இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ஐ.எஸ்.ஆர்.ஓ சேர்மனாக இருப்பவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சோம்நாத். இவர் தனது சுயசரிதையை `நிலாவு குடிச்ச சிம்ஹங்கள்' (Nilavu Kudicha Simhangal) என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி உள்ளார். `நிலவைக் குடித்த சிங்கம்' என்ற பொருள்படும் அந்தப் புத்தகத்தை சார்ஜாவில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் வெளியிட முடிவு செய்திருந்தார். இதற்கிடையே அந்த சுயசரிதை புத்தகத்தில் தான் எழுதியுள்ள தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து புத்தக வெளியீட்டை ரத்து செய்துள்ளார்.
'நிலாவு குடிச்ச சிம்ஹங்கள்' புத்தகத்தில் சோம்நாத் கூறி உள்ளதாவது. "2018-ம் ஆண்டு ஏ.எஸ்.கிரண்குமார் சேர்மன் பதவியிலிருந்து மாறிய சமயத்தில் அடுத்த சேர்மனுக்கான பட்டியலில் கே.சிவனின் பெயருடன் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் கே.சிவன் சேர்மன் ஆனார். அவர் சேர்மன் ஆனபிறகும் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் இயக்குநர் பதவியிலும் தொடர்ந்தார். எனக்குக் கிடைக்க வேண்டிய அந்தப் பதவி குறித்து நான் கே.சிவனிடம் கேட்டபோதும் அவர் பதிலளிக்காமலிருந்தார்.
அதன்பிறகு முன்னாள் இயக்குநர் பி.எஸ்.சுரேஷ் தலையிட்ட பிறகுதான் ஆறு மாதங்களுக்குப் பிறகு இயக்குநர் பதவி எனக்குக் கிடைத்தது. போதுமான சோதனைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அவசரமாக ஏவப்பட்டதால்தான் 'சந்திரயான் 2' திட்டம் தோல்வியடைந்தது. 'சந்திரயான் 2' நிலவில் தரையிறங்கும் நாளில் பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது, அவரை வரவேற்கும் நிகழ்ச்சியிலிருந்து என்னை விலக்கி வைத்தார். சாப்ட்வேர் தகராறு காரணமாகத்தான் 'சந்திரயான் 2' தோல்வியடைந்தது என வெளிப்படையாகக் கூற கே.சிவன் தயாராக இல்லை. கிரண்குமார் சேர்மனாக இருந்த காலத்தில் வகுக்கப்பட்ட 'சந்திரயான் 2' திட்டத்தில் சிவன் மாற்றம் ஏற்படுத்தினார். மிதமிஞ்சிய விளம்பரம் 'சந்திரயான் 2'-க்கு வினையாக முடிந்தது.
மூன்று ஆண்டுகளில் சேர்மன் பதவி முடிந்த பின்னரும் பதவியை நீட்டிக்க கே.சிவன் முயன்றார். 'சந்திரயான் 3' திட்டம் வெற்றியடைந்தபோது பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து பாராட்டியது மிகவும் மனத் திருப்தியை ஏற்படுத்தியது" என்பதுபோன்ற பல தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்ரோ முன்னாள் சேர்மன் சிவன் குறித்தும், 'சந்திரயான் 2' குறித்தும் சோம்நாத் கூறிய தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதையடுத்து புத்தக வெளியீட்டை நிறுத்தி வைப்பதாக சோம்நாத் அறிவித்துள்ளார்.
மேலும் சோம்நாத் கூறுகையில், "எனக்கும் இஸ்ரோ முன்னாள் சேர்மன் சிவனுக்கும் எந்த மோதலும் இல்லை. நாங்கள் முன்பே ஒன்றாகச் செயல்பட்டோம். அவருக்கு எதிராகச் சுயசரிதையில் நான் ஒன்றும் எழுதவில்லை. 'சந்திரயான் 2' தோல்வியடைந்தது குறித்து, அதற்கான உண்மையான காரணத்தை அன்றைய சேர்மன் வெளிப்படையாகக் கூறாதது குறித்து எனது நிலைப்பாட்டைத்தான் தெரிவித்தேன்.
பிரச்னை ஏற்பட்டால் நமது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறுவதில்தான் நமது வாய்மை வெளிப்படும். எஸ்.எஸ்.எல்.வி தோல்வி உட்படப் பிற்காலத்தில் பல பின்னடைவுகள் ஏற்பட்டபோது, நடந்தது என்னவென்று விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தியதுடன் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது. அது இந்த அமைப்பின் நம்பிக்கையை அதிகரித்தது. என்ன நடந்தது என்ற உண்மைகளைச் சரியாகக் கூறுவதும், உண்மையாக இருப்பதும் அவசியமானது. அதன் மூலம்தான் மக்கள் நம்பிக்கையையும், மரியாதையும் அளிப்பார்கள். யதார்த்த வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்களை எப்படிக் கடந்துவரவேண்டும் என்பதற்கான உதாரணங்களைத்தான் சில சம்பவங்கள் மூலம் விவரித்தேன். எதிர்பாராத வகையில் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்தே புத்தக வெளியீட்டைத் திரும்பப் பெற்றுள்ளேன். இந்த விவாதம் தேவையற்றது" என சோம்நாத் கூறியுள்ளார்.
அதே சமயம், "ஐ.எஸ்.ஆர்.ஓ சேர்மன் சோம்நாத் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார் என்று நான் பார்க்கவில்லை. எனவே அது குறித்துப் பதிலளிக்க விரும்பவில்லை" என்று இஸ்ரோ முன்னாள் சேர்மன் சிவன் தெரிவித்துள்ளார்.
from Latest news https://ift.tt/WT5j7du
0 Comments