சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி விவகாரத்தில், தமிழ்நாடு தி.மு.க அரசும், மத்திய பா.ஜ.க அரசும் ஒன்றையொன்று விமர்சித்துக்கொண்டிருக்கிறது. அதிலும், குறிப்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டை விடக் குறைந்த அளவில் வரி கட்டும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு, வரிப் பகிர்வு, மாநில பேரிடர் நிவாரண நிதி போன்றவற்றை மத்திய அரசு அதிகமாக ஒதுக்குவதாகவும், தமிழ்நாட்டு மிகக் குறைவாக ஒதுக்குவதாகவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
சென்னை, துறைமுகம் தொகுதியில் இன்று மாலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ``கடந்தாண்டு இதே மேடையில் நான் கிறிஸ்தவன் என்று பேசியது பேசு பொருளானது. மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவன். கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். அது மட்டுமல்லாமல், நீங்கள் என்னைக் கிறிஸ்துவன் என்று அழைத்தால் கிறிஸ்தவன், இந்து என்று அழைத்தால் இந்து, முஸ்லிம் என்று அழைத்தால் முஸ்லிம். எனக்கென்று எந்தவொரு சாதியோ, மதமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.
பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் இதைச் சொல்லிக் கொண்டே இருப்பேன். நான் சொல்வதை நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சென்னையில் ஒரே நாளில் 48 சென்டிமீட்டர் வரலாறு காணாத மழை பெய்தது. உங்களுடைய வீடுகள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியிருக்கும். நீங்க எல்லோரும் என் மீது கோபமாக இருந்தீர்கள். ஆனால், நாங்கள் யாரும் வீட்டுக்குள் ஒளிந்து கொள்ளவில்லை. மக்களோடு மக்களாக நின்று நிவாரண பணிகளை மேற்கொண்டோம். மற்றவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில்தான் வருவார்கள்.
நான் பேசுகின்ற ஒவ்வொரு விஷயமும் வெடிகுண்டு வெடித்துக் கொண்டிருக்கிறது என அமைச்சர் சேகர் பாபு சொன்னார். சென்னையில் எவ்வளவு பெரிய வெள்ளம், நிவாரண நிதி வேண்டும் என ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைத்தார். உடனே, ஒன்றிய நிதியமைச்சர், `நீங்கள் நிதி கேட்டவுடன் கொடுப்பதற்கு நாங்கள் என்னை ஏ.டி.எம் இயந்திரமா' என்று சொல்கிறார். அதற்கு, `நாங்கள் என்ன உங்கள் அப்பா வீட்டுப் பணத்தையா கேட்டோம்' என தமிழ்நாட்டு மக்கள் கட்டிய வரிப் பணத்தைக் கேட்டேன். இதிலிருந்து, ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை எப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒன்றிய அரசு எப்போதுமே தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் சேர்த்து 21,700 கோடி ரூபாய் நிதி கேட்டோம். ஆனால் ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அவர்கள் கொடுத்ததாகக் கூறும் 450 கோடி ரூபாய், பேரிடர் வந்தாலும் வரவில்லை என்றாலும் ஒரு மாநிலத்துக்கு கொடுக்க வேண்டிய சென்ற வருடத்துக்கான நிதி. அதைக் கொடுத்துவிட்டு எல்லாம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் 2021-ல் புயல் அடித்த மறுநாளே, ஒன்றிய பிரதமர் தன்னுடைய மாநிலத்துக்குச் சென்று 1,000 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்தார். மேலும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் தனியாக வழங்கினார்.
ஆனால், தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட போது, நாம் கேட்ட நிதியையும் வழங்கவில்லை, தமிழ்நாட்டு பக்கம் அவர்கள் எட்டிக்கூட பார்க்கவும் இல்லை. பெரிய அளவில் பேரிடர் பாதிப்புகளைச் சந்திக்காத, மக்கள் தொகையில் தமிழ்நாட்டைவிட குறைந்த எண்ணிக்கை கொண்ட குஜராத்துக்கு இதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 8,000 கோடி ரூபாய் அளவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் வரி கொடுத்தால், அவர்கள் திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா. இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தமிழ்நாடு 10,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி கொடுத்திருக்கிறது. ஆனால், நமக்கு இந்த ஆண்டு மொத்தமாகவே 900 கோடி ரூபாய் தான் மாநில பேரிடர் நிவாரண நிதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் மத்தியப் பிரதேச மாநிலம் 3,000 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி கட்டியிருக்கிறது. ஆனால், மத்தியப் பிரதேசத்துக்கு 1,000 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாடு 5 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரியாகக் கொடுத்திருக்கிறது. நமக்குத் திருப்பி கிடைத்ததோ வெறும் 2 லட்சம் கோடி ரூபாய்தான். ஆனால், உத்திரப்பிரதேசம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 2 லட்சம் கோடி ரூபாய், அவர்களுக்குத் திருப்பி வரி பகிர்வாக 9 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறது.
இதைத்தான் உங்கள் அப்பா வீட்டு பணத்தையா கேட்டோம் என்று நான் கேட்டேன். இதற்கு, மரியாதைக்குரிய ஒன்றிய அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, உதயநிதிக்கு மரியாதை தெரியவில்லை எனக் கிட்டத்தட்ட 15 நிமிடம் எனக்குப் பாடம் எடுத்திருக்கிறார். நான் மரியாதையாகவே கேட்கிறேன் மரியாதைக்குரிய அமைச்சர் அவர்களே, மரியாதைக்குரிய உங்கள் அப்பா வீட்டுப் பணத்தை நான் கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவாரணத் தொகையை உங்கள் அரசு கொடுத்தாக வேண்டும். தயவுசெய்து நிவாரணத் தொகையை மரியாதையாகக் கொடுங்கள் என மரியாதையாகக் கேட்கிறேன்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Vikatan Latest news https://ift.tt/juIrAni
0 Comments