`காய்ஞ்சு கெடுக்கும், இல்லைனா பேய்ஞ்சு கெடுக்கும்' என்ற சொலவடை, கரிசல் மண்ணில் வாழும் தெக்கத்தி மக்களுக்குப் பொதுவானது. பெரும்பாலும் காய்ஞ்சே கெடுக்கும். இம்முறை மாறிவிட்டது. ‘‘ஐயய்யோ...பேய்ஞ்சு கெடுத்துருச்சே எங்க சாமீ!'’ என்று இவ்வளவு பேய்மழைப் பெருவெள்ளத்தில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்திருந்தாலும், மழையைச் சபிக்காமல் அழுது அரற்றுகிறார்கள், வானம் பார்த்த பூமியான தூத்துக்குடி மாவட்ட மக்கள். அவர்களிடம் பேசும்போது நம் நெஞ்சின் கண்ணிகள் ஒவ்வொன்றும் அறுந்துவிடுகின்றன!
கனமழை என்பதை அறியாதவர்கள் இம்மாவட்ட மக்கள். `அதி கனமழை' என்ற வானிலை அறிவிப்பு வந்தபோதும், ‘மாரி மழ தண்ணிப் பஞ்சத்த தீர்க்கப்போவுது!' என்று சந்தோஷமாகவே எதிர்கொண்டார்கள். டிசம்பர் 17-ம் தேதி இரவு 7 மணிக்கு லேசான தூறலுடன் தொடங்கிய மழை, 9 மணிக்கு மேல் அருவி போலக் கொட்ட ஆரம்பித்தபோதும் சந்தோஷத்தில் திளைத்தார்கள். ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலையிலும், சமவெளி களிலும் பெய்த பெருமழையில் தாமிரபரணியில் வெள்ளம் பிரவாகம் எடுத்து, இரு கரைகளையும் மூழ்கடித்து, கடல் நோக்கிப் பாய்ந்து வரும் சேதி கேட்டபோதுதான் கலக்கம் வந்தது தூத்துக்குடி மக்களுக்கு!
ஒரு பக்கம் வானம் கிழிந்ததைப்போல மழை கொட்ட... மறுபக்கம் ஓடைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி கிராமங்களைச் சூழ்ந்து தனித் தீவுகளாக்கியது. தூத்துக்குடி நகரத்தின் மேற்குப்பகுதியில் கோரம்பள்ளம் எனும் பெரிய குளம் வெள்ளத்தின் பாரம் தாங்காமல் உடைய... தூத்துக்குடி நகரம் மூழ்கியது.
நகருக்குள் பல பகுதிகளில் நெஞ்சளவுக்குத் தண்ணீர் தேங்கியது. கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளே தண்ணீர் புகுந்ததால் பொருள்கள் பாழாகின. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான சாலைகளில் உடைப்பு ஏற்பட்டுப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஏரல் பெரிய பாலம் உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. ஓட்டப்பிடாரம், கயத்தாறு, விளாத்திகுளம், ஆத்தூர்ப் பகுதிகளில் உள்ள பாலங்கள் உடைந்ததால், 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்தன. வெளி உலகோடு தொடர்பு துண்டிக்கப்பட்ட இந்த கிராமங்களில் நிவாரணப் பணி மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் நான்கு நாள்களாக மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. மொபைல் போன், இணையதள சேவை முற்றிலும் தடைபட்டதால், யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் மக்கள் தவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் சுதாரித்துக்கொண்டு மீட்புப்பணியைத் தொடங்கியது. படகுகள் மூலம் மீட்கப்பட்ட மக்கள் பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள், தேவாலயங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதுவரை நெல்லை மாவட்டத்தில் 12 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேரும் இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்திருக்கின்றனர் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடியில் வெள்ள நீர் வடிந்த பிறகும் இன்னமும் இயல்புநிலை திரும்பவில்லை. பல கிராமங்கள் போர் முடிந்த நிலம் போல சிதைந்து கிடக்கின்றன. மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் ஆழிகுடி, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ளது. விவசாயம், செங்கல்சூளைகளை மட்டுமே நம்பி வாழும் இக்கிராமம் வெள்ளத்தால் உருக்குலைந்து கிடக்கிறது. கிராமத்திற்குள் செல்லும் சாலை சிதைந்துபோயிருந்ததால், குண்டும் குழியுமான சாலையை நடந்தே கடந்து, உள்ளே சென்றோம்.
ஊரின் நுழைவாயிலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாரியப்பன் நம்மிடம் பேசினார்.
``போன ஞாயித்துக்கிழமை (17-ம் தேதி) மத்தியானம் மூணு மணில இருந்தே தூவானம் பெய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. வானம் இருண்டு கெடக்க அரண்டு போய்ட்டேன். இன்னிக்கு அடை மழை பெய்யும்னு கெவுளி சொன்னுச்சு. சாயங்காலம் அஞ்சு மணி இருக்கும். மேய்ச்சலுக்குப் போன ஆடுகளைப் பத்திக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். ஆடுகளை மந்தையில அடைச்சுட்டு காலைக் கழுவிட்டிருந்தேன். முகத்தைத் துடைக்கிறதுக்குள்ள பேய் மழை அடிச்சது. அரை மணி நேரத்துக்குள்ள மழைத் தண்ணி வீட்டு வாசல் வரைக்கும் மசமசன்னு வந்துடுச்சு. ஏழுதெருவுக்கும் போயி தாக்கல் சொல்லலாம்னு ஓடுனேன். `பெருமாள் கோயிலுக்கு வந்துருங்க'ன்னு சொன்னேன். ஆனா, மழைச் சத்தத்துல யாருக்கும் சரியா கேட்கலன்னு நினைக்கேன்.
வீட்டுக்கு வந்து என் பொஞ்சாதியைக் கூட்டிட்டுப் போறதுக்குள்ள வெள்ளம் கழுத்துக்கு அப்பிருச்சு. என்னோட ஆடுக பூராம் அடிச்சிட்டுப் போயிடுச்சு. அதுங்க ஒவ்வொண்ணும் கத்தும்போது `எங்கள காப்பாத்துங்க சாமீ'ன்னு சொல்லுற மாதிரி இருந்துச்சு. நான் பெத்த பிள்ளைகளாத்தான் நெனச்சு வளர்த்தேன். அதுல போன மாசம் ஈத்துல பொறந்த கருப்பன் (கறுப்புநிற ஆட்டுக்குட்டி) கத்திட்டே இருந்தான். ஒரு கையில பொஞ்சாதியவும், தோளுல கருப்பனையும் தூக்கிட்டு கோயிலுக்குப் போயிட்டேன். அதுக்குப் பொறவுதான் ஊர் சனங்க பதறிப் போயி வந்தாங்கய்யா’’ என்று உடல் சிலிர்த்துப்போய்ச் சொன்னார்.
75 வயது முதியவர் மந்திரம், வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை களத்து மேட்டில் காய வைத்துக்கொண்டே நம்மிடம் பேசினார்.
``ஐயா சாமி... என்னன்னு கேக்கிறதுக்கோ, உதவுறதுக்கோ ஆளில்லாத நாதியத்துக் கிடக்கோம்யா. அரசாங்கத்துக்குச் சொல்லி ஏதாவது உதவி செய்யச் சொல்லுங்கய்யா... எத்தனை வீடுங்க இடிஞ்சி விழுந்திருக்குன்னு ஊருக்குள்ள போயிப் பாருங்க'' எனச் சொல்லி விம்மி அழுதவரை ஆறுதல்படுத்தினோம்.
சிதிலமான ஊருக்குள் நாம் சென்று கொண்டிந்தபோது, இடிந்துகிடந்த ஓட்டு வீட்டுக்குள் சிக்கிய ஒருவரை மீட்டுக் கொண்டிருந்தனர். `இடிஞ்ச வீட்டுக்குள்ள என்ன வேலை... நாங்க வராட்டா உன் நிலைமை என்னப்பா?' என ஊர்க்காரர்கள் கோபத்துடன் திட்ட, `ஊரே ஒண்ணா சமைச்சுச் சாப்பிடுறோம். சமையலுக்கு என்னால முடிஞ்ச பணத்தைக் கொடுக்கலாம்னுதான் உண்டியலை எடுக்கப் போனேன்' என அவர் சொன்னதும், அவரை மீட்டவர்களின் கண்களில் கண்ணீர்!
``நான் பொறந்து வளர்ந்ததே இந்த ஊருதான். தாமிரபரணி தண்ணியக் குடிச்சு வளர்ந்தவன் தான். இது மழையால வந்த வெள்ளம் இல்ல தம்பி. குளங்கள் கரை உடைஞ்சு வந்த தண்ணியாலதான் இம்புட்டு பாதிப்பு. அன்னிக்கு ராத்திரி 7 மணி இருக்கும். கடுங்காப்பியைக் குடிச்சிட்டு கயித்துக் கட்டில்ல குறுக்கைச் சாய்ச்சேன். ‘ஆச்சி தாத்தா... வெள்ளம் வந்துக் கிட்டுருக்கு... சீக்கிரம் சூதானமா வாங்க'ன்னு ஊரு மக்க சொன்ன சத்தம் கேட்டுச்சு. அசதியில உறங்குன என் பொஞ்சாதியை எழுப்பி, வீட்டுல இருந்த சொளவை தலைக்குக் கமுத்திட்டு ஓட்டமும் நடையுமா நடந்தோம். இப்படி ஒரு துயரத்தை நாங்க சந்திச்சதில்லய்யா... குருவி சேத்தாப்புல பதனி, சுண்ணாம்புக் குளத்து வண்டல் கலந்து கட்டுன வீடு. மண் வீடுன்னாலும் எனக்கு இது பொன் வீடுய்யா. ஆத்தீ... அத்தனையும் ஒண்ணுமில்லாப் போச்சே!'' எனக் கதறினார் மாயாண்டி.
``எனக்கு 68 வயசு ஆவுது. மாற்றுத்திறனாளி. என் கணவர் செத்து 8 வருஷம் ஆகுது. என் மகனுக்கு 42 வயசு... ஆனா மூளை வளர்ச்சி கெடையாது. இப்படி ஒரு வெள்ளத்தை ஆயுசுக்கும் பார்த்ததில்ல. `படகு வருது... உம் மவன கூட்டிட்டு ஊர் எல்லைக்கு வந்துரு'ன்னு சொன்னாங்க. என்னால நடக்க முடியல. தூங்குன எம்மவன் கன்னத்துல தட்டிப் பார்த்தும் கண் விழிக்கல... என்னாலயும் நடக்க முடியல... ஊரு சனங்கள சொல்லிக் குத்தமில்ல. எங்களக் கூப்பிட்டாங்க. ஆனா, இப்படிப்பட்ட மவன வச்சுக்கிட்டு நான் மட்டும் போக முடியுமாய்யா... வீட்டுல விளக்குல எண்ணெய் இல்ல. காத்தியலுக்கு (திருக்கார்த்திகை) வாங்குன மெழுகுவத்தி இருந்துச்சு. அதை வச்சுதான் சமாளிச்சேன். வெள்ளத்தண்ணி வீட்டு வாசலுக்கு வந்தப்போ மகனை எழுப்பி, அம்மன் கோயிலுக்குப் போனோம். நாய்களோட ஊளைச் சத்தம் கேட்டுக் குலையே நடுங்குச்சு. ரெண்டு நாள் ராத்திரி, பகலா அங்கன சாப்பாடில்லாம கெடந்தோம். மூணா நாள் சாயாங்காலம்தான் ஊரு சனங்க வந்து காப்பாத்துனாங்க. ரெண்டு நாள் ராத்திரி பகல்னு நரகமாப் போச்சுய்யா... நானும் மகனும் செத்துருவோம்னுதான் நினைச்சேன். அந்தச் சப்பாணி மாடசாமி தயவுல பொழைச்சோம்யா!” என்று தானும் மகனும் உயிர் மீண்ட கதையை கண்கள் மிரளச் சொல்லி முடித்தார் பானுமதி.
‘‘என் வீட்டுக்காரரு ஆசையா கட்டுன மண் வீடு இது. எவ்வளவோ மழை வெள்ளத்தைப் பார்த்திருக்கோம். ஆனா, ஊருக்குள்ள தண்ணி வந்தது இல்ல. `வெள்ளம் வரப்போகுது'ன்னு ஊரு சனங்க சொன்னாங்க. அலறியடிச்சு எந்திரிச்சு நூறுநாளு வேலை பாஸ் புக்கு, ரேஷன் கார்டை மட்டும் முந்தியில முடிஞ்சுக்கிட்டு கெளம்பிட்டேன். நாலு நாளு கழிச்சு வந்து பார்த்தா வீடு இடிஞ்சு கெடக்கய்யா!'' எனக் கண்ணீர் சிந்தினார் பாலம்மாள்.
ஆழிகுடி போல தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற் பட்ட கிராமங்கள் ஊழி வெள்ளத்தால் உருக்குலைந்து கிடக்கிறது. வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டுக் கண்ணீரோடு வாழும் இவர்களை மீட்டெடுக்க வேண்டியது அரசின் கடமை.
from Vikatan Latest news https://ift.tt/g63HqZX
0 Comments