விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ராக்காச்சி அம்மன் கோயில். இந்த கோயிலுக்கு அருகே உள்ள ஆற்று ஓடையில் தொடர் கனமழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் வார விடுமுறையையொட்டி நேற்று முந்தினம் மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அந்த வேளையில், விருதுநகர் சைபர் கிரைம் குற்றப்பிரிவில் காவலராக பணியாற்றும் சாத்தூர் செவல்பட்டியை சேர்ந்த டேவிட் சுதர்சன் ராஜா (வயது 38) என்பவர், அவரின் சகோதரர் மற்றும் நண்பர்களுடன் நீரோடையில் குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, நீரோடையில் பள்ளம் மேடு தெரியாமல் கால் வைத்ததில் கால்இடறி டேவிட் சுதர்சன் ராஜா பாறையின் மீது மோதியுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டு ரத்தம் வெளியேறியிருக்கிறது. இதனால் பதற்றமடைந்த நண்பர்கள், சுதர்சன் ராஜாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதிக ரத்தப்போக்கின் காரணமாக அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சுதர்சன் ராஜாவின் உடலை மீட்டு பாறையில் வைத்து விட்டு, உதவிக்காக தெரிந்தவர்களை அழைப்பதற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், காட்டுப்பகுதிக்குள் சிக்னல் கிடைக்காததால் உடன் வந்தவர்களில் ஒருவரை மட்டும் பாதுகாப்பிற்கு அமரவைத்துவிட்டு மம்சாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்வதற்காக மற்றவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஆற்று ஓடைப்பகுதியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாறையில் கிடத்தி வைத்திருந்த காவலர் டேவிட் சுதர்சன் ராஜாவின் உடல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினரும், தீயனைப்பு மீட்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காவலரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றுவழித்தடத்தில் உள்ள கரையோரப்பகுதி, காட்டு நீர் வழிப்பாதைகளில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் காவலர் டேவிட் சுதர்சன் ராஜாவின் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்றும் காவலரின் உடலை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் காவலர் டேவிட் சுதர்சன் ராஜாவின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து அவரின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றனர். இந்த சம்பவம் குறித்து மம்சாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Vikatan Latest news https://ift.tt/hbcUX7j
0 Comments