கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! ஏன் அப்படிச் செய்தான் தெரியுமா?

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலம். ஒருமுறை முக்கியமான ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண முடியாமல் குழப்பத்தில் இருந்தார். அப்போது அவரின் நண்பர் அறைக்குள் நுழைந்தார்.

`குழப்பத்திலும் தவிப்பிலும் இருக்கும் லிங்கனுக்கு ஏதேனும் ஆறுதல் சொல்வோம்’ என்ற எண்ணத்தில் ‘`மிஸ்டர் லிங்கன், கவலைப்படாதீர்கள், இறைவன் உங்கள் பக்கம் இருப்பார்’’ என்றார்.

நிமிர்ந்து நண்பரைப் பார்த்த லிங்கன், சிறு புன்னகையோடு ``டியர் ஃபிரெண்ட்! ஆண்டவர் என் பக்கம் இருக்கவேண்டும் என்பதல்ல என் விருப்பம்; என் ஆண்டவரின் பக்கம் நான் இருக்கவேண்டும்!’’ என்றாராம். இறை நம்பிக்கை குறித்து அவரின் பார்வையைக் கண்டு சிலிர்த்துப்போனாராம் நண்பர்!

சரி, எப்போதும் நாம் ஆண்டவனின் பக்கம் இருக்க என்ன செய்ய வேண்டும்?

`ஆலயத்தில் உள்ள சிலைகளில் கடவுளைப் பார்ப்பவன், பக்தியின் அடிமட்டத்திலேயே நிற்கிறான். அடுத்தவரது துன்பத்தைப் போக்குவதில் கடவுளைப் பார்ப்பவன், ஆகாயம் அளவுக்கு உயர்ந்து நிற்கிறான்!’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஆம்! அருகிலிருப்பவர் துன்பச் சூழலில் இருக்கும்போது, அவரின் துயரைத் துடைக்க எடுக்கும் முயற்சியே உண்மையான வழிபாடு. சகல உயிர்களிடத்தும் இறைவனைக் காணுங்கள் என்றே எல்லா மதங்களும் போதிக்கின்றன.

புனித நூலான பகவத் கீதையின் பெருமையை நாம் எல்லோரும் அறிவோம். பகவத் கீதை போதிப்பது என்ன? கீதை பக்தியை போதிக்கிறது என்பார்கள் சிலர். அது கர்ம யோகத்தை போதிக்கும் நூல் என்பது சிலரின் கருத்தாக இருக்கும். பக்தி, ஞானம், கர்ம மார்க்கம் ஆகிய அனைத்தும் அதில் உண்டு என்பார்கள் ஆன்றோர்கள்.

`கீதை போதிப்பது என்ன?’ இந்தக் கேள்விக்குத் துல்லியமான பதிலை அறிய விரும்பினார் ஒருவர். ஒருநாள் சாது ஒருவரை தரிசித்தவர், அவரிடம் தன்னுடைய கேள்வியைக் கேட்டார்.

அந்த அன்பரிடம் சாது கேட்டார், ``கீதையின் முதல் சுலோக வரி என்ன தெரியுமா?’’

``நீங்கதான் சொல்லணும்.’’

``தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே’' என்ற சாது, ``கீதையின் கடைசி வரியையும் நானே சொல்கிறேன்... `த்ருவா நீதிர் மதிர் மம’ என்று முடியும். நான் சொன்ன கடைசி சுலோகத்தின் கடைசி வார்த்தையையும் முதல் சுலோகத்தின் முதல் வார்த்தையையும் இணைத்தால் கிடைப்பது என்ன?’’

அன்பர் சொன்னார், ``மம தர்ம.’’

``இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?’’

``நீங்கதான் சொல்லணும் சாமி!’’

``உனது உண்மையான தர்மம் என்று பொருள். ஆக, மனிதனுக்கான வாழ்க்கை தர்மத்தை - அறத்தை கீதை போதிக்கிறது’’ என்றார் சாது.

ஆம், மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதே ஞானநூல்களின் வழிகாட்டுதலாக இருக்கிறது.

அறம் சார்ந்த வாழ்க்கை போதும் எனில்... ஆலய வழிபாடுகள், பண்டிகை விழாக்கள், கோயில் முதலான வழிபாட்டுக் கூடங்கள் எதுவும் தேவையில்லையா?

இப்படியான கேள்விகளுக்குப் பெரிய

வர்கள் எளிமையான பல விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். ஒரு கட்டடம் கட்டுவதற்கு சாரம் அமைக்கிறோம். கட்டட வேலை பூர்த்தியான பிறகு அந்தச் சாரம் போன்றவற்றைக் களைந்துவிடுகிறோம் அல்லவா? அப்படித்தான்... நமக்கான தர்மம் - அறம் இதுதான் என்ற மனப்பக்குவத்தை வளரச் செய்வதற்கு வழிபாட்டுக் கூடங்கள், சமயச் சடங்குகள், விழாக்கள், விரதங்கள் போன்றவை உதவி செய்யும்.

`இவையாவும் பக்தியின் படிநிலைகள். நாம் ஒவ்வொன்றாகக் கடந்து இறைவனின் அணுக்கத்தை அடைய முயல வேண்டும்.முதல் படியிலேயே நின்றுவிடக்கூடாது’ என்று அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள். அன்பாலும் அறத்தாலும் இறைவனை வசப்படுத்தலாம் என்பதற்கு புராணத்திலும் இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் நிறைய உதாரணங்கள் உண்டு.

மகாபாரதக் காலம். வனவாசம் முடித்து வந்திருந்தார்கள் பாண்டவர்கள். இந்த நிலையில் கண்ணனைச் சந்தித்தார் தருமபுத்திரரான யுதிஷ்டிரர்.

``வாசுதேவ கிருஷ்ணா! தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன். ஆகவே, எனக்காக நீங்கள் துரியோதனனிடம் பாண்டவர் தூதுவராகச் செல்லவேண்டும். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய பாதி ராஜ்யத்தைக் கேளுங்கள். துரியோதனன் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகளைக் கேளுங்கள். அதுவும் இல்லையென்றால், ஐந்து ஊர்களைக் கேளுங்கள். இல்லையேல் ஐந்து இல்லங்களையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டுங்கள்’’ என்று வேண்டிக்கொண்டார்.

கண்ணன் புன்னகைத்துக்கொண்டார். அதர்மம் அழிந்து தர்மம் நிலைநிறுத்தப்பட வேண்டும் எனில் மாபெரும் யுத்தம் அவசியம் என்று கருதி, காலத்தையும் சூழலையும் யுத்தத்தை நோக்கி நகர்த்தும் சூத்ரதாரியே அவர்தான் என்பதை பாவம் தர்மர் அறிந்திருக்கவில்லை. அதை எண்ணி உள்ளுக்குள் நகைத்தவராக ``தருமபுத்திரரே! எதற்கும் உங்கள் சகோதரர்களிடம் நான் பேசிப் பார்க்கிறேன்’’ என்றார்.

தருமன் ஒப்புக்கொள்ளவே, தருமரின் தம்பிகளைச் சந்திக்க விரைந்தார் கண்ணன். தருமன் கூறியதுபோன்று பீமனும், அர்ஜுனனும், நகுலனும் யுத்தம் நடந்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள். கண்ணன் நிறைவில் சகாதேவனைச் சந்திக்கச் சென்றார்.

அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்துகொண்டிருந்த சகா

தேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து வரவேற்றான்.

‘`சகாதேவா, போர் ஏற்படாமல் தடுக்கும் விதம் உங்களின் தூதுவனாக அஸ்தினாபுரம் செல்லப்போகிறேன். நீ சிறந்த சாஸ்திர வல்லுநன். போரைத் தடுத்து நிறுத்த ஏதேனும் மார்க்கம் இருந்தால் சொல்லேன்!’’ என்றார். சகாதேவன் சிரித்தான். அவனுக்குத் தெரியும் என்ன செய்தாலும் நிகழவுள்ள யுத்தத்தைத் தடுக்க எவராலும் முடியாது என்று. தன்னுடைய ஜோதிட ஞானத்தால் அதை அறிந்திருந்தான்.

எனவே, வேடிக்கை யாகச் சில உபாயங்களைச் சொன்னான்.

``கண்ணா! பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டி

விட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்குத் தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டுவிட்டால் போதும்; போரை நிச்சயம் தடுத்துவிடலாம்!’’

இதைக் கேட்டதும் கண்ணன் பெரிதாகச் சிரித்தார்.

``என்னையே கட்டிப்போட்டுவிட முடியுமா? எங்கே... முடிந்தால் என்னைக் கட்டிப்போடு பார்க்கலாம்..?’’ என்றபடி எண்ணிக்கையில் அதிகமான வடிவங்கள் எடுத்து நின்றான். சகாதேவனின் பார்வைக்கு அண்டபகிரண்டம் எங்கும் கண்ணனின் உருவங்களே தெரிந்தன. இப்படியான வல்லமை பெற்றவனைக் கட்டிப்போடுவது சாத்தியமா?

ஆனாலும் சகாதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் கிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாக தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. ஸ்லோகங்களால் பாடிப் போற்றினான் கண்ணனை. சகாதேவனின் பக்தியும் அன்பும் கண்ணனை ஈர்த்தன!

அவன் வடிவங்கள் யாவும் ஒன்றில் ஒன்றாகக் கலந்து ஒன்றோடொன்று இணைந்து பழையபடி ஓர் உருவான கண்ணன், சகாதேவனின் இதயத்தில் கட்டுண்டார். ‘`சகாதேவா, நீ வென்று

விட்டாய்! அன்பாலும் பக்தியாலும் கடவுளையும் கட்டிப்போட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுகளை அவிழ்த்து விடு!’’ என்றார் கண்ணன்.

சகாதேவனும் அப்படியே செய்ய, `யுத்தத்தில் பாண்டவர் ஐவரையும் காப்பேன்' என்று அவனுக்கு வரம் தந்து விடைபெற்றார் கிருஷ்ண பரமாத்மா!

கண்ணைக் கொடுத்த வேடன் கண்ணப்பனும், தன்னையே அர்ப்பணித்த கோதை ஆண்டாளும், பக்த மீரா போன்றோரும் அன்பின் மிகுதியால் பக்தியில் திளைத்து இறையருள் பெற்றவர்கள். நாமும் அவர்களின் வழியில் இறையருள் பெறுவோம்!

சிலர் இருக்கிறார்கள்... சரியான புரிதல் இல்லாமையால், பக்தியும் கடவுள் நம்பிக்கையும் அவர்களுக்கு வெறும் சம்பிரதாயச் சடங்காகவே மாறிவிடும்!

`கடவுள் பக்தியில் நம்மை அடிச்சுக்க ஆளே கிடையாது' என்று தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தார் ஒருவர். அவருக்குக் குதிரை ஒன்று அன்பளிப்பாகக் கிடைத்தது. அந்தக் குதிரையும் கடவுள் பக்தி மிக்கது என்று கூறினார் அதைக் கொடுத்தவர்.

மட்டுமன்றி, `நன்றி இறைவா’ என்று சொன்னால் அது ஓடத் தொடங்கும். இதே வார்த்தையை மீண்டும் மீண்டும் சொன்னால் அதன் வேகம் அதிகரிக்கும். அதேபோல், `வணக்கம் இறைவா’ என்று கூறினால் நின்றுவிடும். இந்தச் சூட்சுமத்தையும் கடவுள் தெளிவாக விளக்கியிருந்தார்.

மறுநாள் அந்தக் குதிரையில் சவாரி செய்ய நினைத்தார் அந்த அன்பர். கம்பீரமாகக் குதிரையின் மீது ஏறி அமர்ந்தார். குதிரையை அன்பளிப்பாகக் கொடுத்தவர் சொன்னது போல, `நன்றி இறைவா’ என்றார். குதிரை ஓடத் தொடங்கியது. மலைப்புறம் நோக்கி அந்தக் குதிரையைச் செலுத்தினார் அன்பர்.

தொடர்ந்து குதிரையை வேகப்படுத்த எண்ணியவர், `நன்றி இறைவா... நன்றி இறைவா...’ என்று உரக்கக் குரல் கொடுக்க, குதிரை புயல்வேகத்தில் பாய்ந்தது. அன்பர் சவாரியில் மிகவும் மனம் லயித்துப்போனார்.

சிறிது நேரத்தில் அவர் கண் விழித்தபோது, குதிரை ஒரு பாதாளத்தை நோக்கி வேகமாகச் சென்று

கொண்டிருப்பதைக் கண்ட அன்பர் பதைபதைத்துப் போனார். கடிவாளத்தைப் பிடித்து இழுத்தார்; குதிரை நின்றபாடில்லை.

அப்போதுதான் குதிரைக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது. ``வணக்கம் இறைவா'’ என்று மலைதீரமெங்கும் எதிரொலிக்கும்படி உரக்கக் குரல் கொடுத்தார்.

அவ்வளவுதான் சட்டென்று நின்று

விட்டது குதிரை! அது நின்ற இடத்துக்கும் பள்ளத்தாக்குக்கும் ஓர் அடிதான் இடை

வெளி. பேராபத்தில் இருந்து தப்பிவிட்ட அன்பர் பெருமூச்சு விட்டார்.

அதுமட்டுமா? உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்பினார். தன்னையும் அறியாமல் வாய்விட்டு அந்த வார்த்தையைச் சொன்னார்,

``நன்றி இறைவா!’’



from Vikatan Latest news https://ift.tt/cKzW1iI

Post a Comment

0 Comments