தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
‘‘பொறுப்பற்ற பேச்சு. மாநில வரிகளைச் சுருட்டிக்கொண்டு போகிற ஒன்றிய அரசு, தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிதியமைச்சர், தான் வளர்ந்த தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தின் வெளிப்பாடுதான் இந்தப் பேச்சு. ‘ஐந்து ஆண்டுகளில் பெய்யவேண்டிய மொத்த மழையும் 12 மணி நேரத்துக்குள்ளாகக் கொட்டித் தீர்த்திருக்கிறது’ என வானிலை ஆய்வு மையமே சொல்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறார்கள். மக்கள் வெள்ளத்தில் தவித்துக்கொண்டிருந்தபோதுகூட, ஹெலிகாப்டர் முதல் ஒவ்வொன்றையும் நாம் ஒன்றிய அரசிடம் போராடிப் பெறும் நிலையே இருந்தது. அம்மையார் நிர்மலா என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசியிருக்க வேண்டும். சென்னை புயல் வெள்ள பாதிப்புக்கும்கூட வழக்கமாக வழங்கவேண்டிய நிதியைத்தான் கொடுத்திருக்கிறார்கள். பாதிப்புகளுக்கென சிறப்பு நிதி எதுவும் வழங்கவில்லை. தமிழகத்துக்கு எதுவும் செய்யாமலேயே இப்படி வாய்கிழியப் பேசுகிறார்கள். மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்திருக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் பயிர்களை, கால்நடைகளை இழந்து நிற்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியிருக்கிறது. சாலைகள், பாலங்கள் தொடங்கி பல கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கின்றன. இதையெல்லாம் உணர்ந்திருந்தால் அம்மையார் இப்படிப் பேசியிருக்க மாட்டார். இவரைத் தமிழ்ச் சமூகம், இனி இன விரோதியாகவே பார்க்கும்.’’
ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க
‘‘மத்திய அமைச்சர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது... தமிழகத்தில் மட்டுமல்ல, இதுவரை நடந்த பல்வேறு இயற்கைப் பேரிடர்களை, `தேசியப் பேரிடர்’ என்று அறிவிக்கும் நடைமுறையே வழக்கத்தில் இல்லை என்பதுதான் உண்மை. இதுவரை மத்திய அரசு அறிவிக்காத ஒன்றைப் புதிதாக இனி எப்படி அறிவிக்க முடியும்... மாநில அரசு பேரிடராக அறிவிக்க முன்வந்தால், அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. உண்மையில் தி.மு.க அரசு, இந்தப் புயல் வெள்ள பாதிப்புகளை மிகவும் மோசமாகக் கையாண்டிருக்கிறது. இங்கே தென்மாவட்டங்களில் மக்கள் வெள்ள பாதிப்புகளால் துயரத்தில் துடித்துக்கொண்டிருக் கிறார்கள். ஆனால், மாநில முதல்வரோ பொறுப்பற்ற வகையில் டெல்லியில் கூட்டணிக் கூட்டத்துக்குச் செல்கிறார். ஆனால், அந்தச் சமயத்தில்கூட மத்திய அமைச்சர்கள் அனைவரும் தமிழக தென்மாவட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து கவனித்துவந்தனர். கடற்படை, விமானப்படை, தேசியப் பேரிடர் மீட்புக்குழு என்று மக்களைக் காப்பாற்ற என்னென்ன தேவையோ அவை அத்தனையையும் உடனுக்குடன் செய்து கொடுத்துக்கொண்டிருந்தனர். வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய குழு வந்துவிட்டது. இந்த விவகாரத்தில் மக்கள் தி.மு.க அரசுமீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே, இந்த விவகாரத்தை மடைமாற்ற தி.மு.க., மத்திய பா.ஜ.க அரசைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறது!’”
from Vikatan Latest news https://ift.tt/hFgU97z
0 Comments