விவசாயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தொழில் நுட்பத்தை கடைப்பிடிக்கின்றனர். சிலர் மிகவும் குறுகிய நிலத்தில் அதிக வருமானம் எடுத்து விடுகின்றனர். கிராமங்களில் பல ஏக்கர் விவசாயம் செய்தும் செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் இருக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். பீகார் மாநிலத்தில் ராஜ்குமார் என்றவர் சற்று வித்தியாசமாக காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். பூர்ணியா மாவட்டத்தில் உள்ள தகரு என்ற இடத்தில் வசிக்கும் ராஜ்குமார் காளான் வளர்ப்பு குறித்த தகவல்களை மும்பையில் கற்றுக்கொண்டு வந்து தனது சொந்த ஊரில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
சிப்பிக்காளான், இளஞ்சிவப்பு காளான், மஞ்சள் மற்றும் கறுப்பு என ஐந்து வகையான காளான்களை தனது பண்ணையில் விளைவித்து விற்பனை செய்கிறார். தரமான காளான்களை சுவையுடன் கொடுப்பதால் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்கின்றனர். காளானின் தரத்திற்கு தக்கபடி ராஜ்குமார் விலையை நிர்ணயம் செய்கிறார். ஆனால் குறைந்த பட்சம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.
அதே சமயம் பிரிமியம் ரக காளான்கள் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு கிலோ 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை விற்பனை செய்கிறார். ஒரே மாதிரியான காளான்கள் அல்லாமல் பலதரப்பட்ட காளான்களை விளைவிப்பதால் மக்கள் ராஜ்குமாரிடம் மிகவும் விரும்பி வாங்குகின்றனர். ராஜ்குமார் தனது பண்ணையில் தினமும் 30 முதல் 40 கிலோ காளான்களை உற்பத்தி செய்கிறார். காளான்களை விளைவிப்பதோடு நின்றுவிடாமல் விற்பனையிலும் தானே நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்கிறார். காளான்களை தனது இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று பக்கத்து ஊர்களில் விற்பனை செய்கிறார்.
பொதுமக்கள் போன் செய்தால் அவர்களின் வீடு தேடிச்சென்று காளான்களை ராஜ்குமார் டெலிவரி செய்கிறார். உள்ளூராக இருந்தால் ஒரு விலையும் வெளியூர்களில் டெலிவரி செய்வதாக இருந்தால் அதற்கு வேறு விலையும் வைத்து விற்பனை செய்கிறார்.
இது குறித்து ராஜ்குமாரிடம் பேசிய போது, "2017-ம் ஆண்டிலிருந்து இத்தொழிலை செய்து வருகிறேன். காளான்கள் கிலோ 200 ரூபாயிலிருந்து விற்பனை செய்கிறேன். இதன் மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தாலும் அதற்கு செலவும் அதிகமாக இருக்கிறது. வருமானத்தில் 50 சதவிகிதம் செலவாகி விடுகிறது. காளான்களை டெலிவரி செய்ய நான் வேலைக்கு ஆள்களை வைத்துக்கொள்வதில்லை. காளான் வளர்ப்பில் நானும் எனது குடும்பத்தினரும் சேர்ந்துதான் ஈடுபடுகிறோம். சத்பூஜா போன்ற விழாக்காலங்களில் காளான்கள் அதிக அளவில் விற்பனையாகும். திருமண நிகழ்வுகளுக்கு மொத்தமாக ஆர்டர் எடுத்தும் காளான்களை சப்ளை செய்கிறோம்'' என்று தெரிவித்தார்.
இவரைப் போலவே, பீகாரில் முஜாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஜசுலி என்ற கிராமத்தில் சசி பூசன் என்ற பெண் காளான் வளர்ப்பில் சாதித்து வருகிறார். அவர் டெல்லியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் காளான் குழம்பு சாப்பிட்டபோது அதன் ருசியால் கவரப்பட்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இப்போது காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் இப்போது காளான் வளர்ப்புக்காக 100 பெண்கள் வேலை செய்து வருகின்றனர். நந்தா காளான் பண்ணை என்ற பெயரில் சசிபூசன் இந்த காளான் பண்ணையை நடத்தி வருகிறார்.
இவரிடம் வேலை செய்யும் 100 பெண்களுக்கு மாதம் ரூ.10000 -ல் இருந்து ரூ.14,000 வரை சம்பளமாக கொடுக்கிறார். ஒவ்வொரு மாதமும் டன் கணக்கில் காளான் வளர்க்கும் சசிபூசன், ஒரு கிலோ காளானை 130 ரூபாய்க்கு குறையாமல் விற்பனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Vikatan Latest news https://ift.tt/nT7GKhP
0 Comments