தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அதிமுக-வை `பலியாடு’ ஆக்கினாரா ஆளுநர் ரவி?!

கிட்டத்தட்ட 14 மாத காலமாக ஆளுநர் மாளிகையில் தூசு படிந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கான ஒப்புதல் கோப்பு, திடீரென உயிர்பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு விற்பனைக்கு உதவியதாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது.

குட்கா வழக்கு.. விஜயபாஸ்கர்?

இந்த 11 பேருக்கு எதிராக, 2022-ம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால், அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சி.பி.ஐ தனது புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து விசாரணையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அனுமதி வாங்க முடிவுசெய்தது. இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோர் மீது விசாரணை மேற்கொள்ள, ஆளுநர் ரவியிடம் ஒப்புதல் பெற, 12.09.2022 அன்று அதற்குரிய கோப்புகளை அனுப்பியது. ஆனால், ஆளுநர் விசாரணைக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்திவந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 17-ம் தேதி வந்தபோதுகூட, 'ஆளுநர் ரவி விசாரணைக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இந்தக் கோப்பு மாளிகையில் கிடப்பில் இருப்பதால், விசாரணை மேற்கொள்ள முடியவில்லை' என்று சி.பி.ஐ வாய்தா கோரியிருந்தது. 'பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால் முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை' என்று தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தன.

பி.வி.ரமணா

இந்த நிலையில்தான், பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக செப்டம்பர் 25-ம் தேதி அ.தி.மு.க அறிவித்தது. சரியாக ஒரு மண்டலம்... அதாவது 48-வது நாளில் 13.11.2023 அன்று முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இது அரசியல்ரீதியாக ஆளுநர்மீது மீண்டும் விமர்சனம் எழவைத்திருக்கிறது.

இது தொடர்பாக பெயர் வெளியிட வேண்டாமென்ற நிபந்தனையோடு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், " நாங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள முடிவானபோதே, இது போன்ற ஏதாவது ஒரு பிரச்னையை பாஜக மேற்கொள்ளும் என்று எங்களுக்கு நன்கு தெரியும். பின்விளைவுகளெல்லாம் தெரிந்துதான் பா.ஜ.க-வுடன் நாங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டோம். ஆனால், ஆளுநருடன் அதிமுக தலைமை நல்லுறவோடுதான் இருந்தது. அதனால்தான், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவருக்கு மறைமுக ஆதரவு குரல் கொடுத்தது அ.தி.மு.க. ஆளுநருக்கு எதிரான வழக்கு இறுகுவதாலும், இனி நம்மோடு கூட்டணியில் சேர மாட்டார்கள் என்று தெரிந்ததாலும், ஆளுநரைவைத்து பா.ஜ.க எங்களைச் சீண்டியிருக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமி

விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைவைத்து, திமுக பல கோணங்களில் எங்களை விமர்சனம் செய்தது. ஆனால், நவம்பர் 13-ம் தேதி ஒப்புதல் வழங்கிய விவகாரத்தை, தி.மு.க அரசு வெளியிடவே இல்லை. உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில்தான், ஒப்புதல் வழங்கப்பட்டதே தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை அ.தி.மு.க-மீது தவறு எதுவும் இல்லை. அது தி.மு.க-வுக்கும் தெரியும். அதனால்தான், ஒப்புதல் வழங்காததை அரசியல்ரீதியாக ஆளுநரை, அ.தி.மு.க-வை விமர்சனம் செய்தது தி.மு.க. தற்போது ஒப்புதல் வழங்கியதை வெளியிடாமல் மெளனமாக இருந்திருக்கிறது. இந்த வழக்கைச் சட்டரீதியாக முன்னாள் அமைச்சர்கள் எதிர்கொள்வார்கள்" என்றார் சூடாக.

புளுகுனி ஆளுநர் நாடகம் ஆடுகிறார்!

இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, "மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், `காலவரையறையின்றி மசோதாக்களைக் கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது’ என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் 'நெருப்போடு விளையாடாதீர்கள்' என்று ஆளுநருக்கு கடந்த நவம்பர் 10-ம் தேதி குட்டுவைத்தது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தார்மிக அடிப்படையில் அவர் அமைச்சராகத் தொடரக் கூடாது என்று முடிவு எடுக்கிறீர்கள். ஆனால், இதில் காட்டிய ஆர்வத்தை முன்னாள் அமைச்சர்கள்மீது ஏன் காட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தமிழன் பிரசன்னா

தன் நிலைமை மோசமாவதைத் தெரிந்துகொண்ட ஆளுநர், இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 20-ம் தேதி வருவதற்குள், 'அவசர அவசரமாக 10 மசோதாக்களைத் திருப்பியனுப்பிதோடு, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் மீதான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இது ஓர் அப்பட்டமான ஓரங்க நாடகம். அதுவும் முன்னாள் அமைச்சர்கள் வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

6.7.2023 அன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், `எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான ஒப்புதல் கடிதம் எதுவும் வரவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான ஒப்புதல் கடிதம் 15.5.2023 அன்றே வந்ததாக ஆளுநர் மாளிகை குறிப்பிட்டிருக்கிறது. இதன்மூலம் ஆளுநர் ரவி ஒரு புளுகுனி என்பது அப்பட்டமாக தெரிகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான அறிக்கை

அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக ஆளுநர் இருக்க வேண்டுமென்றுதான் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், பா.ஜ.க., தான் ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களைவைத்து அரசியல் செய்கிறது. ஆளுநர்களும் அரசியல் சாசனத்தைப் படுகொலை செய்வதோடு, மக்கள் சாசனமாகத் திகழும் சட்டமன்றத்தை அவமதிப்பு செய்கிறார்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை, ஆளுநருக்கு எதிராக மிக கடுமையாக இருக்கிறது. இதை உணர்ந்துதான் தற்போது நாடகமாடுகிறார் ஆளுநர்" என்றார் கொதிப்புடன்.

அமைச்சர் வீரமணி
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆளுநர் ரவி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்சமடையும்போது, முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், வீரமணிக்கும் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள் விவரமறிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/031IVA2

Post a Comment

0 Comments