மக்கள்தொகை: சர்ச்சையைக் கிளப்பிய நிதிஷ் குமாரின் பேச்சு - சட்டசபையில் ஆபாசப் பேச்சு எனச் சாடும் பாஜக

பீகார் சட்டமன்றத்தில் நேற்று அரசு எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவரங்களை முதல்வர் நிதிஷ் குமார் தாக்கல்செய்து பேசினார். பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடியும் என்று பேசினார். அவர் இது குறித்துப் பேசுகையில், ''பீகாரில் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்திருக்கிறது. பெண்கள் கல்வியறிவு பெற்றால், அது மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கிறது. படித்த பெண், திருமணமாகிச் செல்லும்போது அவர் கணவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது. அதுவும் குளிர்காலத்தில் அடிக்கடி நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது.

எனவே, பெண் கல்வியறிவு பெற்றிருந்தால் அவருக்கு அனைத்தும் தெரியும். கணவர் நெருக்கமாக இருக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று எடுத்துச் சொல்வார். இதை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்று தெரிகிறது. இதற்கு முன்பு பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இப்போது 2.9 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.

நிதிஷ் குமார் மக்கள்தொகை குறையப் பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசியதைக் கேட்டு அவையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்தனர். ஆனால், நிதிஷ் குமாரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் பா.ஜ.க வெளியிட்டிருக்கும் சோஷியல் மீடியா அறிக்கையில், ''நிதிஷ் குமார் போன்ற ஓர் அரசியல்வாதியை இந்திய அரசியலில் இதற்கு முன்பு பார்த்திருக்க முடியாது. `பி’ கிரேடு ஆபாசப் படங்களின் மீதான மோகத்தால், நிதிஷ் பாபுவின் மனம் கறைபட்டிருப்பதுபோல் தெரிகிறது. பொது இடத்தில் இரட்டை அர்த்தத்துடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா இது குறித்து அளித்த பேட்டியில், "சட்டசபைக்குள் நிதிஷ் குமார் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் புண்படுத்தும், ஆழமான அவமரியாதைக்குரிய, பாலியல் மற்றும் ஆணாதிக்க மனநிலையைப் பிரதிபலித்திருக்கின்றன. பீகார் சட்டசபையில் இது போன்ற மொழி பயன்படுத்தப்பட்டால், பீகாரில் பெண்களின் அவலநிலையைக் கருத்தில்கொள்ளுங்கள். நிதிஷ் குமார் தனது கருத்துக்காகப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.

நிதிஷ் குமார்

நிதீஷ் குமார் தான் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் செய்தியில், "இத்தகைய கருத்துகள் பிற்போக்குத்தனமானவை மட்டுமல்ல, பெண்களின் உரிமைகள் மற்றும் விருப்பத்துக்கு எதிரானவை. பீகார் முதல்வர் இந்தப் புண்படுத்தும் கருத்துகளுக்காக நாடு முழுவதுமுள்ள பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ``முதல்வர் சொன்னது பாலியல் கல்வி பற்றித்தான். இந்தத் தலைப்பில் மக்கள் முன்னர் தயங்கினார்கள், ஆனால் இது பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. அறிவியல், உயிரியல் படிக்கும் குழந்தைகள் இதைக் கற்றுக்கொள்கிறார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த நடைமுறையில் என்ன செய்ய வேண்டும் என்றார். இதைத் தவறான முறையில் எடுத்துக்கொள்ளக் கூடாது, பாலியல் கல்வியாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என நிதிஷுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/xaM7UnC

Post a Comment

0 Comments