நிபுணர் மதிப்பீட்டுக்குழுவில் அதானி குழும பிரதிநிதி ஏன்?! - வெடித்த சர்ச்சை!

மத்திய அரசின் நதி மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக்குழு (EAC) செப்டம்பர் 27-ம் தேதி மறுசீரமைக்கப்பட்டிருக்கிறது. அதன் ஏழு நிறுவன சாரா உறுப்பினர்களில் ஒருவராக ஜனார்தன் செளத்ரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் ஆலோசகராகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவைப் பொறுத்தவரை கல்வியாளர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள், ஆலோசனை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், மத்திய அரசு, அதானி குழுமத்துக்கு மட்டும் பல்வேறு சலுகைகளை வழங்கிவருவதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்துவரும் சூழலில், அதானி குழுமத்தின் ஆலோசகர் ஒருவர், நிபுணர் மதிப்பீட்டுக்குழுவில் இணைத்திருப்பது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

அதானி

இந்தக் குழு மாற்றியமைக்கப்பட்ட பிறகு அக்டோபர் 17, 18 தேதிகளில் கூட்டம் நடந்திருக்கிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் PARIVESH தளத்தில் இந்தக் கூட்டம் குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டத்தில், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின், 1,500 மெகாவாட் தாரலி பம்பிங் சேமிப்புத் திட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.

அதானி குழுமத்தின் ஆலோசகர் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவில் இணைக்கப்பட்ட பிறகு நடந்த முதல் கூட்டத்திலேயே இது நடந்திருப்பதுதான் சர்ச்சைகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆனால் 17-ம் தேதி நடந்த கூட்டத்தில் அதானி குழுமத்தின் திட்டம் குறித்த பரிசீலனை அமர்வில், தான் பங்கெடுக்கவில்லை என்று ஜனார்தன் செளத்ரி விளக்கமளித்திருக்கிறார். அதேபோல 18-ம் தேதி நடந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மோடி

இருப்பினும் மத்திய அரசின் பதிவுகளில், அவர் அதானி திட்டம் குறித்த பரிசீலனையின்போது வெளியேறிவிட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. இதுவரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் எந்த விளக்கத்தையும் இது தொடர்பாகக் கொடுக்கவில்லை. அதானி குழுமமும் அதிகாரபூர்வமாக எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

அதேசமயம், ஒன்றல்ல, இரண்டல்ல... அதானி குழுமத்தின் ஆறு திட்டங்களுக்கு நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஒப்புதல் அளித்துவிடும் என்று கேரளா காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. 10,300 மெகாவாட் மதிப்பிலான ஆறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற கேரள காங்கிரஸின் குற்றச்சாட்டை சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் முன்வைத்திருக்கின்றன. ஆனால் எந்தக் குற்றச்சாட்டுக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமோ, அதானி குழுமமோ எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

இனியன் ராபர்ட்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் இனியன் ராபர்ட், “அதானிக்காகத்தான் இந்த அரசாங்கம் நடக்கிறது, அதானியை எதிர்க்கட்சிகள் தொட்டாலே இந்த அரசுக்குக் கோபம் வந்துவிடுகிறது என்று ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார். அதானிக்கும், மத்திய அரசுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதையும் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம். அது இந்த விவகாரத்தில் நிரூபணமாகியிருக்கிறது. மத்திய அரசின் குழுவில் குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவரை நியமித்தால், அவர் அந்த நிறுவனத்துக்குத்தான் சாதகமாகச் செயல்படுவார். இதில் எப்படி நியாயமான போட்டி இருக்கும்... எனவே, நிபுணர் மதிப்பீட்டுக்குழுவிலிருந்து ஜனார்தன் செளத்ரியை நீக்க வேண்டும். அதானியின் தாரலி பம்பிங் சேமிப்புத் திட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.

ஆனால் இது குறித்து பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசுகையில், “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நீர்மின் திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக்குழுவில் உறுப்பினரை நியமிக்க சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளை மீறி உறுப்பினர் நியமனம் நடைபெறவில்லை. அதேபோல எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் தாரலி பம்பிங் சேமிப்புத் திட்டம் குறித்த பரிசீலனையின்போது, தான் உள்ளே இல்லை என்று ஜனார்தன் செளத்ரியே தெளிவுபடுத்திவிட்டார். எந்த நிறுவனமாக இருந்தாலும் சட்டவிதிகளைப் பின்பற்றி ஒப்பந்தத்தைப் பெறுவதை யாரும் குறை சொல்ல முடியாது. அதானி குழுமம் பெற்றுவிட்டது என்பதற்காகவே இத்தகைய கருத்துகளை எதிர்க்கட்சிகள் தெரிவிப்பது என்பது அரசியல் செய்ய அவர்களுக்கு இருக்கும் பஞ்சத்தைத்தான் காட்டுகிறது” என்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/R13QVeO

Post a Comment

0 Comments