்பதுபற்றி விளக்கம் அளிப்பதற்கு முன்னால், மாதவிடாய் தொடர்பான இன்னொரு விஷயத்தைப் பற்றி விளக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் மாதவிடாய் நாள்களில் குளிக்காமல் இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்தக் காலத்தில் ஒருநாளைக்கு இரண்டு முறைகூட குளித்து விடுகிறோம். காரணம் மிகவும் எளிமையானது.
அந்தக் காலத்தில் பொது நீர்நிலைகளில் குளிக்க வேண்டியிருந்தது. மாதவிடாய் ரத்தத்தை அசுத்தம் என்று அந்தக் காலத்தினர் நம்பி வந்ததால், `பொது நீர் நிலைகளில் குளிக்கக் கூடாது' என்றார்கள். வேறு வழியில்லாமல் பெண்களும் 3 நாள்கள் குளிக்காமல் இருந்தார்கள். அதுதான் பின்னாளில் `மூன்று நாள்களும் குளிக்கக் கூடாது' என்றானது. ஆனால், இன்று நிலைமையே வேறு. வீட்டுக்கு வீடு குளியலறை இருக்கிறது. வளர்ந்த நகரங்களில் வீட்டுக்கு இரண்டு குளியலறைகள் இருக்கின்றன. கழிவறை வசதியில்லாத கிராமத்து வீடுகளில்கூட குளிப்பதற்கென ஒரு மறைவிடம் இருக்கவே செய்கிறது. அதனால், எல்லா நாள்களும் குளிக்கலாம். தண்ணீர் வசதியிருந்தால், மாதவிடாய் நாள்களில் இரண்டு முறைகூட குளிக்கலாம். அந்தக் காலத்தில் சொன்னதை இப்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதுபோலத்தான் மாதவிடாய் நாள்களில் செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றுவதும்'' என்றவர், தொடர்ந்தார்.
``மாதவிடாய் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை. சிலருக்குத் தாங்க முடியாத அளவுக்கு உடல்வலி ஏற்படுகிறது. சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது. இதனால், சம்பந்தப்பட்ட பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் சோர்வாக இருப்பார்கள். வலியும் சோர்வும் அவர்களுக்குள் எதிர்மறை உணர்வை ஏற்படுத்தலாம். மேலே சொன்ன அனைத்தும் எல்லா காலத்துக்கும் பொதுவானவையே... நம் உடலைச்சுற்றி பயோ எனர்ஜிடிக் சக்தி இருக்கும். இதை 'ஆரா' என்பார்கள். அந்த ஆராவும் மாதவிடாய் நாள்களில் பலவீனமாக இருக்கும்.
இதுவும் பெண்ணுக்குப் பெண் மாறுபடவே செய்யும். மாதவிடாய் நேரத்து வயிற்றுவலியுடன் துவண்டுபோய் கிடக்கும் ஒரு பெண்ணை சமைக்கும்படி வற்புறுத்தினால், அவர் வருத்த உணர்வுடன்தான் சமைப்பார். அந்த உணர்வு அந்த சமையலிலும் எதிரொலிக்கவே செய்யும். இது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்கும் பொருந்தும்.
ரத்தம் வெளியேறி உடல் பலவீனமான இருக்கையில், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது உள்ளிட்ட எந்த வேலையும் செய்யாமல் இருக்கலாம். அதனால்தான், அந்தக்காலத்தில் மாதவிடாய் நாள்களில் ஓய்வு எடுக்கச் சொன்னார்கள். இந்தக் காலத்தில் இதற்கான வாய்ப்புகள் இல்லையென்றாலும், மாதவிடாயின் முதல் நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அல்லது வலி அதிகமாக இருக்கிற ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று சில நிறுவனங்கள் அனுமதித்து வருவதையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மொத்தத்தில், மாதவிடாய் நாள்களில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றக்கூடாது என்பதை, `உடல் உபாதை சார்ந்த விஷயமாகவும், உணர்வு சார்ந்த விஷயமாகவும்'தான் பார்க்க வேண்டும். மற்றபடி, மாதவிடாய் நேரத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினால், செடி பட்டுப்போய்விடும் என்பதற்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும் இதுவரை இல்லை'' என்கிறார்.
from Latest news https://ift.tt/GroC7Fw
0 Comments