ஹேர் கட் பண்ணப் போறீங்களா கேர்ள்ஸ்? லாங்கா... ஷார்ட்டா... மீடியமா... உங்க சாய்ஸ் எது?

பெண்ணழகின் பெரும்சிறப்பே கூந்தல்தான். லாங் ஹேரோ, ஷார்ட் ஹேரோ, மீடியம் ஹேரோ, எல்லாமே அழகுதான் இல்லையா... அப்படி இருக்க, அதை மேலும் மெருகேற்ற நாம் நம் கேசத்துக்கு ஏற்ற ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நம் விருப்பத்துக்கேற்ற, முக வடிவமைப்பிற்கேற்ற, ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கும் முன், அதற்குத் தகுந்தவாறு நம் முடியை கட் செய்துகொள்ள வேண்டும்.

கூந்தல்

முடியை வெட்டுவது என்று முடிவு செய்துவிட்டால், என்ன ஹேர் கட்டை தேர்ந்தெடுக்கலாம், லேயர் கட்டா... பட்டர்ஃபிளை கட்டா... பாப் கட்டா?

இத்தனை விதங்கள் இருக்க, நமக்கேற்ற ஹேர் கட்டை தேர்வு செய்வது எப்படி... வாருங்கள் பார்ப்போம்!

ஹேர் கட் செய்வதற்கு முன் செய்ய வேண்டியவை...

தலைமுடியின் அமைப்பு (டெக்ஸ்ச்சர்) சீராகவும், சுத்தமாகவும் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இன்றளவும், பல பெண்கள் தலைக்கு ஷாம்பூ தேய்த்துக் குளித்துவிட்டாலே முடி சீராகிவிடும் என்று எண்ணுகிறார்கள், அது தவறு. ஷாம்பூ தேய்த்துக் குளிப்பதால் முடியின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மேலோங்கும் என்று சொன்னாலும்கூட, அது மட்டுமே உங்கள் தலைமுடிக்கான முழு பராமரிப்பையும் தராது என்பதே உண்மை.

அதே போல, உங்களின் தலைமுடியை அலச, சல்ஃபேட் மற்றும் பாரபென் போன்ற கெமிக்கல்ஸ் இல்லாத ஷாம்பூவை தேர்வு செய்ய வேண்டும்.

தலைமுடியை ஷாம்பூ கொண்டு அலசியபின், உடனே முடி, தலை வகிடு, முடியின் வேரில் சிறிதளவு கண்டிஷனரையும் தடவ வேண்டும். காரணம், தலைமுடியை அலசிய பின் முடியின் pH அளவு 4.5 முதல் 5 வரை அதிகரிக்கிறது. கண்டிஷனர் தடவிய பின் உங்களின் முடியின் pH லெவல் 6 - 7 வரை அதிகரிக்கும். இது முடியின் ஈரப்பதத்தைக் கூட்டுவதுடன், முடி சீராக வளர்வதற்கும் ஏதுவாக அமையும்.

ஷாம்பூவைக் கொண்டு முடியை அலசிய பின், தலையை எக்காரணத்தைக் கொண்டும் சீப்பால் வாரக் கூடாது, ரப்பர் பேண்டால் இருக்கி தலைமுடியைக் கட்டக் கூடாது, காரணம், குளித்து முடித்தவுடன் நம் தலைமுடி ஊட்டமின்றி வலுவற்று இருக்கும். இந்த நிலையில் தலைமுடியை முறுக்கவோ, மடக்கவோ செய்தால், தலைமுடி அதிக அளவில் உதிரும். முடியின் pH லெவலில் சமநிலை இல்லாதபோது தலை முடியை கட் செய்தாலோ, வேறு ஹேர் ஸ்டைலை டிரை செய்ய முற்பட்டாலோ, நீங்கள் நினைத்த அளவுக்கு அழகான தோற்றம் உங்கள் முடிக்கு கிடைக்காது.

யாருக்கு எந்த விதமான ஹேர் கட் பொருந்தும் என்பதைப் பற்றி நேச்சுரல்ஸின் சிகை அலங்கார நிபுணர் கார்த்திக் குமாரிடம் பேசியபோது, ``எந்த ஹேர் கட் செய்தாலும் முடியின் pH லெவல் சமநிலையில் இல்லாதபோது, உங்களின் ஹேர் கட் சீராக அமையாது. மேலும், ஹேர் கட் செய்தபின் கூடுதலாக வளரும் முடிகளும் நீங்கள் செய்த ஹேர் கட்டிற்கு அழகான லுக்கை தராது. மேலும், உங்கள் தலைமுடி கூடுதலாக சேதமடையும்.

தலைமுடியைப் பராமரிக்கவும், உங்களின் ஹேர் ஸ்டைல் பாதிக்காமல் இருக்கவும் எந்த ஷாம்பூவை பயன்படுத்தலாம் என்று உங்களின் சிகை அலங்கார நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

கூந்தல்

ஹேர் கட் செய்வதற்க்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

``ஹேர் கட் செய்வதற்கு முன் ஒருவரின் தலை முடி அமைப்பை சரிபார்க்க வேண்டும். நேரான (ஸ்ட்ரெயிட்டான) அமைப்பில் இருக்கிறதா, அலை அலையான (வேவியான) அமைப்பில் இருக்கிறதா, அல்லது சுருட்டையான (கர்லியான) அமைப்பில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பின், தலைமுடியின் அடர்த்தியையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், சிலபேருக்கு கழுத்துப் பகுதியிலோ, தலை பகுதியிலோ முடி அதிகமாக இருக்கும். சில பேருக்கு தலையின் அத்தனை பகுதியிலுமே முடியின் அடர்த்தி குறைவாக இருக்கும். அவர்களின் தலைமுடிக்கு எந்த மாதிரியான ஹேர் கட் சரியாக இருக்கும் என்பதை கவனிக்க வேண்டும். முடியின் அடர்த்தியுடன், தலைமுடியின் வளர்ச்சி விகிதம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிகை அலங்கார நிபுணர்களின் தரப்பிலிருந்து ஹேர் கட் செய்துகொள்பவரின் தொழில் என்ன, அவர்களுக்கு எந்த விதமான ஹேர் ஸ்டைல் சரியானதாக இருக்கும் என்பதையும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

முடியும் முகவெட்டும்…

பெண்கள், அவர்களின் சரியான ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுப்பதற்கு அவர்களின் முக அமைப்பையும் பார்க்க வேண்டியிருக்கிறது. வட்ட முக அமைப்போ, சதுர முக அமைப்போ, ஹேர் கட் செய்துகொள்பவரின் முகத்தை கூடுமானவரையில் நிபுணர்கள் நீள்வட்ட (Oval) முக அமைப்புக்கு கொண்டுவரவே முயல்வார்கள். காரணம், நெற்றியிலிருந்து சரியும் முடி, கழுத்து வரை முறையான அளவீட்டுடன் சரியும்போது நீள்வட்ட முகவமைப்பில் இருக்கும்போதுதான் அதன் அழகு மேலோங்கும். மேலும், முக்கோணம், ஆப்லாங் மற்றும் ஹார்டின் முக அமைப்பில் இருப்பவர்களுக்கும் இதே ஃபார்முலாதான். இயற்கையாகவே ஓவல் வடிவத்தில் முக அமைப்பு இருப்பவர்களுக்கு எந்த ஹேர் ஸ்டைலும் பொருத்தும்.

கூந்தல் பாராமரிப்பு

அந்தக் காலத்து சிம்ரன் முதல் இந்தக் காலத்து இவானா வரை, எல்லோருக்குமே மூன்றே மூன்று ஹேர் கட்டுகள் மட்டுமே செய்யப்படுகின்றன. ரவுண்டு லேயர், ஸ்கொயர் லேயர் மற்றும் ட்ரையாங்குலர் லேயர். அதே போல, முடியின் கடைசிப் பகுதியைத் திருத்தும்போதுகூட நேராகவோ (straight cut), U வடிவத்திலோ, V வடிவத்திலோ இருக்கும்.

வழக்கமாக, முடி அடர்த்தியாக இருப்பவர்களுக்கு `லேயர் கட்’ பாணியில் முடி திருத்தம் செய்யப்படும்.

அதேபோல், முடியின் அடர்த்தி கம்மியாக இருப்பவர்களுக்கு வழக்கமாக `க்ராஜுவேஷன்’ என்ற பாணியில் முடி திருத்தம் செய்யப்படும்.

லேயர் கட் vs க்ராஜுவேஷன் கட்:

அலை போன்ற முடி அமைப்பு உள்ளவர்களுக்கும், முடி அடர்த்தியாக இருப்பவர்களுக்கும் லேயர் கட் செய்யப்படுவது வழக்கம். இந்த ஹேர் கட் மூலம் தலையின் மேல் புறத்திலிருந்து கீழ்ப் புறத்துக்குச் சரியும் முடிக்கு, முறையான அளவீடு கொடுக்கப்படும். (தலை முடியின் மேல் புறத்தில் சிறிய அளவு முடி சரிய, கீழ்ப் புறத்தில் முடியின் அடர்த்தியை முன்னிலைப் படுத்தும் விதமாக இந்த ஹேர் கட் செய்யப்படுகிறது). உங்களின் முடி அசைவை மேலும் அழகாக்கும் விதமாக அமையும் இந்த ஹேர் கட். நம் தமிழ் சினிமா ஹீரோயின்களின் பிரியப்பட்ட ஹேர் கட்டுகளில் லேயர் கட்டும் ஒன்று.

குறைவான அளவில் முடியமைப்பு உள்ளவர்களும், முடியின் அடர்த்தி கம்மியாக இருப்பவர்களும் செய்துகொள்ள வேண்டியது க்ராஜுவேஷன் கட். இந்த ஹேர் கட் மூலம் மேல்புறத்தில் இருக்கும் உங்களின் முடியமைப்பு மேலும் அடர்த்தியாகத் தெரியும் (மேல் புறத்திலிருந்தே அதிக அளவு முடியுடன் சரிவது போலான ஒரு தோற்றத்தை நமக்குத் தரும்). ஷார்ட் ஹேர் மீது பிரியம் உள்ளவர்களுக்கு க்ராஜுவேஷன் கட் பொருத்தமாக இருக்கும்.

பட்டர்ஃபிளை ஹேர் கட்

பட்டர்ஃபிளை ஹேர் கட்

முடியின் முன் புறத்தில் செய்யப்படும் இந்த ஹேர் கட்டில், தலை வகிட்டுலிருக்கும் முடி, பட்டாம்பூச்சியின் இறக்கையைப் போல் அழகாய் விரிந்து சரியும். அதனாலேயே, இதற்கு பட்டர்ஃபிளை ஹேர் கட் என்ற பெயர் வந்தது. வட்ட, சதுர முக அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த ஹேர் கட் பொருத்தமாக இருக்கும்.

பாப் கட்

பாப் கட்

பாப் கட் என்றாலே ஷார்ட்டான முடி உள்ளவர்களுக்கான ஹேர் கட் என்ற ஒரு பிம்பம் இருக்கிறது, இது தவறு. தோள்பட்டைக்கு மேல் சரியும் முடிக்கு சீரான அமைப்பைத் தருவதே பாப் கட். இதில் `ஷார்ட் பாப் கட்’ என்று குறிப்பிடுவது மறைந்த இளவரசி டயானாவின் ஹேர் கட்டைத்தான்.

யாருக்கெல்லாம் நெற்றிக்கு முன் முடி சரிந்தால் நன்றாக இருக்கும்?

கர்டைன் பாங்ஸ்

`பாங்ஸ்’ என்ற ஹேர் கட் நெற்றிக்கு முன் இருக்கும் முடியை அழகாகக் காட்ட உதவும் ஒரு ஹேர் கட். பெரிய நெற்றி உள்ளவர்களுக்கும், ஓவல் மற்றும் ஆப்லாங் முகவமைப்பு உள்ளவர்களுக்கும் இந்த வகை ஹேர் கட் பொருந்தும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், `நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் பள்ளிக் கால சமந்தாவின் ஹேர் கட்தான் இது. கர்டைன் பாங்ஸ், சைடு ஸ்வெப்ட் பாங்கஸ் போன்ற ஹேர் ஸ்டைல்கள், இதில் அடங்கும்.

சைடு ஸ்வெப்ட் பாங்கஸ் 

சாலிட் கட்:

``முடியோட லென்த்த குறைச்சிடாதீங்க ப்ளீஸ்...” என்று பவ்வியமாகச் சொல்பவர்களுக்கான ஹேர் கட் இது. முடியின் நீளத்தைக் குறைக்காமல் V அல்லது U வடிவத்தில் முடியின் முனையில் திருத்தம் செய்யப்படுவதே சாலிட் கட். தொழில் ரீதியாக உயர்பதவியில் இருப்பவர்கள், சட்டம் மற்றும் போலீஸ் பிரிவில் இருக்கும் பெண்களுக்கு இந்த ஹேர் கட் சரியானதாக இருக்கும்.

தற்போது, ஹேர் கட் செய்துகொள்ளும் வழக்கம் பெண்கள் மத்தியில் இருந்தாலும், இன்றளவும் பெரும்பாலானவர்கள் தங்களுடைய கூந்தலின் நீளத்தை மனதில் வைத்து ஹேர் கட் செய்யவே தயங்குகிறார்கள். கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவே ஹேர் கட் செய்துகொள்ளப்படுகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். எவ்வளவோ பண்றோம்! ஹேர் கட் தானே தோழியர்களே, சும்மா விதவிதமா ஹேர் ஸ்டைல் பண்ணி அசத்தலாமே!



from Latest news https://ift.tt/G5FLcp9

Post a Comment

0 Comments