"நாட்டைக் கொள்ளையடிக்க விடமாட்டேன்" என்ற பிரதமர் மோடியின் கருத்து? - ஒன் பை டூ

இனியன் ராபர்ட், மாநிலச் செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்.

“வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதையே பிரதமர் வழக்கமாக வைத்திருக்கிறார். கொரோனா பேரிடர் காலத்தில் உருவாக்கப்பட்ட பி.எம்.கேர் நிதி குறித்தும், அந்த நிதி செலவுசெய்யப்பட்டது குறித்தும் இதுவரை இந்த அரசு ஏதாவது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறதா... இரண்டாவதாக இதுவரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 95 சதவிகிதத் தேர்தல் பத்திரங்கள் பா.ஜ.க-வுக்குத்தான் வந்திருப்பதாகத் தெரியவருகிறது. அந்த நிதியை பா.ஜ.க எப்படிச் செலவு செய்துவருகிறது என்று சொல்ல முடியுமா... சி.ஏ.ஜி அறிக்கையில், 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ஒரு வழக்குகூடத் தொடரவில்லை. அப்படியென்றால், அந்தக் குற்றச்சாட்டு உண்மையென்று எடுத்துக்கொள்ளலாமா... இப்படி, இவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுள்ள ஒரு கட்சி, ஊழல் குறித்துப் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. அதேபோல, தேர்தல் வரும் ஒவ்வொரு சமயத்திலும் பா.ஜ.க பிரதானமாகக் கையிலெடுக்கும் ஒரு விஷயம் ஊழல், ராணுவப் பாதுகாப்பு. 2014-ம் ஆண்டு தேர்தலிலும் இதே மோடிதான் ‘ஊழல் நடந்திருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் அனைத்து கறுப்புப் பணத்தையும் மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவருவோம்’ என்று மேடைக்கு மேடை பேசினார். இப்போது 10 வருடங்கள் கழித்தும் அதையே திரும்பச் சொல்கிறார். இந்தப் பத்து ஆண்டுகளில் மீட்கப்பட்ட கறுப்புப் பணத்தின் மதிப்பை அரசால் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா... இன்னும் பா.ஜ.க சொல்லும் பொய் வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை!”

ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க.

“உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். சோனியாவும் ராகுலும் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் என்ன செய்தார்கள் என்பது ஊரறிந்த உண்மை. அதேபோல, காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல், சவப்பெட்டி ஊழல் என காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இனி நாம்தான் ஆட்சிப் பொறுப்பில் இருப்போம். செய்த ஊழல்கள் எதுவும் வெளியே வராது என்று பகல் கனவு கண்டார்கள். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் பொன்முடி எப்போதோ செய்த தவறு... இன்று நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்கிறது அல்லவா... அதேபோல தவறு செய்தவர்கள், தங்கள் கர்மாவைக் கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும். இன்றுவரை பா.ஜ.க ஆட்சிமீது ஓர் ஊழல் குற்றச்சாட்டைக்கூட சொல்லிவிட முடியாது. பண மதிப்பிழப்பு கொண்டுவந்த சமயத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. இன்று 10-வது இடத்திலிருந்த நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் பொருளாதாரம் 3-வது இடத்தை நோக்கி முன்னேறும். இவையனைத்துமே பா.ஜ.க அரசு கொண்டுவந்த புதிய பல சட்ட திட்டங்களின் மூலமாகவும், ஊழலற்ற நிர்வாகத்தின் மூலமாகவே நடக்கின்றன. மக்கள் இனி ஒருபோதும் ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்கப்போவதில்லை. அடுத்த முறையும் பா.ஜ.க-தான் ஆட்சிப் பொறுப்புக்கு வரும். முன்பு ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை நிச்சயம்!”



from Vikatan Latest news https://ift.tt/jf4w5N0

Post a Comment

0 Comments