வரும் 12-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெடிபொருள் சட்டத்தின்கீழ், பட்டாசுக்கடைகள் வைக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில், 'விண்ணப்பதாரரின் புகைப்படம், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது டிரைவிங் லைசென்ஸ், லைசென்ஸ் கட்டணம் ரூ.600 செலுத்தியதற்கான செல்லான், குத்தகை ஆவணம், சுய உறுதி மொழிப் பத்திரம் ஆகியவற்றை இணைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்" எனக் கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில் வியாபாரிகள் பலரும் விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களில் ஏராளமானோருக்கு 'லைசென்ஸ்' இன்னும் கிடைக்கவில்லை. இதற்கு அதிகாரிகளின் குளறுபடிகளே காரணம் என்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேங்கியிருக்கின்றன' எனக் கொதிக்கிறார்கள் வியாபாரிகள்.
இதையடுத்து கடந்த 2-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து மனு அளித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் பேசினோம். "இதுவரை பொதுவெளியில், அதாவது தீப்பிடிக்காத இடங்களில் பட்டாசுக்கடை அமைத்திருந்தாலே 'லைசென்ஸ்' வழங்கப்படும். அப்போது காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய மூன்று தரப்பில் அனுமதிக் கடிதம் பெற்றாலே போதும். இந்த ஆண்டு ஐந்து அனுமதிக் கடிதங்களைப் பெற வேண்டும் எனத் தமிழக அரசு கூறியிருக்கிறது. இதன்படி கூடுதலாக தாசில்தாரிடமும், தனிநபர் ஒருவரிடமும் வியாபாரிகள் கடிதம் பெற வேண்டும்.
அதற்காகச் செல்லும்போது, 'அது இல்லை... இது இல்லை...' எனக் கூறித் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இது வியாபாரிகளுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கிறது. இதேபோல் பட்டாசு கொள்முதல் செய்வோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு என ஒரு 'லைசென்ஸ்' வழங்கப்படுகிறது. அதை வைத்துத்தான் நாங்கள் பட்டாசு கொள்முதலில் ஈடுபடுவோம். அதன்படி ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி முடிந்த ஒரு மாதத்தில் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு கொள்முதலுக்கு ஆர்டர் கொடுத்துவிடுவோம். அதன் பிறகே சிவகாசி பட்டாசு உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி தொடங்கும்.
பின்னர் பண்டிகைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பட்டாசு கொள்முதலை முடித்துவிடுவோம். இந்த நிலையில் இவ்வாறு கொள்முதல் செய்தவர்களில் பாதிப் பேருக்குத்தான் தற்போது விற்பனை செய்வதற்கான 'லைசென்ஸ்' வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடத்த விபத்துகளைக் காரணம் காட்டி அதிகாரிகள் 'லைசென்ஸ்' கொடுக்க முரண்டுபிடிக்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட இடங்களில் எந்தப் பிரச்னையும் இல்லை. இதனால் தமிழகம் முழுவதும் ரூ.500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேங்கியிருக்கின்றன.
சுமார் 5,000 வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுக்காலத்தில் சில்லறை வியாபாரம் நடக்கும் இடங்களில் எந்த விபத்தும் நடக்கவில்லை. விதிமுறைகள் மீறப்படும் உற்பத்தி ஆலைகளில்தான் விபத்து நடக்கிறது. தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு வார காலமே இருக்கும் நிலையில் 'லைசென்ஸ்' கொடுப்பதில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தடுமாற்றத்தால் வணிகர்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/m9rsn60
0 Comments