``இந்தியா கூட்டணியில் கருத்து முரண் வந்துபோவது பற்றி கவலையில்லை” - திருமாவளவன் ஓப்பன் டாக்

``40 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெல்லாது என்கிறாரே மம்தா. இந்தியா கூட்டணியில் என்னதான் நடக்கிறது?”

``தேசியக் கட்சியின் தலைமையில் உருவான கூட்டணியாக ‘இந்தியா கூட்டணி’யைப் பார்க்கவில்லை. மாநில கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொது செயல்திட்டத்தை முன்வைத்து தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வை ஆட்சிக்கு வராமல் தடுக்கிற யுக்திகளை வகுக்கிற கூட்டணியாகத்தான் இந்தியா கூட்டணி இருக்கிறது. தொகுதி பங்கீடு செய்வதில் மாநிலத்துக்கு மாநிலம் பிரச்னை இருக்கும். காங்கிரஸோடு சில மாநிலங்களில் பிரச்னைகள் எழுந்தன. அதுதான் மேற்கு வங்கத்திலும் நடக்கிறது. தேர்தலுக்குப் பிறகு யார் வெற்றிபெற்றாலும் அது பா.ஜ.க-வுக்கு எதிரானதாக அமைய வேண்டும். அதுவே இந்தியா கூட்டணியின் ஒற்றை குறிக்கோள். எனவே கருத்து முரண் வந்துபோவது பற்றி கவலையில்லை. மம்தா, இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறார். பா.ஜ.க-வை இந்தியா கூட்டணி உறுதியாக வீழ்த்தும்!”

அமித் ஷா, மோடி

``பா.ஜ.க-வோ, காங்கிரஸோ... மத்திய ஆட்சிப்பொறுப்பில் யார் வந்தாலும் மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டு விவகாரங்களில், பாரபட்சம் காட்டப்படுவதாக விமர்சனம் உள்ளதே?”

`இந்த விமர்சனம் சரிதான். மாநிலக் கட்சிகள், ஐக்கிய முன்னணியாக தங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வதே இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு. எனவே, நிதிப் பங்கீடு பிரச்னையின்போது, எல்லா மாநிலங்களிலும் மாநில கட்சிகள் ஒற்றுமையாக நின்று குரல்கொடுக்க வேண்டும். தேசிய கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன. எதிர்காலத்தில் மாநிலக் கட்சிகளெல்லாம் சேர்ந்துதான் ஆட்சியமைக்க முடியும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதிலிருந்து மாநில உணர்வுகள் மேலோங்கியுள்ளன. மொழிவாரி உரிமைகள் பெரிய குரலாக ஒலிக்கிறது. மாநிலக் கட்சிகள் வலுப்பெறுகிறது; மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய இடத்துக்கும் ஆட்சி அதிகாரத்துக்குமே வரலாம். அந்த அடிப்படையில், மாநில அரசுகளை புறக்கணிக்கக்கூடிய அரசு பா.ஜ.க-வாக இருந்தாலும் காங்கிரஸாக இருந்தாலும், மாநில உரிமைகளுக்காக குரல்கொடுக்க, மாநில கட்சிகளின் கூட்டமைப்பு வேண்டும்!”

டெல்லியில் சித்தராமையா போராட்டம்...

``இந்த முன்னெடுப்பை காங்கிரஸ், பா.ஜ.க விரும்ப மாட்டார்களே?”

``கட்டாயம் விரும்பமாட்டார்கள். இந்த முரண்களையெல்லாம் கடந்துதான் ஐக்கியமாக வேண்டியுள்ளது. ஒவ்வொரு பிரச்னையின்போதும் வெவ்வேறு அணிகள் உருவாகும். மாநில உரிமைகள் என்கிறபோது தேசியக் கட்சிகளை தவிர்த்துவிட்டுத்தான் மாநில கட்சிகள் ஒன்று சேர முடியும். தேசிய கட்சிகளுக்கிடையேயான முரண்பாடு என்றால், பா.ஜ.க-வை தனிமைப்படுத்திவிட்டு எல்லோரும் காங்கிரஸோடு நின்றாக வேண்டும்!”

‘‘எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா விருது’ அறிவித்திருக்கிறதே மத்திய அரசு?’’

‘‘சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை வளர்த்து, மண்டல் பரிந்துரையின் அடிப்படையில் ஓபிசி சமூகத்தினருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து, விபி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவரும் பாபர் மசூதி இடிப்புக்கான இஸ்லாமிய வெறுப்பை பரப்பியவரும் அத்வானிதான். அப்படிப்பட்டவருக்கு ஓ.பி.சி வாக்குகளை குறிவைத்து பாரத் ரத்னா விருதை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்கு வித்திட்ட வி.பி சிங்கிற்கு பாரத் ரத்னா தர வேண்டும். அத்வானிக்கு கொடுத்தது தவறென நாடாளுமன்றத்திலேயே பேசினேன். மேலும் சமூக நீதி காவலர்களான பெரியாருக்கும் கன்ஷிராமுக்கும் பாரத் ரத்னா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறேன்.”  

அத்வானி

``பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் எதிரான அரசியலையே விஜய் முன்னெடுப்பார் என த.வெ.க-வின் செய்தி தொடர்பாளர்கள் பேசிவருகிறார்களே... சாதிப்பாரா விஜய்?”

``ஊழலையும் மத வாதத்தையும் எதிர்ப்போம் என்றுதான் அவர்கொடுத்த அறிக்கையில் உள்ளது. அதைவைத்து செய்தி தொடர்பாளர்கள் அப்படி பேசிவரலாம். இரு கட்சிக்கு எதிராக அரசியல் செய்வோம் என்பதைவிட, மக்களுக்கு ஆதரவாக வேலை செய்வோம் என்பதுதான் பாஸிட்டிவான அணுகுமுறை. எனவே மக்களுக்கு தொண்டு செய்ய யாரும் வரலாம். எந்த காலத்திலும் வரலாம்!’’

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/BsErpnl

Post a Comment

0 Comments