”மோடி என் பழைய காலத்து நண்பர்; மோசமான மனிதரா... இல்லை; ஆனால்..!”- தஞ்சை கூட்டத்தில் டி.ஆர்.பாலு

தஞ்சாவூர் திலகர் திடலில் தி.மு.க சார்பில் `உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை மத்திய மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான துரை. சந்திரசேகரன், மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் அமைச்சர் அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா, எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் கூட்டத்தில் டி.ஆர்.பாலு

கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது, ``மோடி என்ன தவறு செய்தார், மோசமான மனிதரா என்றால், இல்லை. மோடி என்னுடைய பழைய காலத்து நண்பர். நான் அமைச்சராக இருந்த போது குஜராத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் இரவு வரை இருந்து பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களை கையெழுத்து போட்டு வாங்கி கொண்டு சென்றார். அவர் எதிர்க்கட்சிதான் என்றாலும் ஆளும்கட்சியில் இருந்த நான் செய்து கொடுத்தேன். இன்றைக்கும் அந்த நன்றியோடு இருக்கிறார். நாம் கேட்டதை அவர் இல்லை என்று சொன்னதற்காக மோடியை நன்றி இல்லாதவர் என சொல்லிவிட முடியாது. ஏன் என்றால் அவர் பிரதமர். மறுநாள் என்னை அவர் வீட்டுக்கு டிபன் சாப்பிட அழைத்தார். அப்பவே என்னுடைய நாடு என குஜராத்தை குறிப்பிட்டார். என்னுடைய நண்பர் அப்படி இருப்பது பெருமைக்குரியது தான். அவர் மாமனிதன், ரொம்ப நல்லவர் தான்.

அதற்காக நான் எப்படி வருத்தபடாமல் இருக்க முடியும். என்னுடைய மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டுகின்ற நிதியை தரவில்லை என்று சொன்னால் நான் எப்படி கேட்காமல் இருக்க முடியும். கேட்கத்தான் செய்வோம். அவர் சொன்ன உறுதி மொழியை நிறைவேற்றவில்லை என சொல்வதில் எனக்கு என்ன தயக்கம். மோடியை விட என்னுடைய மாநிலம் தான் எனக்கு முக்கியம். பிரதமர் மோடி அளித்த உறுதிமொழி எதையும் நிறைவேற்றவில்லை. அவர் பொய்யை சொல்லி வருகிறார்.

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரைக்கூட்டம்

வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டுக்கொண்டு வந்து, `ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன்’ என்றார். `ஒரு ஆண்டில் 2 கோடி பேருக்கு வேலை வழங்குவேன்’ என்றார். 10 ஆண்டு ஆகியும் இன்னும் வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. விலைவாசியை கட்டுப்படுத்துவேன் என்றார்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பேன் என்றார்கள். ஆனால் குறைக்கவில்லை. சமையல் எரிவாயு விலை உயர்ந்து விட்டது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தருவோம் என்றார்கள். ஆனால் கொடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் இன்னும் போராட்டம் நடத்துகிறார்கள். இப்படி கொடுத்த உறுதிமொழி எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 3 வழித்தடங்களுக்கு நிதி ஒதுக்குவோம் என்றார்கள். ஒதுக்கவில்லை. தமிழகத்தை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணிக்கிறது. வஞ்சிக்கிறது. இதனை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதே போன்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. வர இருக்கும் தேர்தலிலும் உதயநிதி ஒற்றை செங்கல்லை காட்டி பிரசாரம் செய்து வெற்றிப்பெறுவார். தமிழகம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் வெள்ள நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. வெள்ள நிவாரணம் தொடர்பாக நான் பிரதமர், உள்துறை மந்திரியை சந்தித்தும் இன்னும் வழங்கப்படவில்லை.

கடந்த 2019-ம்ஆண்டில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், அப்பலவீனத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க வெறும் 37 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி வெற்றி பெற்றது. அதனால்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறினார். இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இதிலிருந்து எத்தனை பேர் விலகிச் சென்றாலும், இந்தியா கூட்டணியிடம் தான் வாக்கு வங்கி உள்ளது.

வெள்ள நிவாரணம் கோரி நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது, தனது துறைக்கு தொடர்பில்லாத மத்திய மந்திரி எல்.முருகன் இடையூறு செய்யும் நோக்கில் குறுக்கே பேசினார். அதனால், ஒன்றுமே தெரியாத நீங்கள் உட்காருங்கள் எனக் கூறினேன். சாதி, மதம், நிறம் எதுவும் எங்கள் இயக்கத்துக்கு தெரியாது. அனைத்து சமயத்தினரும், சாதியினரும் எங்களுக்கு வேண்டியவர்கள்தான். என்னை சாதி பார்த்து பேசியதாகக் கூறியது நியாயமா? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கார்ப்பரேட் நிதி 33 சதவீதம் வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 22 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு சதவீதத்துக்கு ரூ. 50 ஆயிரம் கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11 சதவீதத்துக்கு எவ்வளவு இழப்பாகியுள்ளது என்பதைச் சிந்தித்து பார்க்க வேண்டும். அவ்வளவும் பெரிய முதலாளிகளுக்கு இந்த அரசு சலுகை செய்துள்ளது.

டி.ஆர்.பாலு

தமிழகத்தில் தி.மு.க.வின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா நிவாரணம், மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண்கள் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களுடன் முதல்வர், இலவச பஸ் பயணம், வெள்ள நிவாரணம் என இதுவரை 4 கோடியே 81 லட்சத்து 31 ஆயிரத்து 451 பேர் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 20 லட்சம் பேரில் இதுவரை 77 சதவீதம் பேர் பயனடைந்துள்ளனர்” என்றார்.

இதனிடையே, மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நடக்கின்ற கூட்டத்திற்கு கூட தி.மு.க நிர்வாகிகள் பெருமளவில் கூட்டத்தை திரட்டவில்லை என கட்சியினர் சிலர் முணுமுணுத்தனர். கூட்டத்தில் காலி இருக்கைகள் தென்பட்டதே இந்த முணுமுணுப்புக்கு காரணம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/V0RSZtv

Post a Comment

0 Comments