பெருமழைக்கும்... பெருநகர சென்னைக்கும் தேவை வடிகால் திட்டம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘புயல் வரும் முன் காப்பவன்தான் அறிவாளி; அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி...’ என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய திரைப்படப் பாடல் போல்தான் உள்ளது, இப்போதைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிலை.

‘வரலாறு காணாத பெருமழை’, ‘கடல் சீற்றத்தால், வெள்ள நீர் வடியவில்லை’, ‘சில நாள்களில் வெள்ள நீர் வடிந்துவிடும்...’ -இப்படிப் பல காரணங்களை தமிழக அரசு தரப்பில் அடுக்கிக்கொண்டே போகிறார்கள். ஒட்டுமொத்த மாநகரும் கிழித்துப் போட்டதுபோல கிடக்கிறது. இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையைக் கொண்ட சென்னை மாநகர், ஒவ்வொரு முறை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும்போதும் அங்கு வசிக்கும் மக்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ்நாடும் கதறுகிறது.

இது சண்டிகர் போல திட்டமிட்ட நகரம் கிடையாதுதான். ஆனால், முறையான வடிகால் வசதியைக்கூட செய்ய முடியாமல் உள்ளதை என்ன சொல்ல? இத்தனைக்கும் 2015-ம் ஆண்டு இதே போன்ற பெருமழை வெள்ளத்தைச் சென்னை கண்டுள்ளது; ஆனாலும், ஆண்ட, ஆளும் அரசுகள் விழித்துக்கொள்ளவில்லை.

‘‘கடந்த அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணி நடக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான், ரூ.4,000 கோடியில் பணிகள் செய்துள்ளோம். இதனால்தான், வெள்ளச் சேதம் குறைவாக உள்ளது’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

``தலைநகரமே தத்தளிப்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ரூ.4,000 கோடி செலவு செய்தும் தண்ணீர் ஏன் வடியவில்லை?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, குற்றம் சாட்டுகிறார். இப்படி இரண்டு கட்சிகளும் மாறி, மாறி சேற்றை வாரி இறைத்துக்கொள்வதால், மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

‘‘1,200 கி.மீ தூரத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் வடிவமைப்புச் சரியாக இல்லை, செயல்பாடும் சரியாக இல்லை. உயர்மட்டத்திலிருந்து தாழ் மட்டத்துக்குச் செல்வது போன்று வடிகால் பாதைகள் செல்லவில்லை. அதேபோன்று மழைநீர் வடிகால் பாதைகள் பெரிய கால்வாய்களோடோ, ஆற்றிலோ இணைக்கப்படவில்லை’’ என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தினர் தவற்றைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இனியாவது, பெருமழைக்காலங்களில் வெள்ளநீர் வடிந்து செல்ல, பொதுநல அமைப்புகள், துறைசார்ந்த வல்லுநர்களை இணைத்துக்கொண்டு சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும்; இல்லையேல், பெருநகர சென்னையை யாராலும் காப்பாற்ற முடியாது.

- ஆசிரியர்

கார்ட்டூன்


from Vikatan Latest news https://ift.tt/93otfdg

Post a Comment

0 Comments