Doctor Vikatan: சிங்கப்பூர், கேரளா, தமிழகத்தில் கொரோனா பரவல்... பழைய கதை திரும்புகிறதா?

Doctor Vikatan: 2019-20-ல் சிங்கப்பூரில்தான் முதலில் கொரோனா தொற்று ஆரம்பமானது. அடுத்து இந்தியாவில் கேரளாவில் அதிகரித்தது. மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது மீண்டும் சிங்கப்பூரிலும் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் புதியவகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகளில் பார்க்கிறோம்.  இது மீண்டும் அச்சுறுத்தலாக மாற வாய்ப்பு உண்டா.... ஆரம்பத்திலேயே தற்காத்துக்கொள்ள வழிகள் உண்டா? 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி

தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி

கொரோனா தொற்றானது முற்றிலும் நம்மைவிட்டு நீங்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துகொண்டிருக்கிறது.  இப்போது லேட்டஸ்ட்டாக சிங்கப்பூரில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதை அடுத்து, இந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் தொற்று எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவதைக் கேள்விப்படுகிறோம்.

எந்தவகை வேரியன்ட் பரவுகிறது, அதன் பரவும் தன்மை, அதன் குணநலன்கள்  ஆகியவற்றை வைத்தே அதன் தீவிரத்தை கணிக்க முடியும். அப்படிப் பார்க்கும்போது இப்போது பரவிக்கொண்டிருக்கும் ஜேஎன் 1 வைரஸானது ஒமிக்ரானின் துணைத் திரிபுதான். இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய திரிபு டெல்டா. அதற்கடுத்து பரவியது ஒமிக்ரான்.

தொடர்ந்து அதன் துணை வகைகள்தான் பரவிக்கொண்டிருந்தன. இதுவும் சரி, இதற்கு முன் பரவிய பிஏ 2.86 வகையும் சரி, ஒமிக்ரானின் துணைத் திரிபுகள்தான். அந்த வகையில் ஜேஎன் 1-ன் தன்மையை உலக சுகாதார நிறுவனமும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களும் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கின்றன.

கோவிட்-19 தடுப்பூசி

ஒவ்வொரு புதிய திரிபு பரவும்போது அதன் பரவும் தன்மை, நோயைத் தீவிரமாக்கும் தன்மை, இம்யூன் எஸ்கேப் ஆகியவை கண்காணிக்கப்படும். இவற்றில் இம்யூன் எஸ்கேப் என்பது ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் குறிப்பிட்ட அந்த வைரஸானது நோய்ப் பரவலை ஏற்படுத்துமா என்று அறிவது.

ஜேஎன் 1 கொரோனா திரிபானது எளிதில் பரவக்கூடிய தன்மை கொண்டதாக இருந்தாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை என்றே சொல்லப்படுகிறது. பலருக்கும் ஒருநாள் காய்ச்சலோடு குணமாகிவிடுகிறது. சளி, காய்ச்சல், உடல்வலி போன்றவற்றோடு கூடுதலாக இதில் பலரும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவதும் தெரிகிறது.

சளி

இரண்டு, மூன்று விஷயங்களைப் பொறுத்து இதன் இம்யூன் எஸ்கேப் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.  தொற்றுக்குள்ளானவர்களின் வயது முக்கியம். அந்த வகையில் குழந்தைகளும் முதியோர்களும் பாதிக்கப்படலாம். ஏற்கெனவே இணைநோய்கள் உள்ளவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஒரு வருடத்துக்கு மேலானவர்கள் போன்றோருக்கு தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கலாம்.

அதே சமயம் முந்தைய திரிபுகள் அளவுக்கு இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை. தீவிர பாதிப்பை ஏற்படுத்தாத திரிபுதான் இது என்றாலும் மேற்குறிப்பிட்ட ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம். மழை மற்றும் குளிர்காலம் என்பதால் எந்தவொரு தொற்றும் எளிதில் பரவும் சூழலில் இருக்கிறோம்.

எனவே அறிகுறிகள் வந்தால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மாஸ்க் அணிவது, மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்ப்பது, கைகளைக் கழுவுவது போன்றவற்றை எப்போதும்போல பின்பற்ற வேண்டியது அவசியம்.

முகக்கவசம்

அமெரிக்கா போன்ற நாடுகளில் வைரஸ் பரவலுக்கேற்ப தடுப்பூசிகளை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்கள். தவிர ரிஸ்க் பிரிவில் உள்ளவர்களை பூஸ்டர் டோஸ் போடவும் அறிவுறுத்துகிறார்கள். நம் நாட்டிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டி வரலாம். ஆனால் அரசு தரப்பில் இன்னும் அதற்கான பரிந்துரைகள் வரவில்லை. எனவே இது குறித்து பயப்படாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவதும்தான் இப்போதைக்கு அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Vikatan Latest news https://ift.tt/0oRF5iD

Post a Comment

0 Comments