Doctor Vikatan: சாப்பிடும்போது நெஞ்சை அடைக்கும் உணவு... காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என் வயது 40. சாப்பிடும்போது சில நேரங்களில் உணவு, தொண்டைக்குழியிலேயே நிற்பதைப்போல் உணர்கிறேன். இது இரண்டு, மூன்று நாள்கள் தொடர்கிறது. இதற்குக் காரணம் என்ன... தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்தி.

ஸ்ரீவத்சன் குருமூர்த்தி

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது இது `Gastroesophageal reflux disease (GERD)' என்ற பிரச்னையாக இருக்கலாம் என்பது தெரிகிறது. அதாவது, உணவுக் குழாயிலிருந்து இரைப்பைக்குப் போகிற வால்வானது லூஸாகி இருப்பதால், நீங்கள் சாப்பிடுகிற உணவானது மேல்நோக்கி எதுக்களித்துக்கொண்டு வரும்.

இந்தப் பிரச்னையின் காரணமாக சிலருக்கு உணவை விழுங்கும்போது அசௌகர்யம் ஏற்படலாம். உணவை விழுங்கும்போது இப்படிப்பட்ட உணர்வு தொடர்ந்தால் அவர்கள் வயிறு, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எண்டோஸ்கோப்பி எனப்படுகிற சோதனையைச் செய்து பார்க்க வேண்டும்.

இந்தச் சோதனையின் மூலம் உணவுக்குழாயில் ஏதேனும் அடைப்போ, பிரச்னையோ இருக்கிறதா, உணவுக்குழாயிலிருந்து இரைப்பைக்குப் போகும் வால்வு எப்படியிருக்கிறது, அது சரியாகத் திறந்துகொள்கிறதா, அந்த இடத்தில் அமிலம் எதுக்களிப்பது நடக்கிறதா, இரைப்பையில் ஏதும் புண்கள் இருக்கின்றனவா, கட்டி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

இரைப்பையில் ஹெச் பைலோரி (H. pylori) ) என்ற தொற்று இருக்கிறதா என்பதையும் டெஸ்ட் செய்து பார்த்து அதன் விளைவாக பிரச்னை இருக்கிறதா என்றும் பார்க்கலாம். எனவே, முதலில் எண்டோஸ்கோப்பி டெஸ்ட் செய்து பார்க்கவும். அடுத்து, உணவுக்குழாயின் தசைகள் எந்த அளவுக்கு வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள `ஈஸோபீஜியல் மானோமெட்ரி' (Esophageal manometry) என்ற டெஸ்ட்டையும் செய்து பார்க்கலாம்.

உணவுக்குழாய்

அதாவது, உணவுக்குழாயில் அடைப்பு இல்லாதநிலையிலும் சாப்பிடும் உணவானது உள்ளே இறங்குவதில் பிரச்னையை ஏற்படுத்தும் அளவுக்கு உணவுக்குழாய் தசைகள் காரணமாக இருக்கலாம். `அக்கலேஷியா' (Achalasia) என்ற பிரச்னை உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு வரலாம். அந்தப் பிரச்னையை இந்த டெஸ்ட்டில் கண்டுபிடிக்கலாம். 40 ப்ளஸ் வயதில் இப்படிப்பட்ட பிரச்னை இருந்தால் இந்த டெஸ்ட்டின் மூலம் அக்கலேஷியா பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்வது நல்லது. தேவைப்பட்டால் நெஞ்சுப்பகுதி மற்றும் வயிற்றுப் பகுதிக்கான சிடி ஸ்கேனும் செய்து பார்க்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/rCin5GD

Post a Comment

0 Comments