2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அ.தி.மு.க தலைமையில் சில கட்சிகள் மற்றும், பா.ஜ.க தலைமையிலான கட்சிகள் போட்டியிடுவதற்கான சூழல் தற்போது நிலவுவதால், மும்முனை போட்டிக்கான வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இதனைத் தவிர்த்து நாம் தமிழர் கட்சியும் வழக்கம்போல் தனித்துக் களம் காண உள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தஞ்சாவூரைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த ரேஸில் முன்னணியில் இருப்பது யார் என தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
சிட்டிங் எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தொழிலதிபரும், மாநில வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவருமான பழஞ்சூர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி, மன்னார்குடி நகரச் செயலாளரான வீரா.கணேசன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் எப்படியும் சீட் பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் தலைமையில் காய் நகர்த்தி வருகின்றனராம்.
இதற்கிடையில் தி.மு.க கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சியும் தன் பங்குக்கு தீவிரமாக முயன்று வருகிறது. ஒரு வேளை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் சீனியரான வழக்கறிஞர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், கிருஷ்ணசாமி வாண்டையார் உள்ளிட்டோர் சீட்டைக் கைபற்றும் ரேஸில் வேகம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி பழனிமாணிக்கம் தற்போது திமுக வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து தி.மு.க வட்டத்தில் பேசினோம், ``காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான தொகுதி என அறியப்பட்ட தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி, பின்னாளில் தி.மு.க-வின் கோட்டையாக மாறிப்போனது. 2014-ல் நடந்த தேர்தலைத் தவிர தொடர்ந்து ஒன்பது முறை பழனிமாணிக்கம் போட்டியிட்டு வருகிறார். இந்த முறை சீட் கிடைத்தால், பத்தாவது முறையாக போட்டியிடக்கூடியவர் என்ற பெயரை பெறுவார்.
கட்சியில் யாரையும் அனுசரிப்பதில்லை, பண்ணையார் தோரணையில் செயல்படுவார் என இவர்மீது தி.மு.க-வினரே விமர்சனங்கள் வைக்கின்றனர். ஆனாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் எதிர்ப்புகளை லாவகமாக கையாண்டு அனைவரையும் அரவணைக்கக்கூடிய திறன் படைத்தவர் எனவும் சொல்கின்றனர். அண்மையில் சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பழனிமாணிக்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமியின் பெயர்கள் பலமாக உச்சரிக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் செலவு செய்வதற்கு பழனிமாணிக்கத்தை விட்டால் வேறு ஆளில்லை எனவும் பேசப்பட்டுள்ளது. இது போன்ற தகவலை பழனிமாணிக்கம் தரப்பினர் திட்டமிட்டு பரப்புவதாகவும் எதிர் முகாமில் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.
அமைச்சர் கே.என் நேருக்கு நெருக்கமானவர் என அறியப்பட்ட பழஞ்சூர் செல்வம், செல்வந்தர். அதனால் தேர்தல் செலவுக்கு அஞ்ச மாட்டார். கடந்த சில தேர்தல்களாக தொடர்ந்து சீட் கேட்டு வரும் அவருக்காக நேருவே ஸ்டாலினிடம் மெனக்கெட்டு பேசுவதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
உதயநிதி தரப்பு, மகேஷ் கிருஷ்ணசாமியை டிக் அடிக்கும் மூடில் இருப்பதாக தெரிகிறது. அவரால் பெரிய தொகை செலவு செய்ய முடியாது என்றும் கட்சிதான் செலவு செய்ய வேண்டும் போன்ற கருத்துகளும் அப்போது எழுந்துள்ளன. தற்போது இந்த ரேஸில் உள்ளவர்களில் பழனிமாணிக்கம் உற்சாகமாகக் காணப்படுகிறார். இப்போதைக்கு வெற்றி பெறுவது என்பதை அவசியமாக கருதுகிறது தி.மு.க தலைமை. எனவே ரிஸ்க் எடுக்காமல் பழனிமாணிக்கத்திற்கே சீட் கொடுக்கலாமா எனவும் யோசிப்பதாக பேசப்படுகிறது.
அப்படி நடந்தால் பத்தாவது முறையாக தஞ்சாவூரில் போட்டியிடுபவர் என்ற பெயரைப் பெறுவார் பழனிமாணிக்கம்.” என்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்... அரசியல் சதுரங்கத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news https://ift.tt/0YtDqdJ
0 Comments